Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அதிகமான முடி உதிர்வு இருக்கிறது. என்னுடைய தோழி என்னை பயோட்டின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படியும்,
அது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, வளரச் செய்யும் என்றும் சொல்கிறாள். அது உண்மையா... எத்தனை நாள்களுக்கு, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

பயோட்டின் என்பது வைட்டமின்களில் மிக முக்கியமானது. இதனை வைட்டமின் B7 (Vitamin B7) என்றும் சொல்வோம். பொதுவாக பயோட்டின் என்றாலே பலரும் அதனை தலைமுடி மற்றும் நகங்களோடுதான் (Hair and Nails) தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள்.
ஆனால், பயோட்டின் நம் உடலில் நாம் உட்கொள்ளும் புரதம் (Protein) மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை (Carbohydrates) செரிமானம் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறது.
பயோட்டின் என்பது உடலில் கெரட்டின் (Keratin) உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கெரட்டின் என்பது நம்முடைய தலைமுடி, நகங்கள் போன்றவற்றில் இருக்கக்கூடிய முக்கியமான புரத காரணியாகும். இதனால்தான் பயோட்டின் எப்போதும் முடி வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
பயோட்டின் சப்ளிமென்ட்ஸ் எடுத்தால் முடி வளருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பயோட்டின் குறைபாடு (Biotin Deficiency) உள்ளவர்கள் இதனை சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளும்போது, அது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக, நகங்கள் எளிதில் உடையக்கூடிய பிரச்னை மற்றும் தலைமுடி மெலிதாகும் பிரச்னை (Hair Thinning) உள்ளவர்களுக்கு இது நிச்சயம் உதவும்.

பொதுவாகவே தலைமுடி மெலிதாவதற்கும், உதிர்வதற்கும் ஹார்மோன் குறைபாடுகள் (Hormonal issues) உள்ளிட்ட வேறு சில காரணங்கள்தான் முக்கியமாக இருக்கின்றன. எனவே, அந்தப் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்த பிறகு, பயோட்டின் குறைபாடும் இருந்தால் மட்டுமே இந்த சப்ளிமென்ட்ஸ் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
உண்மையில், மனிதர்களுக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படுவது என்பது மிகமிக அரிதான ஒரு விஷயம். அதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, பயோட்டின் குறைபாடு இல்லாத பட்சத்தில், அதைத் தனியாக சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்தப் பலனும் இல்லை. அதற்கு பதிலாக முடி கொட்டுவதற்கான மற்ற காரணங்களைக் கண்டுபிடித்து சரிசெய்யலாம்.

சாதாரணமாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 50 மைக்ரோகிராம் (32 to 50 mcg) பயோட்டின் தேவைப்படும். ஆனால், உடலில் பயோட்டின் குறைபாடு (Deficiency) தீவிரமாக இருந்து, அது உடலில் சரியாக உறிஞ்சப்பட வேண்டும் (Absorption) என்பதற்காக மருத்துவர்கள் சில நேரங்களில் 500 மைக்ரோகிராம் (500 mcg) வரை கூட பரிந்துரைப்பதுண்டு.
பயோட்டின் குறைபாடு இல்லாத நிலையிலும் கூட, சிலர் இதனைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு காரணம் இது நகங்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனைத் தரும் என்பதுதான். எனினும், தேவையற்ற பட்சத்தில் இதனை சும்மா எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news
0 Comments