நீதிமன்றங்களில் பல சுவாரஸ்ய, ஆச்சர்ய, அதிருப்தி நிகழ்வுகள் நடப்பதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகளுக்கு இடையே, பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், அதை அவர்கள் கசப்புடன் வெளிப்படுத்திய விதமும் பேசுபொருளாகியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைஷ்ணவ் மற்றும் மெளனா பட் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வரி தொடர்பான ஒரு வழக்கை விசாரித்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி வைஷ்ணவ் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். அத்தீர்ப்பில் உடன்படாத நீதிபதி மெளனா பட் நீதிபதி வைஷ்ணவிடம் ஏதோ கூறியபடி இருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த நீதிபதி வைஷ்ணவ், `என் உத்தரவில் இருந்து மாறுபடுகிறீர்கள், நாம் ஒன்றில் வேறுபட்டோம்.
இங்கேயும் நீங்கள் வேறுபடுகிறீர்கள்' என்று கோபமாகப் பேசினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி மெளனா பட், `இது உத்தரவில் வேறுபடுவது பற்றிய கேள்வியல்ல' என்று குறிப்பிட்டார். இதையடுத்து, `அப்படியென்றால் முணுமுணுக்காமல் அமைதியாக இருங்கள். தனியாக உத்தரவை பிறப்பித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி, `இக்கோர்ட்டில் மேற்கொண்டு எந்தப் பணிகளும் இன்றைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது’ என்றபடி நீதிபதி வைஷ்ணவ் சென்றுவிட்டார்.
வழக்கறிஞர்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் நிரம்பி இருந்த கோர்ட் அறையில் இரண்டு நீதிபதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டதை யாரோ ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிட்டார். குஜராத் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் யூடியூபில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீதிபதிகள் வாக்குவாதம் செய்து கொண்ட வீடியோ அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் வீடியோ யூடியூபில் இருந்து அகற்றப்பட்டது.
அடுத்த நாள் கோர்ட்டுக்கு வந்த நீதிபதி வைஷ்ணவ், `முந்தைய விசாரணையின்போது நடந்த சம்பவம் இனி நடக்காது. என் மீதுதான் தவறு. அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். புது செஷனை ஆரம்பிக்கலாம்’ என்று தெரிவித்தார்.
from Latest news
0 Comments