Ticker

6/recent/ticker-posts

Ad Code

பழமர சாகுபடியில் வெற்றி பெற, இதுதான் அச்சாணி... தரமான உரக்கலவை இப்படித்தான் தயார் செய்ய வேண்டும்...

தொடர்

சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடவுக் குழிகள் எடுத்து, உடனடியாகப் பழமரக் கன்றுகளை நடவு செய்ததால், அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், ஓரிரு மாதங்களுக்கு முன்பே குழிகள் எடுத்து தயார் நிலையில் வைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.

பல்லாண்டுப் பயிர்களான மா, பலா, கொய்யா, நெல்லி உள்ளிட்ட பழமரங்கள் சாகுபடி செய்ய, தரமான கன்றுகளைத் தேர்வு செய்தால் மட்டும் போதாது. ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சரியான அளவில் குழி எடுத்து (2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம்), ஆற விடுவதன் மூலம் சூரிய வெப்பத்தால் கிருமி நீக்கம் செய்து, அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் கன்றுகளை நடவு செய்வது மிகவும் அவசியம். இதை விவசாயிகள் எக்காரணம் கொண்டும் மறந்துவிடக் கூடாது. பழமர சாகுபடியில் வெற்றி பெற இதுதான் அச்சாணி. இதில் தவறு நிகழ்ந்தால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலையாகிவிடும்.

எங்கள் நிலையத்துடன் தொடர்பில் இருக்கக்கூடிய விவசாயி ஒருவர், என்னை சந்தித்தபோது, ஒரு முக்கியமான சந்தேகம் கேட்டார். ‘என் தோட்டத்து மண் நன்கு பொலபொலப்பாகவும், நிறைய மண்புழுக்களுடன் வளமாகவும் உள்ளது. ஆகஸ்ட் மாதம் குழி எடுத்து, நன்கு ஆறவிட்டு, அக்டோபர் மாதம்தான் நெல்லி, சப்போட்டா உள்ளிட்ட பழமரக்கன்றுகளை நடவு செய்தேன். ஆனாலும், சில கன்றுகள் அழுகிவிட்டன. இதற்கு என்ன காரணம்?’ எனக் கேட்டார். `கன்று நடவு செய்தவுடன், நடவுக்குழியை எவ்வாறு மூடினீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்ன பதில் மூலம், அதற்கான விடை கிடைத்தது. ‘குழிகள் எடுத்தபோது கிடைத்த மண்ணைக் கொண்டே நடவுக்குழிகளை மூடினேன்’ எனத் தெரிவித்தார்.

ஆரோக்கியமான மாங்கன்று...

இது தவறான வழிமுறையாகும். நிலத்துக்குக் கீழே உள்ள மண்ணில், அதாவது, குழி எடுத்த மண்ணில் இயற்கையாகவே அதிகப்படியான பூஞ்சைகளும், நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளும் இருக்கக்கூடும். அவை, வேர் அழுகல் நோயை ஏற்படுத்தி கன்றுகள் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கன்றுகள் நடவு செய்தவுடன் தரமான மண் கலவை மூலம் குழியை நிரப்புவது மிக மிக அவசியம். வண்டல் அல்லது செம்மண், மணல், தொழுவுரம் ஆகியவற்றை 2:2:1 என்ற விகிதாசாரத்தில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.

வண்டல் அல்லது செம்மண் வாங்குவதற்குப் பணம் செலவாகுமே, குழிக்குள் இருந்த மண்ணுக்கும், நாம் புதிதாகக் குழிக்குள் போடும் மண்ணுக்கும் என்ன வித்தியாசம், செம்மண், வண்டல் மண் ஆகியவற்றில் பூஞ்சைகள் மற்றும் கிருமிகள் இருக்காதா, அவற்றால் வேர் அழுகல் ஏற்படாதா, குழிகள் எடுத்த போது கிடைத்த மண்ணை என்னதான் செய்வது? இந்தக் கேள்விகள் எல்லாம் உங்களுக்குக் கண்டிப்பாக எழக்கூடும்.

ஏனென்றால், நாங்கள் நடத்தக்கூடிய பயிற்சிகளின் போதும், விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும்போதும், மேற்கண்ட கேள்விகளை பெரும்பாலான விவசாயிகள் எழுப்புகிறார்கள். இதற்கான பதில்கள் மற்றும் விளக்கங்கள் குறித்து இனி பார்ப்போம்.

வேர் அழுகலால் பாதிக்கப்பட்ட மாங்கன்று...

செம்மண் அல்லது வண்டல் மண் வாங்குவதற்குப் பணம் செலவாகுமே?

கோடைக்காலத்தில் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் கிடைக்கும். இதை எடுத்து வருவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், பணம் கொடுத்து செம்மண்ணை விலைக்கு வாங்கலாம். இதற்கு செலவாகுமே எனக் கவலைப்படாதீர்கள். சின்ன மீனைப் போட்டு, பெரிய மீன்களைப் பிடிக்கிற யுக்திதான் இது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வருமானம் தரக்கூடிய மா, பலா உள்ளிட்ட பழ மரங்களுக்கு ஆரம்ப நாள்களில் அடிப்படை செலவுகள் செய்ய, கொஞ்சம்கூட, தயக்கம் காட்டக் கூடாது. தற்போது நீங்கள் செய்யும் சிறு முதலீடு மூலம், நீண்ட காலத்துக்குத் தொடர்ச்சியாக வருமானம் கிடைக்கப்போகிறது. நியாயமான, மிகவும் அவசியமான செலவுகளைக்கூட நீங்கள் தவிர்க்க நினைத்தால், எதிர்கால வருமானம் நிச்சயம் பாதிக்கப்படும். கன்றுகள் அழுகிப்போனால், முதலுக்கே மோசம் ஏற்படும். கன்றுகள் வாங்க, குழிகள் எடுக்க, நடவு செய்ய நீங்கள் செய்த செலவுகள் எல்லாம் வீணாகிப்போய்விடும். எனவே, அவசியமான செலவுகள் செய்ய, முழு மனதுடன் தயாராக இருங்கள்.

குழி

செம்மண், வண்டல் மண் ஆகியவற்றில் கிருமிகள் இருக்காதா?

மழைக்காலம் தொடங்கட்டும்… அப்போது, செம்மண் அல்லது வண்டல் மண் கொண்டு வந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அலட்சியமாக இருக்கக் கூடாது. புதிதாகக் கொண்டு வந்த மண்ணைப் பயன்படுத்தி நடவுக்குழிகளை நிரப்புவது தவறான வழிமுறையாகும். இதனால் உங்களுடைய பழமரக்கன்றுகளில் வேர் அழுகல் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, வண்டல் மண் அல்லது செம்மண்ணை உங்களுடைய பண்ணைக்குக் கொண்டு வந்து, சுட்டெரிக்கும் வெயிலில் போட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். இதன் மூலம் அந்த மண்ணில் கிருமி நீக்கம் நடைபெறும். இவ்வாறு கிருமி நீக்கம் செய்யப்பட்ட வண்டல் மண் அல்லது செம்மண் ஆகியவற்றுடன் தொழுவுரம் மற்றும் மணல் கலந்து கலவை தயார் செய்து நடவுக்குழிகளை நிரப்புவதன் மூலம், உங்களுடைய பழக்கன்றுகள், பாதுகாப்பாக வளரும். வேர் அழுகல் நோய் ஏற்படுவது நிச்சயம் தவிர்க்கப்படும்.

நீர்நிலைகளில் உள்ள மணல் பெரும்பாலான நாள்கள் சுட்டெரிக்கும் வெயிலில் இருப்பதாலும் துகள்களுக்கு இடையே இடைவெளி இருப்பதாலும், அதில் கிருமிகள் உயிர் வாழ முடியாது. மணலில் எந்த ஒரு சத்தும் கிடையாது. ஆனாலும்கூட, ஏன் இதை நாம் விவசாயத்தில் பயன்படுத்துகிறோம் என்றால், வேர்களுக்குத் தேவையான காற்றோட்டத்தையும் சூரிய ஒளியையும் போதுமான அளவுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

கள ஆய்வில்...

எருக்குழி…

எருக்குழிகளிலிருந்து தொழுவுரத்தை எடுத்துப் பயன் படுத்தும்போது சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உரக்குழிகளின் மேற்பகுதியில் உள்ள தொழுவுரத்தில் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அதைத் தவிர்க்க வேண்டும். அரையடி ஆழம் வரை உள்ள தொழுவுரத்தைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குக் கீழே உள்ள தொழுவுரத்தை எடுத்து, தரமான மண் கலவையை தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம். உரக்குழியின் அடிப்பகுதியில் உள்ள தொழுவுரம் சூடான பதத்தில் இருப்பதால், அதில் கிருமிகள் உயிர் வாழாது. உரக்குழியின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கும் தொழுவுரத்தை காற்றோட்டமும் நிழலும் உள்ள இடத்தில் பரப்பி சுமார் 10 நாள்களுக்குப் பிறகு, மண் கலவை தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

கிருமிகளற்ற ஊடகம்…

மேற்கண்ட வழிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் செம்மண், வண்டல் மண், தொழுவுரம் ஆகியவை கிருமிகளற்ற ஊடகங்களாக நமக்குக் கிடைக்கும். வேர் அழுகலை உண்டாக்கக்கூடிய கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் இந்த ஊடகங்களில் இருக்காது.

நடவுக்குழிகளை 2 மாதங்களுக்கு சூரிய வெப்பத்தில் கிருமி நீக்கம் செய்வதன் மூலமும், கன்றுகள் நடவு செய்யும்போது, தரமான மண் கலவையைக் குழிகளில் பயன்படுத்துவதன் மூலமும் நீங்கள் நடவு செய்த பழமரக்கன்றுகள் அனைத்தையும் வேர் அழுகல் பாதிப்பு ஏற்படாமல் 100 சதவிகிதம் பாதுகாக்க முடியும்.

மாங்கன்று நடுதலின்போது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருடன்...

கன்றுகள் நடவு செய்யும் முறை…

கன்றுகள் நடவு செய்யும்போது சில படிநிலைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் வேப்பம்பிண்ணாக்கு மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் மூலமும் கன்றுகளை மேலும் பேணிப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

மா, நெல்லி, பலா, கொய்யா உள்ளிட்ட பழமரங்கள் சாகுபடி செய்ய… 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட குழியில் முதலில், 5 சென்டிமீட்டர் உயரம் வரை மணல் நிரப்ப வேண்டும். அதன் மீது 40 சென்டிமீட்டர் உயரத்துக்கு மண், மணல், தொழுவுரக் கலவையை (2:2:1) என்று நிரப்ப வேண்டும். அதில் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கைப் போட்டு நிரவி விட வேண்டும். இவ்வாறு மணல் மற்றும் உரக்கலவை நிரப்பப்பட்டப் பிறகு, குழியின் மேல் மட்டத்தில் சுமார் 15 சென்டி மீட்டர் (அரையடி) உயரத்துக்குக் காலி இடம் இருக்கும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட குழிகளில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். குழியின் மேல்மட்டத்தில் உள்ள காலி இடத்தை என்ன செய்வது என உங்களுக்குக் கேள்வி எழக்கூடும். குழியிலிருந்து எடுத்த மண்ணை வெளியில் போடுவதால், அது வெயிலில் காய்ந்து கிருமி நீக்கம் அடைந்திருக்கும். அதில் ஒரு பகுதியை குழியின் மேற்பகுதியில் போடலாம். தேவைக்குப் போக, கூடுதலாக உள்ள தாய் மண்ணை, நிலம் முழுவதும் பரவலாக நிரவி விடலாம் அல்லது அந்த மண்ணை பயன்படுத்தி வரப்பைப் பலப்படுத்தலாம்.

கள ஆலோசனை...

நாங்கள் நடத்திய பயிற்சி…

பழமரக்கன்றுகளை எவ்வாறு நடவு செய்ய வேண்டும் எனக் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நாங்கள் நடத்திய பயிற்சியின்போது, விவசாயி ஒருவர், ஒரு கோரிக்கை வைத்தார். தன்னுடைய தோட்டத்துக்கு வந்து, கன்றுகளை நேரடியாக நடவு செய்து, செயல்முறை விளக்கம் அளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அலுவலகப் பணிகளுக்கு மத்தியிலும், அந்த விவசாயியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்று மாலை அவருடைய தோட்டத்துக்குப் பயணித்தோம். 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட குழிகளும், நெல்லி மரக்கன்றுகளும் தயார் நிலையில் இருந்தன. ஏற்கெனவே சொன்னவாறு, மணல், மண் கலவை (உரக்கலவை) மற்றும் வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை முறையாக நடவுக்குழியில் போட்டு, கன்றை நடவு செய்து காட்ட தயாரானபோது, ‘சார், ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்’ என போர்வெல் மோட்டார் அறைக்குள் ஓடினார், அந்த விவசாயி. சற்று நேரத்தில் திரும்பி வந்தவரின் கையில் டிரைக்கோ டெர்மா விரிடி பாக்கெட் ஒன்று இருந்தது.

‘சார், நல்லவேளை ஞாபகம் வந்துச்சு. கன்றுகள் நடவு செய்றப்ப, டிரைக்கோ டெர்மா விரிடி உயிர் உரம் பயன்படுத்தினா, வேர் அழுகல் நோய் வராதுனு வேளாண் புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். போன வருஷம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துல நடந்த ஒரு பயிற்சியில, நீங்களும் இதைச் சொல்லியிருக்கீங்க’ எனக் கூறியவாறு, அந்த பாக்கெட்டை என் கையில் கொடுத்து, குழியில் போடச் சொன்னார்.

மாங்கன்று

அப்போது அருகில் இருந்த மற்றொரு விவசாயி மிகுந்த தயக்கத்துடன், ‘சார், சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. போன வருஷம், உங்க வழிகாட்டுதலோடு குழிகள் எடுத்து… மணல், தரமான மண் கலவை, வேப்பம்பிண்ணாக்கு, டிரைக்கோ டெர்மா விரிடி போட்டு கன்றுகள் நட்டேன். 200 கன்றுகள் நட்ட பிறகு, டிரைக்கோ டெர்மா விரிடி தீர்ந்து போயிடுச்சு. அதுக்குப் பிறகு, நட்ட 200 கன்றுகளுக்கு டிரைக்கோ டெர்மா விரிடி பயன்படுத்தவே இல்ல. ஆனாலும், என் தோட்டத்துல நடப்பட்ட 400 கன்றுகளுமே நல்லா ஆரோக்கியமாதான் வளர்ந்துக்கிட்டு இருக்கு. எந்த ஒரு கன்றுலயுமே வேர் அழுகல் நோய் ஏற்படவே இல்லை. டிரைக்கோ டெர்மா விரிடி பயன் படுத்தினாலும், பயன்படுத்த லைனாலும் கன்றுகள் நல்ல ஆரோக்கியமா வளருதுங்கறதை, நான் அனுபவபூர்வமா தெரிஞ்சுகி ட்டேன். இதைப் பயன்படுத்துறதுல எனக்கு உடன்பாடில்ல, இது தேவையில்லாத செலவு” என்றார்.

செந்தூர்குமரன்

இரு விவசாயிகளும் தெரிவித்த கருத்துகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட நாம், அன்றைய நாளில் நடைபெற்ற நடவு செயல்முறை விளக்கத்தின்போது, டிரைக்கோ டெர்மா விரிடியை தவிர்த்துவிட்டோம்.

ஏன் அதை தவிர்த்தோம், டிரைக்கோடெ ர்மா விரிடியைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்தான் என்ன, நடவுக்குழிகளில் கன்றுகள் நடவு செய்யும்போது, அவற்றில் வேர் அழுகல் ஏற்படாமல் தடுக்க… டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் போன்ற நுண்ணுயிர்களை அவசியம் பயன்படுத்த வேண்டுமா? இப்படியாக அடுக்கடுக்கான கேள்விகள் எழக்கூடும். இதற்கு நாம் தரும் ஆணித்தரமான பதில், அவசியம் பயன்படுத்த வேண்டும். ஆனால், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இது தொடர்பான புரிதலில் உள்ள இடைவெளியால் தான், அந்த இரண்டு விவசாயிகள் இடையே மாற்றுக் கருத்து உருவானது.

வேர் அழுகல் நோயைத் தடுக்கக்கூடிய வேப்பம்பிண்ணாக்கு மற்றும் உயிர் உரங்களை எப்போது, எந்தெந்தப் படிநிலைகளில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- அனுபவம் தொடரும்...



from Vikatan Latest news

Post a Comment

0 Comments