"நாடாளுமன்றத் தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது, திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்" என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது
மதுரை வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை அழிக்க நினைப்பது போல ஒரு மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது. திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் தமிழில் அடிப்படைக் கல்வியைக் கொடுக்கவில்லை. தமிழகத்தில் தமிழ் மொழி தெரியாமலேயே ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது.
மாநில மொழிகளில் பொறியியல், மருத்துவக் கல்வியை கொண்டு வரலாம் எனக் கூறிய பின்னரும் தமிழில் மருத்துவம், பொறியியல் கல்வியை ஏன் கொண்டு வரவில்லை? எம்ஜிஆர் நிறுவிய தமிழ் பல்கலைக்கழகத்திற்கு பின்னர் ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்படவில்லை? மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி இருப்பதால் மூச்சு முட்டுகிறது என முதலமைச்சர் கூறியுள்ளார், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தபோது மூச்சு முட்டவில்லையா?
தமிழை வளர்க்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது, தமிழக முதலமைச்சர் ஆங்கிலத்தை வளர்த்து வருகிறார், மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது.

ஆறு மாதத்திற்கு இந்த கேள்வி வேண்டாம்!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது, திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்.
"எந்த ஒரு கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் இருக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே" என்ற கேள்விக்கு "6 மாதத்திற்கு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து எந்த ஒரு கேள்வியையும் ஊடகத்தினர் கேட்க வேண்டாம், 6 மாதத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
தமிழகத்திலிருந்து திமுக அப்புறப்படுத்த வேண்டிய கட்சி என தம்பி விஜய் கூறியுள்ளார், எங்களது நிலைப்பாடும் அதுதான்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் 2026-ல் திராவிட மாடல் அரசு நீக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக கால் பதித்து வருகிறது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் சேர்ந்து கால் பதிக்கும் என்பதை மத்திய தலைமை முடிவு செய்யும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from Vikatan Latest news
0 Comments