மதுரை அருகே கர்ப்பிணியான 13 வயது சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியான நிலையில் அவரது தாய்க்கும், தாயின் ரகசிய காதலனுக்கும் எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கு உதாரணமாக மாறிய கொடுமையான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. கேரளாவில் வேலை பார்த்தபோது, கணவனை இழந்து வாழும் 2 பெண் குழந்தைகளின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 9 வருடங்களாக அந்த பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் கண்டித்ததால், ராமமூர்த்தி அந்த பெண்ணையும், அவளது இருமகள்களையும் சொந்த ஊரான டீ கல்லுப்பட்டி அடுத்த வன்னிவேலம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட அப்பெண்ணின் இளைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது 13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம் என தெரியவந்தது. மகளிடம் கர்ப்பத்திற்கு காரணம் யார் ? என பல முறை வற்புறுத்தி கேட்ட பின்னர், சிறுமி சிறிது தயக்கத்துடன் தனது கர்ப்பத்துக்கு காரணம், வளர்ப்புத் தந்தை ராமமூர்த்தி எனக் கூறி திடுக்கிடவைத்தார். இதையடுத்து புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் ராமமூர்த்தியை பிடித்து விசாரித்தனர். இதில், தனது தாய் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி ராமமூர்த்தி இந்த கொடுமையை தொடர்ச்சியாக செய்து வந்ததாகவும், வெளியில் சொன்னால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என்று மிரட்டியதால் பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கொடூரன் ராமமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அம்பலமானது. கர்ப்பமான அந்த சிறுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை ராமமூர்த்தி ஆகியோரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்தபோது அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. ராமமூர்த்தியிடம் இருந்து தாயுக்கும் மகளுக்கும் எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது தெரியவந்ததால், அவன் மீது அந்த கிராமத்து மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தந்தையாக அச்சிறுமியை வளர்த்து ஆளாக்க வேண்டியவரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது மனவேதனை அளிப்பதாகவும் ராமமூர்த்திக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments