Doctor Vikatan: தினசரி இரவு 10 மணிக்கு உறங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்துக்கு 5.30 மணிக்கு) எழுந்துவிடுவேன். சில நேரம் இரவு 12 மணிக்கு மேல் உறங்கினாலும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். ஆனால், அன்றைய தினம் முழுக்க சோர்வாக உள்ளது. இதைத் தவிர்க்க என்ன செய்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வது உடலுக்கு நல்லது. ஆனால், சில சூழ்நிலைகளால் அது சாத்தியமில்லாமல் போகலாம். அப்படி நடக்கும்போது, போதுமான அளவு தூக்கம் கிடைக்காமல், 'Sleep Debt' எனப்படும் தூக்கக் கடன் நம் உடலில் சேரும். இதனால் நாம் அதிக சோர்வாக உணர்வோம்,
தூக்கம் குறையும் போது உடல் சீக்கிரம் வறட்சி அடையும். இது சோர்வை இன்னும் அதிகப்படுத்தும். அன்றைய தினம் வழக்கத்தை விட அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். அதிகப்படியான காபி அல்லது டீ குடிப்பதைத் தவிர்க்கவும். இது தற்காலிகமாக உற்சாகம் தருவது போல இருந்தாலும், பிறகு உடலை இன்னும் சோர்வாக்கும். காலை எழுந்தவுடன் அல்லது சோர்வாக உணரும்போது சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது நல்லது. சூரிய ஒளி உங்கள் உடலுக்கு 'இப்போது பகல்' என்ற உணர்வைத் தரும் (Circadian Rhythm). இதனால் 'மெலடோனின்' (தூக்கத்திற்கான ஹார்மோன்) சுரப்பது குறைந்து, நீங்கள் விழிப்பு உணர்வுடன் இருக்க உதவும்.
பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் (Quick Nap) போடுவது நல்லது, ஆனால், அதை மாலை 3 மணிக்கு முன்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரத்திலோ அல்லது இரவு நெருங்கும் நேரத்திலோ தூங்கினால், அது உங்கள் இரவுத் தூக்கத்தை பாதிக்கும். பகல் நேரத் தூக்கம் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என நீளக் கூடாது. அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவேளை சோர்வு குறையவில்லை என்றால், விடுமுறை நாள்களிலோ அல்லது வார இறுதியிலோ கூடுதல் நேரம் தூங்கி அந்தத் தூக்கக் கடனைச் சரிசெய்யலாம்.
குறைவான தூக்கம் இருக்கும் நாள்களில் பலமான உணவுகளைத் தவிர்க்கவும். அதிக காரம் அல்லது எண்ணெய் உணவுகள் செரிமானத்திற்கு அதிக ஆற்றலை எடுத்துக் கொள்ளும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். எனவே, எளிதில் செரிமானமாகும் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வதையும் உறுதிசெய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news
0 Comments