Ticker

6/recent/ticker-posts

Ad Code

6,000 யூதர்களைக் காப்பாற்றிய `ஜப்பானிய ஷிண்ட்லர்’ சியுனே சுகிஹாரா! - 2ம் உலகப்போரின் நிஜ நாயகன்!

இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில், ஒற்றை மெழுகுவர்த்தியாக நின்று பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒரு மாமனிதரின் கதை இது.

"இன்றைய நாளில் எப்படிப்பட்ட நல்விளைவை இந்த உலகில் ஏற்படுத்தப் போகிறேன்?" என்ற கேள்வியை நம்மை நோக்கி எழுப்பச் செய்கிறவர்தான் சியுனே சுகிஹாரா (Chiune Sugihara). வரலாறு அவரை `ஜப்பானிய ஷிண்ட்லர்' என்று அன்போடு அழைக்கிறது.

சியுனே சுகிஹாரா ஜப்பானின் கிஃபு மாகாணத்தில் உள்ள மினோ என்ற நகரில் ஜனவரி 1, 1900 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர். தன் மகனும் தன்னைப்போலவே மருத்துவராக வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், சுகிஹாராவுக்கு மொழிகள் கற்பதிலும், உலகை அறிந்துகொள்வதிலும் தான் ஆர்வம் இருந்தது.

சியுனே சுகிஹாரா
சியுனே சுகிஹாரா

தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, மருத்துவ நுழைவுத் தேர்வில் வேண்டுமென்றே தவறான விடைகளை எழுதி தோல்வியடைந்தார். பின்னர், டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற வசேடா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அதன் பிறகு, மஞ்சூரியாவில் உள்ள ஹார்பின் கல்வி நிறுவனத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுத் தேர்ந்தார்.

படிப்பை முடித்த பின் ஜப்பானிய வெளியுறவுத் துறையில் இணைந்தார். மஞ்சூரியாவில் அதிகாரியாகப் பணியாற்றியபோது, அங்குள்ள சீனர்களை ஜப்பானிய ராணுவம் கொடூரமாக நடத்துவதைக் கண்டார். அவருடைய மனிதநேய மனம் அதை ஏற்க மறுத்தது. 1934-ம் ஆண்டு, ஜப்பானிய ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுவே அவரின் நேர்மைக்குக் கிடைத்த முதல் சான்று. பின்னர் மீண்டும் தூதரகப் பணியில் இணைந்த அவர், பல ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றினார்.

1939-ம் ஆண்டு, லிதுவேனியாவின் கவுனாஸ் நகரத்தில் ஜப்பானிய துணைத் தூதராகப் பொறுப்பேற்றார். 1940-ம் ஆண்டு கோடைகாலம். இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. ஹிட்லரின் நாஜிப் படைகள் ஐரோப்பாவை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தன. போலந்தில் இருந்து தப்பி வந்த ஆயிரக்கணக்கான யூத அகதிகள் லிதுவேனியாவில் தஞ்சம் புகுந்திருந்தனர். ஆனால், அங்கு சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதால், லிதுவேனியாவும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றதாக மாறியது.

நாஜிகளிடமிருந்தும், சோவியத் படைகளிடமிருந்தும் தப்பிக்க அவர்களுக்கு இருந்த ஒரே வழி, ரஷ்யா வழியாகப் பயணம் செய்து ஜப்பானை அடைந்து, அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்வதுதான். இதற்கு அவர்களுக்கு ஜப்பானிய அரசின் `பயண விசா' (Transit Visa) தேவைப்பட்டது. ஜூலை மாதத்தின் ஒரு நாள் காலை, ஜப்பானிய தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கள் குழந்தைகளோடும், குடும்பத்தோடும் விசா கேட்டு கண்ணீரோடு திரண்டிருந்தனர்.

சியுனே சுகிஹாரா
சியுனே சுகிஹாரா

விசா வழங்குவது குறித்து சுகிஹாரா தனது ஜப்பானிய அரசுக்கு மூன்று முறை தந்தி மூலம் அனுமதி கேட்டார். ஆனால், ஹிட்லரின் ஜெர்மனியோடு கூட்டணி வைத்திருந்த ஜப்பானிய அரசு, "எக்காரணம் கொண்டும் விசா வழங்கக் கூடாது" என்று மிகக் கடுமையாக உத்தரவிட்டது.

சுகிஹாரா இப்போது ஒரு மாபெரும் தர்மசங்கடத்தில் நின்றார். ஜப்பானிய அரசின் உத்தரவை மீறினால், அவரது வேலை பறிபோகும். அவருக்கும் அவரது மனைவி யூக்கிகோ மற்றும் மூன்று குழந்தைகளுக்கும் ஆபத்து நேரிடும். ஆனால், விசா வழங்க மறுத்தால், தூதரகத்திற்கு வெளியே நிற்கும் அந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்கள் நாஜிகளின் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொல்லப்படுவார்கள்.

தனது மனைவியிடம் கலந்துரையாடினார். அந்த இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்த சுகிஹாரா, வரலாற்றில் அழியாத அந்த முடிவை எடுத்தார். "நான் என் அரசாங்கத்திற்கு கீழ்ப்படிந்தால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவேன். ஒரு மனிதனாக என் அறத்தை நான் செய்ய வேண்டும்." - இதுவே அவர் எடுத்த முடிவு.

ஜூலை 18, 1940 முதல் ஆகஸ்ட் 28, 1940 வரை, சுகிஹாரா இடைவிடாது பணியாற்றினார். அரசு உத்தரவை மீறி, தன் கைப்பட விசாக்களை எழுதத் தொடங்கினார். தினமும் 18 முதல் 20 மணி நேரம் விசாக்களை எழுதினார். அவரது கைகள் வீங்கி வலிக்கத் தொடங்கின, பேனாவைச் சரியாகப் பிடிக்க முடியாத அளவுக்கு விரல்கள் மரத்துப்போயின. இரவு உணவருந்தும்போதும், தூக்கத்தைத் துறந்தும் விசாக்களை எழுதிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு நாளில் எழுதிய விசாக்களின் எண்ணிக்கை, வழக்கமாக ஒரு மாதம் முழுவதும் எழுதப்படும் விசாக்களுக்குச் சமம்.

சியுனே சுகிஹாரா
சியுனே சுகிஹாரா

ஆகஸ்ட் இறுதியில், தூதரகத்தை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவு வந்தது. செப்டம்பர் மாதம் கவுனாஸ் ரயில் நிலையத்திலிருந்து அவர் புறப்பட்டபோதும், ரயில் ஜன்னல் வழியாக விசாக்களை எழுதிக் கையெழுத்திட்டு வெளியில் நின்ற மக்களிடம் வீசிக் கொண்டே இருந்தார். ரயில் நகரத் தொடங்கியதும், தன்னிடம் இருந்த முத்திரையை கூட்டத்தில் வீசினார். அதை வைத்து அவர்கள் மேலும் பல விசாக்களை உருவாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காக! சுகிஹாராவின் இந்த துணிச்சலான செயலால் 6,000-க்கும் மேற்பட்ட யூதர்களின் உயிர்கள் தப்பின. இன்று அவர்களின் சந்ததியினர் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேல் வாழ்கின்றனர்.

போருக்குப் பிறகு, ரஷ்யர்களால் கைது செய்யப்பட்ட சுகிஹாரா, 18 மாதங்கள் சோவியத் போர்க்கைதிகள் முகாமில் கடும் துன்பங்களை அனுபவித்தார். 1947-ம் ஆண்டு ஜப்பான் திரும்பிய அவரை, அரசின் உத்தரவை மீறியதற்காக ஜப்பானிய வெளியுறவுத் துறை பணியிலிருந்து நீக்கியது.

ஆயிரக்கணக்கானோரைக் காப்பாற்றிய அந்த மாவீரன், தனது குடும்பத்தைக் காப்பாற்ற பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும், பல்பு விற்கும் நபராகவும், பின்னர் மாஸ்கோவில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாகவும் வறுமையிலும், எந்தவித அடையாளமுமின்றியும் வாழ்ந்தார். தான் காப்பாற்றியவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது கூட பல தசாப்தங்களாக அவருக்குத் தெரியாது.

1968-ம் ஆண்டு, சுகிஹாராவால் காப்பாற்றப்பட்ட யெஹோஷுவா நிஷ்ரி என்ற நபர், இஸ்ரேலிய தூதரகத்தின் மூலம் பல ஆண்டுகளாகத் தேடி அவரை ஜப்பானில் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் சுகிஹாராவின் தியாகம் உலகுக்குத் தெரிய வந்தது.

சியுனே சுகிஹாரா
சியுனே சுகிஹாரா

1984-ம் ஆண்டு, இஸ்ரேலின் உயரிய விருதான Righteous Among the Nations (நேர்மையானவர்களின் வரிசையில் ஒருவர்) என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற ஒரே ஜப்பானியர் இவர்தான். விருது அறிவிக்கப்பட்டபோது, வயது மூப்பின் காரணமாக அவரால் இஸ்ரேலுக்குச் செல்ல முடியவில்லை. அவரது மனைவி மற்றும் மகன் சென்று அதைப் பெற்றுக்கொண்டனர்.

ஜூலை 31, 1986 அன்று தனது 86-வது வயதில் சுகிஹாரா காலமானார். தான் செய்த மாபெரும் தியாகத்தைப் பற்றி அவர் எப்போதுமே பெருமைப்பட்டதில்லை. "நான் ஒன்றும் பெரிய காரியம் செய்துவிடவில்லை; ஒரு மனிதன் சக மனிதனுக்குச் செய்ய வேண்டியதைத்தான் செய்தேன்" என்று மிகவும் எளிமையாகக் கூறினார்.

உயரிய பதவியோ, பணமோ, அதிகாரமோ ஒரு மனிதனை மாமனிதன் ஆக்குவதில்லை. இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு ஆபத்து வரும் எனத் தெரிந்தும், சக மனிதனுக்காக இரக்கப்படும் அந்த மனிதநேயம் மட்டுமே ஒருவரை வரலாற்றில் நிலைநிறுத்துகிறது.

இருள் சூழ்ந்த வழியில் நீங்கள் செல்லும் போதெல்லாம், அறத்தின் பக்கம் நிற்கத் தயங்காதீர்கள்!



from Vikatan Latest news

Post a Comment

0 Comments