ரேங்க்கிங் டாஸ்க் என்பது முன்பெல்லாம் தெருக்கூத்து மாதிரி விடிய விடிய நடக்கும். ஆனால் இந்த முறை இவர்கள் அடித்த கூத்து காரணமாக பிக் பாஸிற்கே போரடித்து சீக்கிரம் முடித்து துரத்திவிட்டார். Ranking Task, Pranking Task மாதிரி அபத்தமாக முடிந்துவிட்டது.
இந்த சீசனின் வித்தியாசமான அம்சமே இரண்டு வீடுகள்தான். இரண்டு தரப்பும் தனித்தனியாக நின்று எதிரும் புதிருமாக மோத வேண்டும். ஆனால் ‘சோற்றில் உப்பு இல்லை’ என்கிற உப்பு பெறாத காரணத்திற்காக ‘நான் அத்தை வீட்டுக்குப் போறேன்’ என்கிற மாதிரி மாயா பையைத் தூக்கிக் கொண்டு சின்ன பிக் பாஸ் வீட்டிற்குக் கிளம்பியது அராஜகம். ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கலாம். ஆனால் அதன் அடிப்படையே ஆட்டம் காண்பது போல் செய்யக்கூடாது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
ரேங்க்கிங் டாஸ்க் தொடர்ந்தது. ஆறாவது இடத்தில் மணி சென்று நிற்க, "நாலாவது இடம் காலியா இருக்கு. அங்க நான் நிக்கறேன்" என்று பஸ்ஸில் சீட் பிடிப்பது மாதிரி சுரேஷ் கிளம்ப, அப்போதுதான் விசித்ராவிற்கு எதிர்ப்புணர்ச்சி உள்ளுக்குள் இருந்து ஆவேசமாகக் கிளம்பியது. "அதெல்லாம் நான் விட மாட்டேன்" என்று ஆட்சேபத்தைக் கிளப்ப, நிக்சனும் அக்ஷயாவும் இணைந்து சுரேஷின் இடத்தை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘ம்ஹூம். இது வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்த பிக் பாஸ், 'கொஞ்ச நேரம் டைம் தரேன். ஆளாளுக்கு எங்கயாவது போய் நின்னு தொலைங்க. பஸ்ஸர் அடிச்சப்புறம் அதுதான் ஃபைனல்’ என்று கடுப்பாக அறிவித்தார். வாக்கெடுப்பில் நான்காவது இடம் யுகேந்திரனுக்குக் கிடைத்தது. என்றாலும் "நான் இலவசமா தரேன். சாப்பிட்டுப் போங்க” என்றபடி ஏதோ தான் விட்டுக் கொடுத்தது போலவே எரிச்சலுடன் கிளம்பிச் சென்றார் சுரேஷ்.
ஒருவழியாக இந்தப் போங்காட்டம் நிறைவிற்கு வந்தது. முதல் இடத்தில் மாயா, இரண்டாம் இடத்தில் விக்ரம் (எதே?!), மூன்றாம் இடத்தில் நிக்சன் என்று இந்த வரிசை அமைந்தது. கோபித்துக் கொண்டு தனது பதவியை ரிசைன் செய்து விட்டுப் போன பிரதீப் கடைசி இடத்தில் நின்று கொண்டிருநதார். இந்த வரிசையிலும் கூட மணியும் ரவீனாவும் அடுத்தடுத்துதான் நின்று கொண்டிருந்தார்கள். (மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!)
அன்பு என்னும் டிராமா - கிண்டலடித்த பூர்ணிமா!
‘டைட்டில் உனக்கு, துட்டு எனக்கு’ என்று மாயாவும் பிரதீப்பும் டீல் போட்டுக் கொண்ட விதத்தை விஷ்ணு கிண்டலடித்துக் கொண்டிருந்தார். ‘அன்பு என்னும் டிராமா’ என்கிற தலைப்பில் தானும் இணைந்து அதை பங்கம் செய்தார் பூர்ணிமா.
தன்னைச் சுற்றிய உலகத்தில் எது நடந்தாலும் அதைப் பற்றி கவலையே படாமல், தங்களுக்கான பிரத்யேக உலகத்தில் வாழ்வதை மணி - ரவீனா கூட்டணி எப்போதும் நிறுத்துவதில்லை. அவ்வப்போது கூடி தாழ்ந்த குரலில் பேசி பரஸ்பரம் ரத்தம் வர பிறாண்டிக் கொள்கிறார்கள். அதிலும் முரட்டு காதலன் மாதிரி மணி செய்யும் அட்ராசிட்டிகள் சசிக்கவில்லை. “நாம எது பண்ணாலும் குறை சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. 'அப்படித்தான்… என்ன இப்போ?’ன்னு இனிமே இருக்கப் போறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார் ரவீனா.
விசித்ரா, ரவீனாவிற்கான ஒப்பனைப் பொருள்களை திருப்பியளித்தார் பிக் பாஸ். கடிகார முள் மாதிரி மணியுடன் எப்போதும் ஒன்றாக இருப்பதைப் பற்றி ரவீனாவிடம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார் விசித்ரா. “நிக்சனும் இதைப் பத்தி என்கிட்ட முன்னாடி கேட்டான். ஆனா இப்ப அவனே ஐஷூ கிட்டதான் அதிக நேரம் செலவழிக்கிறான். அது ஓகேவா?" என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தார் ரவீனா.
சதியாலோசனை செய்யும் பெண்கள் கூட்டணி!
‘ரகிட... ரகிட...’ என்னும் ரகளையான பாடலுடன் நாள் 26 விடிந்தது. மக்கள் இறங்கிக் குத்தி ஆவேசமாக ஆடினார்கள். Three Musketeers மாதிரி ஐஷூ, மாயா, பூர்ணிமா கூட்டணி கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைப் பற்றி ரகசிய ஆலோசனை செய்து கொண்டிருந்தது.
50 லட்ச ரூபாய் டீல் பற்றி மாயாவிடமே நேரடியாகக் கிண்டலடித்தார் விஷ்ணு. உண்மையில் அது கிண்டலடிக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் அதுவொரு நல்ல ஸ்ட்ராட்டஜி என்று மாயா நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. ‘அது எப்படி நான் தந்த பிராமிஸை நீங்க சந்தேகப்படலாம்?’ என்று ஆரம்பித்து குரலை உயர்த்த பரஸ்பர ஈகோ பிறாண்டலுடன் ஒரு சண்டை நடந்து முடிந்தது.
ஆனால் மாயாவின் நெருங்கிய தோழியான பூர்ணிமாவும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார். "நீங்க டீல் பேசும் போது எனக்கு சிரிப்பா வந்தது" என்று பூர்ணிமா சொல்ல “அது அறியாமை. நானும் பிரதீப்பும் ஏற்கெனவே இது பத்தி பேசி இருக்கோம்” என்று வாதாடினார் மாயா. பெரும் புதையல் கிடைப்பது போல் கனவு காணும் ஒரு மோர் வியாபாரி, அந்த உற்சாகத்தில் மோர்க்கூடையை காலால் உதைத்து அன்றைய வியாபாரத்தை இழந்த கதைதான் நினைவிற்கு வருகிறது. "நாம பெண்கள் கூட்டணி ஒண்ணா சேர்ந்து சின்ன வீட்டுக்குப் போவோம். அப்ப தனியாத் தெரிவோம்” என்கிற பிளானைச் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடக்குமா?
‘ஜெயிச்சா சோறு... இல்லைன்னா வெறும் நீரு’...
ஷாப்பிங் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘ஜெயிச்சா சோறு... இல்லைன்னா வெறும் நீரு’ என்கிற டாஸ்க். இதில் பெரிய வீடு போராடித் தோற்றது. "உங்க ஸ்போர்ட்டிவ்னஸைப் பாராட்டறேன். ஆனா அதுக்காக சோறெல்லாம் கொடுக்க முடியாது” என்று கெத்து காட்டினார் பிக் பாஸ். "ஏதாவது டிஸ்கவுண்ட் கொடுங்க” என்று வழக்கம் போல் செல்லம் கொஞ்சி சலுகையை வாங்க முயன்றார் பூர்ணிமா. ஆனால் இந்த முறை பிக் பாஸ் இதற்கு மசியவில்லை. (டிஸ்கவுண்ட்டா வாங்கி வாங்கி நம்மள போண்டியாக்கிடுவாங்க போல!)
‘நம்ம வீட்ல சோறு நல்லால்ல... அத்த வீட்ல மீன்குழம்பு சமைச்சிருக்காங்களாம்! வாங்க அங்க போவோம்...’ என்பது போல துணிகளை எடுத்துக் கொண்டு சின்ன பிக் பாஸ் வீட்டிற்குப் பயணம் கிளம்பினார் மாயா. கூத்தில் கோமாளி போல நடந்து கொள்ளும் சுரேஷூம், “தங்கச்சி. என்னை விட்டுப் போயிடாத. நானும் வரேன்" என்று அவரும் பையைத் தூக்கிக் கொண்டார். ‘மணி இருக்கும் இடம்தான் எனக்கு தாஜ்மஹால்’ என்பது மாதிரி இவர்களுக்கு முன்னால் ஓடிச்சென்றார் ரவீனா.
“இதோ பாருங்க... சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு அங்க போகாதீங்க. பிக் பாஸ் அத்தனையொன்னும் கொடூரமானவர் இல்ல. சாப்பாடு தருவாரு. என்னவொன்னு நமக்கு சொரணை வரதுக்காக உப்பில்லாம தருவாரு. அவ்வளவுதான். அதைச் சாப்பிட்டு உயிர் வாழலாம். திரும்பி வந்துடுங்க. சொன்னா கேளுங்க... அங்க எப்படிச் சாப்பிடறீங்கன்னு நானும் பார்த்துடறேன்" என்று கெஞ்சலும் மிரட்டலுமாக கேப்டன் பூர்ணிமா விதம் விதமாகச் சொன்னாலும் அந்த பிஞ்சு முகத்தில் டெரர் எக்ஸ்பிரஷன் கடைசி வரை வராமல் அடம் பிடித்தது.
வீடு ஷிப்ட் ஆகி விதிமீறல் செய்த அராஜகம்
'நீங்க வாங்க... மூட்டைத் தூக்கியாவது நான் உங்களுக்கு சோறு போடறேன்’ என்று கிளம்பியவர்களுக்கு உற்சாகம் அளித்தார் நிக்சன். பூர்ணிமாவின் ஆட்சேபத்தை இடது கையால் ஹேண்டில் செய்த பிரதீப் “இது எங்க வீடு. இங்க வரவங்களை நாங்க தடுக்க மாட்டோம். எதிரியா இருந்தாலும் சோறு போடுவோம். வந்தாரை வாழ வைக்கும் பூமி இது” என்று கையில் சிவப்புத் துணியைக் கட்டிக் கொண்டு உரிமைக் குரலை தேவையில்லாத இடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 'இவன் என்ன... கோவம் வராப்பலயே காமெடி பண்ணிட்டிருக்கான்’ என்று காண்டானார் விஷ்ணு.
“இந்த விதிமீறலுக்கு நிச்சயம் தண்டனை இருக்கு. கருடபுராணத்தின் படி கடுமையா இருக்கப் போவுது. நேரடியா நாமினேஷனுக்கு கூட அனுப்பிடலாம்” என்பது போன்ற பேச்சுக்கள் உலவியதால் மாயாவும் சுரேஷூம் ஜெர்க் ஆனார்கள். ‘அப்படியா சொல்றீங்க?’ என்றபடி சென்ற வேகத்தில் திரும்பி வந்தார்கள். (இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.) ஆனால் ரவீனா மட்டும் அசரவில்லை. ‘மணி இருக்கற அதே இடத்துலதான் நானும் இருப்பேன்’ என்கிற மாதிரி நகராமல் பிடிவாதம் பிடிக்க, லாரியில் இருந்து மூட்டையைக் கீழே தள்ளுவது மாதிரி ரவீனாவை அந்தப் பக்கமாகத் தள்ளினார் பிரதீப்.
இந்த ராவடிகள் ஒருவழியாக அடங்கியதும் ‘இது தப்பாச்சே... வீடு அமைதியா இருக்கக்கூடாதே’ என்றபடி ஒரு தனியாவார்த்தனத்தைத் தொடங்கினார் பிரதீப். தானே கிளம்பி பெரிய வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தார். “பெரிய வீட்டுக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு. அப்படில்லாம் நீங்க டக்குன்னு இந்த வீட்டு ஆளா மாறிட முடியாது” என்று நாட்டாமை பூர்ணிமா சொல்லியும் பிரதீப் அடங்கவில்லை. ‘அதெல்லாம் பிக் பாஸ் சொல்லட்டும். நீ கம்முனு கெட’ என்கிற மாதிரி சொல்லி, பின்குறிப்பில் தனது பிராண்ட் சிரிப்பை உதிர்த்தார்.
அடுப்பை அணைத்து கெத்து காட்டிய பிக் பாஸ்
“பிக் பாஸ்... பிக் பாஸ்... தெரியாமல் எல்லைத் தாண்டி பக்கத்து தேசத்திற்கு தப்ப முயன்ற சில அகதிகளை எனது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் திரும்பக் கொண்டு வந்து சோ்த்திருக்கிறேன். அதைப் பாராட்டும் விதமாக சோறு, டீ. காஃபி போன்றவற்றை தர முடியுமா?" என்று கேமரா முன்னால் கெஞ்சிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ஏனெனில் அந்த வாக்குறுதியைச் சொல்லித்தான் மாயாவை அவரால் திரும்ப அழைத்துக் கொண்டு வர முடிந்தது. 'இருங்க. காஃபில உப்பு போட்டுத் தரேன்’ என்பது பிக் பாஸின் எரிச்சலான மைண்ட் வாய்ஸாக இருக்கலாம். கத்தரிக்காய் குழம்பில் காஃபி பொடி போட்டவருக்கு இதுதான் சரியான ரியாக்ஷன்.
இப்படி இரு வீட்டாரும் கன்னாபின்னாவென்று விதிமீறல் செய்து எல்லை தாண்டி விளையாடியதால் பயங்கரமாகக் காண்டானர் பிக் பாஸ். சின்ன வீடு சமையலை ஆரம்பிக்க முயலும் போது ‘நீங்க படிக்கற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்று சொல்வதைப் போல எரிவாயு இணைப்பைத் துண்டித்து விட்டார். “நாங்க என்ன தப்பு பண்ணோம்... எங்களுக்கு ஏன் இந்த தண்டனை?" என்று நிக்சன் கேட்டது காமெடி. ‘இங்க வாங்க... நல்லா பார்த்துக்கறோம்’ என்று சொன்னது யாரு?
இப்படியாக ஊரே சோற்றுப் பிரச்னைக்காக அல்லாடிக் கொண்டிருந்த போது லாங் ஷாட்டில் ஒரு ஜோடி அவர்களின் வழக்கமான பிரச்னைக்காக மல்லுக் கட்டிக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பசிக்காது போலிருக்கிறது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் மணியைச் சமாதானப்படுத்துவதிலேயே ரவீனாவின் பெரும்பாலான நேரம் கழிந்து விடுகிறது. பார்க்கும் நமக்கே எரிச்சல் வரும்படியாக இம்சை செய்கிறார் மணி. “உன்னை அடிச்சா எனக்கு வலிக்கும்ன்னு அவங்க நினைக்கறாங்க. அப்படி இல்லைன்னு காண்பிக்க விரும்பறேன். அதனாலதான் உன்கிட்ட இருந்து தள்ளிப் போறேன். அது சும்மாதான்" என்று என்னதான் சமாதானம் சொன்னாலும் ஏதோ வயிற்று வலியால் அவதிப்படுபவர் போலவே முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் மணி.
பிரதீப் - விஷ்ணு - பேய்க்கும் பேய்க்கும் சண்டை!
பிரதீப்பின் பெரிய வீட்டு என்ட்ரியைப் பார்த்து எரிச்சலான விஷ்ணு, ‘ரைட்டு… சனியன் சைக்கிள்ல வருது. இதை எப்படியாவது துரத்தணும்’ என்று முடிவு செய்து கொண்டார் போலிருக்கிறது. இருவருக்குமான ஈகோ உரசல் உச்சத்தை எட்டியது. “நீ போட்ட டீல் எல்லாம் அதிகப்பிரசங்கித்தனம். மக்கள் உன்னை அடிச்சு வெளிய அனுப்பப் போறாங்க. அவங்களை இளக்காரமா நெனக்கறே... எல்லோருக்கும்தான் இங்க பிரச்னை இருக்கு. நீ மட்டும்தான் அழுது அனுதாபம் தேடற... நான் காசு தரேன். வெளியே போடா டம்மி பீஸூ” என்றெல்லாம் இறங்கி அடித்துக் கொண்டிருந்தார் விஷ்ணு. அவருடைய கச்சோிக்குப் பக்க வாத்தியமாக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் விசித்ரா.
“அது என் இஷ்டம்... அப்படித்தான் பண்ணுவேன்" என்றெல்லாம் சற்று நேரம் விஷ்ணுவை வெறுப்பேற்றி மல்லுக்கட்டிய பிரதீப், ஒரு கட்டத்தில் ‘ஏதாவது செய்...’ என்று பாடிய படியே அகன்று சென்றுவிட்டார். "இவனோட ஒரு பயங்கரமான மேட்டர் ஒண்ணு இருக்கு. கமல் சார் எபிசோடு வரட்டும். அங்க வெச்சுக்கறேன். கச்சோிய..." என்று அனத்திக் கொண்டிருந்தார் விஷ்ணு. (என்னவா இருக்கும்!).
மதிய நேரத்தைத் தாண்டியும் உப்பில்லாத சோறு வரவில்லை. சின்ன வீட்டில் அடுப்பும் எரியவில்லை. விசித்ரா உள்ளிட்டவர்களுக்கு பசி. கேப்டன் ஏதாவது செய்தாக வேண்டும். ‘வீடு மாறிச் சென்றவர்கள் அவரவர்களின் இடத்திற்குத் திரும்பாமல் பிக் பாஸ் துரும்பை கூட அசைக்க மாட்டார்’ என்பது பூர்ணிமாவிற்கு புரிந்து விட்டது. எனவே மீண்டும் தனது ராஜதந்திர நடவடிக்கைகளை ஆரம்பித்தார். ரவீனாவையும் பிரதீப்பையும் காலில் விழாத குறையாகக் கெஞ்சி சம்மதிக்க வைத்தார். ஆனால் சோற்றுப் பிரச்னைக்கு நடுவிலும் மணி - ரவீனா கூட்டணி தங்களின் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்ததுதான் கொடுமை.
ஒரு வழியாக சோறு வந்தது. அடுப்பு எரிய ஆரம்பித்தது. வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் வேடிக்கை பார்த்து தான் நினைத்ததை சாதித்த பிக் பாஸ் உண்மையிலேயே அறிவாளிதான். “உன்னைப் பார்க்கும் போதெல்லாம் விஷ்ணுவோட கண்ணுல பல்ப் எரியுது. நெஜம். நான் பார்த்தேன்” என்று பூர்ணிமாவிடம் மாயா சொல்ல, இதற்கு வெட்கப்படுவதா அல்லது வேண்டாமா என்பது மாதிரி பூர்ணிமா அமர்ந்திருந்தார். (அப்ப விக்ரமோட கதி?!)
‘கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கு ஐந்து கொடுமைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த கதையாக’ இவர்கள் செய்யும் ராவடிகள் போதாதென்று இந்த வாரத்தில் மேலும் ஐந்து புது என்ட்ரிகள் வரப்போகிறார்களாம். இனி என்னவாகுமோ?
from Latest news
0 Comments