புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமத்து சமையல் மூலம் யூடியூப்பில் பிரபலமான முதியவர் தலைமையிலான சமையல் குழுவினரை தமிழகம் வந்தபோது சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுடன் சமையல் செய்து உணவருந்தி மகிழ்ந்தார். தமிழக அரசியலை ஒரு கைபார்க்க களமிறங்கியுள்ள ராகுலின் நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. தமிழக கிராமத்து பாரம்பரியப்படி அம்மியில் மஞ்சள் அரைத்து அசத்தலாக ஆரோக்கியமாக வகை வகையான உணவுகளை சமைத்து அதனை யூடியூப்பில் வெளியிட்டு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பிரபலமானவர்கள் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர்..! புதுக்கோட்டை மாவட்டம், சின்ன வீரமங்கலம் கிராமத்தில் இருந்து யூடியூப்பிற்குள் நுழைந்த இந்த சமையல் குழுவினர் குறுகிய காலத்தில் தங்கள் பாரம்பரிய சமையலை பிரமாண்டமாக தயாரித்து உணவுப் பிரியர்களை இச் கொட்டவைத்துள்ளனர். அந்தவகையில் தன்னை கவர்ந்த இந்த சமையல் குழுவினரை நேரடியாக சென்று பார்த்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவர்களுடன் சமையல் கலையை நேரடியாக கண்டு வியந்துள்ளார். காளான் பிரியாணி தயார் செய்த இந்த குழுவினருடன் தன் பங்கிற்கு ராகுலும் இணைய அந்த இடமே அதகளமானது. ராகுலின் ஆங்கிலத்தை அருகில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தார் எம்.பி. ஜோதிமணி .! தங்கள் சமையல் கலையை உலகமெங்கும் எடுத்துச்சென்று சமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த குழுவினரிடம், சிகாகோவில் உள்ள தனது நண்பர் மூலம் உதவுவதாக உறுதி அளித்தார் ராகுல் காந்தி..! அதே போல இந்த சமையல் கலையை கர்னாடகம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார் அவர்களுடன் அமர்ந்து காளான் பிரியாணியை ருசித்த ராகுல், மனம் விட்டு உரையாடிய படியே காளான் பிரியாணி ரொம்ப நல்லாயிருக்கு என்று தமிழில் பாராட்டினார் அவர்களிடம் இருந்து விடை பெறுவதற்கு முன்னதாக அடுத்த முறை வரும் போது தனக்கு ஈசல் சமைத்து தருவீர்களா? என உரிமையோடு கேட்டார் அந்த கிராமத்து சமையல் கலைஞர்களை பாராட்டியதோடு சமைத்த உணவுகளை ஏழை எளியோருக்கு கொடுத்து உதவுவதையும் வெகுவாக பாராட்டினார் ராகுல் காந்தி..! அதே போல பிரச்சாரத்தின் நடுவே தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட பதின்பருவ சிறுமிக்கு கைகொடுத்து மேலே தூக்கிய ராகுல், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் தமிழகத்தில் ராகுலின் இந்த பயணம் காங்கிரஸின் இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்துகிறதோ இல்லையோ.. ராகுலுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விடும் என்பது மட்டும் திண்ணம்..!
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments