
ஈ.ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க
“அமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது... கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தங்களின் ஊழல் குற்றங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக, உதய் மின் திட்டம் தொடங்கி மாநில உரிமைகள் வரை அனைத்தையும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கு அடிமைச் சாசனமாக எழுதிக்கொடுத்தது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு, சி.ஏ.ஏ போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தது. இப்போது கூட்டணியில் இல்லை என்று சொன்ன பிறகும்கூட, பா.ஜ.க-வின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்தத் தைரியம் இருக்கிறதா... பா.ஜ.க-வைக் கண்டித்து வெளிவரும் அறிக்கையில்கூட, ‘கண்டனம்’ என்ற ஒரு வார்த்தையே இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதாவது, ‘கண்டன’ என்கிற வார்த்தையே இல்லாமல் ‘கண்டன அறிக்கை’ எழுதிவிட முடியும் எனக் காட்டிய ஒரே விசித்திரக் கட்சி அ.தி.மு.க-தான். ‘கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சொல்கிறேன்’ என்கிற பழனிசாமி, அப்போதும்கூட ‘பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை’ என்று சொல்ல மறுப்பதிலிருந்தே, அவர்களின் கபட நாடகக் கூட்டணியை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளலாம். இப்போதெல்லாம் எடப்பாடியை அ.தி.மு.க-காரர்களே நம்புவதில்லை!”

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க
“பச்சைப் பொய் பேசுகிறார் அமைச்சர். ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை’ என்று எங்கள் தலைவர் பலமுறை சொல்லிவிட்டார். இருந்தபோதும், தங்களின் அரசியல் லாபத்துக்காக தி.மு.க-தான் மீண்டும் மீண்டும் அதையே பேசிக்கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட, கடமைக்கென்று தீர்மானங்களைப் போட்டிருந்தது தி.மு.க அரசு. ஆனால் அ.தி.மு.க-தான், ‘தமிழகத்தின் 7.18% விகிதாசாரம் அடுத்த 30 ஆண்டுகளுக்கும் இப்படியே தொடரத் திருத்தம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையையும் தீர்மானத்தில் இணைக்க வலியுறுத்தியது. ஆக, உண்மையில் தி.மு.க-தான் ஒன்றிய பா.ஜ.க அரசுடன் திரைமறைவில் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுகிறது. நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்த காலத்திலேயே பா.ஜ.க-வை எதிர்த்து பேசி, சண்டை போட்டு டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததில் தொடங்கி பல்வேறு நலத் திட்டங்களையும் வாங்கி வந்திருக்கிறோம். ஆனால், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சிக்கிறோம், எதிர்க்கிறோம் என்றெல்லாம் பேசுகிற தி.மு.க., இதுவரை தமிழகத்துக்கு ஒரு உருப்படியான திட்டத்தையும் கேட்டுப் பெறவில்லை. பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்ப்பதுபோல ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள்!”
from Vikatan Latest news
0 Comments