செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். பிறகு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த ஆண்டு பிணை வழங்கியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-08/10fc5e0b-14f0-4813-8317-7ddd733c1781/tthv9vd8_supreme_court_india_generic_pti_625x300_10_October_22__1_.webp)
அடுத்த நாளே அவர் அமைச்சராகவும் பதவி ஏற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்படி வித்தியா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
"செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், அது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருக்க கூடிய தகவல்கள் எல்லாம் மிகவும் தீவிரமானது. இதில் இன்னும் வழக்கு விசாரணை கூட முடியவில்லை. ஆனால் அவ்வளவு அவசரமாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்?" என கேள்வி எழுப்பியதோடு வழக்கில் தொடர்புடைய நபர் அமைச்சராக வந்தால், சாட்சியங்கள் அச்சப்பட மாட்டார்களா? பிறகு எப்படி வழக்கு விசாரணை நியாயமாக நடக்கும் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
"ஏற்கனவே இது குறித்த எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தோம். அதை செந்தில் பாலாஜி தரப்பு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எனவே செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக தான் நீடிப்பேன் என்று சொன்னால் இந்த வழக்கை நாங்கள் விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டி இருக்கும்" என கூறினர்.
எனவே முடிவெடுக்க வேண்டியது செந்தில் பாலாஜி தான் என திட்டவட்டமாக கூறினர். அமலாக்க துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தடையியல் நிபுணர் உள்ளிட்ட பல சாட்சியங்கள் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தவரை வழக்கிற்காக நேரில் ஆஜர் ஆகி கொண்டிருந்தார்கள். அவர் பிணையிலிருந்து வெளிவந்து அடுத்த நாளை அமைச்சரான உடன், பயந்து போய் யாரும் தற்போது நீதிமன்றத்திற்கு வருவதில்லை என தெரிவித்தார்
இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பு, அவர் அமைச்சராக தொடர்வாரா இல்லையா என்பதை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
from Vikatan Latest news
0 Comments