பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரின் முடிவு வெளியாகாத நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய தமிழக அரசு புதிய விண்ணப்பம் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒருவாரத்தில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ஏழு பேரை விடுவிக்கும் படி தமது கோரிக்கையை முன்வைத்தார். உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஏழு நாள் அவகாசம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், சட்டமன்ற நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ள போதும் ஆளுநருக்கு நிராகரிக்கும் உரிமை உண்டு என்றும் சில முன்னாள் ஆளுநர்கள் சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு முன்னுதாரணமான நீதிமன்ற தீர்ப்புகளும் அலசப்படுகின்றன. இந்நிலையில் ஆளுநரிடமிருந்து பதில் ஏதும் வராது போனாலோ அல்லது ஏழு பேரின் விடுதலையை ஆளுநர் நிராகரித்தாலோ மீண்டும் மத்திய அரசிடம் புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments