Ticker

6/recent/ticker-posts

Ad Code

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய் காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவரது ஒரே மகனான விவேக் அகர்வால் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு விரைந்தார். தந்தைக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்கள் சிலரும் டெல்லிக்கு வந்திருந்தனர்.

டெல்லி தீ விபத்து

மருத்துவமனைக்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஹவுஸ் ரானி பகுதியில் உள்ள 'புளோரிஷ் ஸ்டேஸ்' (Flourish Stays) என்ற விடுதியில் விவேக் தனது தாய் பிரேமலதா, மனைவி தார்ஜனி, மகள்கள் ஜீவிஷா, வாரியா மற்றும் உறவினர்களான அசோக் கோயல், கமலா, ஜிம்ரி ஆகியோருடன் தங்கியிருந்தார். ஆனால், ஜூன் 3-ம் தேதி அதிகாலை அந்த விடுதியில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தப்பிக்க வழியின்றி விவேக்கின் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர விபத்தில் ஒட்டுமொத்த விடுதியும் தீக்கிரையானதில், 13 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். குடும்பமே அழிந்துவிட்ட நிலையிலும், வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராதே ஷியாம் அகர்வாலிடம் இந்தத் துயரச் செய்தி தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தீ விபத்து நடந்த சில நாட்களிலேயே, செவ்வாய்க்கிழமை மதியம் ராதே ஷியாமின் உயிரும் பிரிந்தது. "எல்லாம் முடிந்துவிட்டது" என அவரது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் குடும்பத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்காக மகிழ்ச்சியோடு காத்திருந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே வாரத்தில் முற்றிலும் அழிந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments