Ticker

6/recent/ticker-posts

Ad Code

டெல்லி வன்முறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் காயம்

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 180 போலீசார் காயமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.3 வழித்தடங்களில் நேற்று பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்த நிலையில், அனுமதியில்லாத பல சாலைகளிலும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டிராக்டரில் டெல்லிக்குள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நுழைந்தனர். சிங்கு எல்லை, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். பல இடங்களில் இருதரப்பினருக்கும் மோதல் மூண்டது.   விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லியில் செங்கோட்டையை முற்றுகையிட்டும் அதன் மீது ஏறியும் போராட்டம் நடத்தினர். அங்கு தங்களது கொடியை பல இடங்களில் ஏற்றினர். செங்கோட்டையில் இருந்து அவர்களை வெளியேற்ற கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தினர். டெல்லி ஐடிஒ பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் பலியானார். அந்த பகுதியில் போலீஸ் பேருந்து ஒன்றும் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனிடையே வன்முறையில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் கிடையாது என்றும், அவர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகேத் தெரிவித்தார்.  இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்ட போது வன்முறையாளர்கள் தாக்கியதில் 180 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீஸ்காரர் ஒருவர் அங்கிருந்து ஓட முயன்ற போது வன்முறையாளர்கள் அவரை சூழ்ந்து தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, டெல்லி போலீசாருக்கு உதவுவதற்காக 16 கம்பெனி துணை ராணுவப்படைகளை அனுப்ப அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இவற்றில் 15 கம்பெனி படையினர் பதற்றம் மிகுந்த பகுதியில் நிலை நிறுத்தவும், ஒரு கம்பெனியை தயாராக வைத்திருக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டிராக்டர் பேரணி மூலம் நடத்திய போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட உண்மையான விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேறுமாறு பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், அதன்பின்னரும் நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments