ஜப்பானில் இறந்த தனது தாயின் உடலை யாருக்கும் தெரியாமல் பத்து ஆண்டு காலமாக குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த மகளை காவல்துறையினர் கைது செய்தனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 48 வயதான பெண் யூமி யோஷினோ. அவரும், அவரது தாயாரும் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நீண்ட காலமாக வசித்து வந்தனர். கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக யூமி யோஷினோவின் தாய் இறந்தார். ஆனால் நீண்ட காலமாக தாயுடன் சேர்ந்து வசித்து வந்த அந்த குடியிருப்பில் இருந்து யூமி வெளியேற விரும்பாததால் தனது தாயின் உடலை குளிர்சாதனபெட்டியில் வைத்து மறைத்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த யூமி, அடுக்குமாடி குடியிருப்பில் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த யூமி, தான் வசித்து வரும் வீட்டுக்கு சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. அதனால் அவர் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தப்பட்டார். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வீட்டை காலி செய்தார். ஆனால் 10 ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருக்கும் தாயின் உடலை எடுத்து சென்றால் போலீசிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் எடுத்து செல்லவில்லை. சில நாட்களுக்கு முன் யூமி காலிசெய்த வீட்டை தூய்மைப்படுத்த வந்த பணியாளர், வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த வயதான பெண்மணியின் உடல் ஒன்று வளைத்து வைக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். பத்தாண்டு காலமாக குளிர்சாதனப் பெட்டியிலேயே யூமி தாயாரின் உடல் வைக்கப்பட்டிருந்ததால் அவர் இறந்த சரியான நேரம் மற்றும் இறந்ததற்கான காரணத்தை அறிய முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தாயின் உடலை மறைத்து வைத்திருந்த யூமி யோஷினோவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயின் இறந்த உடலை யாருக்கும் தெரியாமல் பத்து வருடமாக குளிர்சாதன பெட்டியில் அவரது மகளே மறைத்து வைத்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments