Ticker

6/recent/ticker-posts

Ad Code

இஸ்‌ரேல்-ஹமாஸ் யுத்தம் 5: பாலஸ்தீனர்களுக்கு பரிவு; இஸ்ரேலுடன் உறவு; இந்தியாவின் அரசியல் சாமர்த்தியம்

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் பேசினார், நம் பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் தாக்குதலுக்கு அதிர்ச்சி தெரிவித்த மோடி, ‘‘இக்கட்டான இந்தத் தருணத்தில் இஸ்ரேல் மக்களுக்காக இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்’’ என்று சொன்னார். ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் பிரதமர் நரேந்திர மோடி.

உலக அரங்கில் இது உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் பெரும்பாலான தருணங்களில் பாலஸ்தீன மக்களின் பக்கமே இந்தியா நின்றிருக்கிறது. இப்போது திடீரென இஸ்ரேல் பக்கம் சாய்ந்துவிட்டதோ என்று பலரும் அதிர்ச்சியுடன் இந்தியாவின் நிலைப்பாட்டை கவனித்தார்கள். இரு நாட்டு உறவுகளைத் தாண்டி பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் மோடிக்கு தனிப்பட்ட நட்பும் ஆழமாக உள்ளது. அதன் வெளிப்பாடாக இது இருக்கலாம் என்றும் சிலர் காரணம் சொன்னார்கள்.

ஆனால், அடுத்த இரு நாட்களில் இந்திய வெளியுறவுத் துறை ஓர் அறிக்கை வெளியிட்டது. ‘‘இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டிக்கிறோம். அதேசமயத்தில், பாலஸ்தீன மக்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துடன் சாத்தியமான ஒரு சுயாட்சி அரசை அமைக்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு’’ என்றது அந்த அறிக்கை. பிரதமர் மோடி ஒருவித நிலைப்பாட்டிலும், வெளியுறவுத் துறை வேறுவித நிலைப்பாட்டிலும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

நரேந்திர மோடி

அடுத்த சில நாட்களில் காஸா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, ‘‘இரு தரப்பு மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயம். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்தார். அதுபோலவே காஸாவுக்கு இந்திய நிவாரணப் பொருட்கள் உடனே போய்ச் சேர்ந்தன.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நிலப்பரப்புடன் இந்தியாவுக்கு இருக்கும் அரசியல்ரீதியான தொடர்பு என்பது நூற்றாண்டு கடந்தது. முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்திருந்த ஏராளமான இந்திய வீரர்களும் பங்கெடுத்தனர். துருக்கியை ஆண்ட ஒட்டோமான் பேரரசுடன் பிரிட்டிஷ் ராணுவம் நடத்திய யுத்தத்தில், இந்திய வீரர்களே அதிகம் பங்கேற்றார்கள். 1917-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் காஸா போரில் ஒட்டோமான் பேரரசு மற்றும் ஜெர்மனி படைகள் தோற்றுப் பின்வாங்கின. பாலஸ்தீன நிலப்பரப்பை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் கைப்பற்றுவதற்காகப் போரிட்டவர்கள் இந்திய வீரர்கள்தான்.

பெஞ்சமின் நெதன்யா

ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் சுதந்திர இந்தியா தெளிவான முடிவுகளை எடுத்தது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் இஸ்‌ரேல் என்ற நாடு புதிதாக உருவான நேரத்தில், இந்தியா அதை எதிர்த்தது. பாலஸ்தீன அரேபியர்களுக்காகவும் இஸ்‌ரேலின் யூதர்களுக்காகவும் அந்த நிலப்பரப்பை துண்டாடி ஐ.நா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அரபு நாடுகளைத் தாண்டி அந்த தீர்மானத்தை எதிர்த்த ஒரே நாடு இந்தியாதான். ‘பாலஸ்தீனர்களும் யூதர்களும் சுயாட்சி உரிமையுடன் வாழும் ஒரு கூட்டாட்சி அரசு அங்கு இருக்க வேண்டும், ஜெருசலேம் நகருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் கருத்தைப் பின்பற்றி நேரு அரசின் கொள்கை முடிவு இருந்தது. ஹிட்லரின் ஆட்சியில் நாஜிக்களிடம் யூதர்கள் சந்தித்த கொடுமைகள், வரலாறு நெடுகவும் அந்த இனம் சந்தித்த பிரச்னைகள் என்று எல்லாவற்றுக்காகவும் காந்தி அனுதாபம் காட்டினாலும், ‘பாலஸ்தீனத்தின் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆறு லட்சம் அரேபியர்களுக்கு அநீதி இழைத்துவிட்டு அங்கு இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்குவது தவறு’ என்றார். நேரு அதைக் குறிப்பிட்டு, ‘‘பாலஸ்தீனப் பிரச்னைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே காரணம்’’ எனக் குற்றம் சாட்டினார்.

இவ்வளவுக்கும் மத்தியில் இஸ்ரேல் என்ற நாடு உருவானது. மூன்றே ஆண்டுகளில், அதாவது 1950-ம் ஆண்டே இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்தது. சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனாலும் 1992-ம் ஆண்டு வரை இஸ்ரேலுடன் தூதரக உறவு ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்த நாட்டை ஒதுக்கியே வைத்திருந்தது.

Nehru

அதற்கு இரண்டு காரணங்கள்... அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நடந்த காலங்களில் இஸ்ரேலை ஆதரித்தது அமெரிக்கா. அருகில் இருக்கும் அரபு நாடுகளின் பக்கம் நின்றது சோவியத் யூனியன். அப்போது இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்து நடுநிலை வகித்தாலும், பல விஷயங்களில் ரஷ்யாவைச் சார்ந்திருந்தது. அதனால் இஸ்ரேலுடன் உறவுக்குத் தயாராக இல்லை. இன்னொரு பக்கம், அரபு நாடுகளுடன் இந்தியாவுக்கு இணக்கமான வர்த்தக உறவு இருந்தது. அரபு உலகமே வெறுக்கும் இஸ்ரேலுடன் உறவு கொண்டாடி, அரபு நாடுகளின் கோபத்துக்கு ஆளாகவும் இந்தியா தயாராக இல்லை.

யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை, பாலஸ்தீன மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவ அமைப்பாக 1974-ம் ஆண்டே இந்தியா அங்கீகரித்தது. அரபு நாடுகளைத் தாண்டி இப்படி அங்கீகரித்த முதல் நாடு இந்தியாதான்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக் காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், துணிச்சலாக முடிவெடுத்து இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். அரபு நாடுகளின் அதிருப்தி பற்றிக் கவலைப்படாமல் இந்த முடிவை அவர் எடுத்தார். அதேசமயத்தில் பாலஸ்தீனர்களின் சுயாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் கொள்கையிலிருந்து அவர் நழுவவில்லை.

யாசர் அராபத்

மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்து பாலஸ்தீன சுயாட்சி அரசு அறிவிக்கப்பட்டபோது, அதை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1988-ம் ஆண்டே பாலஸ்தீன அரசை இந்தியா அங்கீகரித்தது. 1996-ம் ஆண்டில் காஸா பகுதியில் இந்தியப் பிரதிநிதியை நியமித்து அலுவலகமும் திறந்தது. பாலஸ்தீன அரசின் தலைமையகம் காஸாவிலிருந்து மேற்குக்கரையில் உள்ள ரமல்லா நகருக்கு மாற்றப்பட்டபோது, இந்தியப் பிரதிநிதி அலுவலகமும் அங்கு மாற்றப்பட்டது. பாலஸ்தீனத்துக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். 2018-ம் ஆண்டு அங்கு சென்ற மோடி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்பினார். அங்கு அவருக்கு பாலஸ்தீனத்தின் மிக உயரிய விருது அளிக்கப்பட்டது.

என்னதான் அடுத்த நாடுகளின் பிரச்னைகளில் துணை நின்றாலும், ஒரு தேசத்தின் வெளியுறவுக் கொள்கை என்பது அவர்களின் சொந்த நலன்கள் சார்ந்தே இருக்கும். இந்தியா அந்த அடிப்படையில்தான் இஸ்ரேலுடன் உறவு கொண்டாடுகிறது. பெருமளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்துக்கான தற்காப்பு உபகரணங்களை இப்போது இஸ்‌ரேலிடமிருந்து வாங்குகிறது இந்தியா. அதேசமயத்தில் பாலஸ்தீனத்துக்கான ஆதரவையும் கைவிடவில்லை.

ஐ.நா சபை போன்ற பொதுவான இடங்களில் பாலஸ்தீனப் பிரச்னை பேசப்படும்போது இந்தியா அவர்களுக்காகத் துணை நிற்கும். ஆனால், அதுபோன்ற விவாதங்களில் பாலஸ்தீனத்தையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் பேசும். இந்தியா மட்டுமே இதைக் கடுமையாக எதிர்க்கும். ‘இந்த இடத்தில் இது தேவையில்லாத பேச்சு, இரண்டையும் ஒப்பிடுவது தவறு’ என்று அரபு நாடுகளும் பாகிஸ்தானைக் கண்டிப்பதில்லை. அதனால் இந்தியா பேசுவதைக் குறைத்துக்கொண்டது. அதேசமயத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராபத், காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரித்தார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் மோடி

இப்படிப்பட்ட சூழலில்தான் பாலஸ்தீன விவகாரத்தில் அடிக்கடி இந்தியாவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. சமீபத்தில் அப்படி உச்சரித்தவர், சவுதி இளவரசர்களில் ஒருவரான துர்கி பின் ஃபைசல் (Turki bin Faisal). சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை தலைவரான அவர், அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் பேசியது சமீபத்தில் உலக கவனம் பெற்றது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அதைக் கண்டித்து அவர் பேசினார். அதேசமயம் இஸ்ரேலையும் சமமானதொரு தராசில் நிறுத்தியிருந்தார். ‘‘இந்த இரு நாடுகளின் முரண்பாட்டில் யாரும் ஹீரோக்கள் இல்லை, பாதிக்கப்பட்ட அபலைகள்தான் மிச்சம் இருக்கிறார்கள்’’ என்று முடியும் அவரது பேச்சு.

துர்கி பின் ஃபைசல் (Turki bin Faisal)

‘‘எந்தக் காரணமும் இல்லாமல் ஹமாஸ் அமைப்பு இஸ்‌ரேலியர்களைத் தாக்கியது என்று மேற்கத்திய உலகம் சொல்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் செய்துவரும் மிக மோசமான ஒடுக்குமுறையைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? ராணுவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருக்கும் எல்லா நிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு அதை எதிர்த்து எல்லாவிதங்களிலும் போராட உரிமை உண்டு. பாலஸ்தீன மக்கள் அதையே செய்கிறார்கள். பாலஸ்தீனர்கள் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்படும்போது கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய நாடுகளின் அரசியல்வாதிகள், இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனர்கள் கொல்லப்படும்போது குறைந்தபட்சமாக வருத்தம்கூட தெரிவிப்பதில்லை. எப்போதும் நடப்பது இதுதான்.

அதற்காக ஹமாஸ் நடத்திய தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. அப்பாவிப் பொதுமக்களை ஆயுதங்களால் கொல்வது இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது. அந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸா பகுதியில் அப்பாவிகளை குண்டுவீசிக் கொல்கிறது இஸ்‌ரேல். மேற்குக்கரையில் கரணமே இல்லாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரையும் கைது செய்கிறது’’ என்று குற்றம் சாட்டினார் துர்கி அல் ஃபைசல்.

‘‘பாலஸ்தீனத்தில் ஆயுதங்கள் மூலம் தீர்வை எட்ட முடியாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவில் நடந்தது போன்ற மக்கள் கிளர்ச்சியும் ஒத்துழையாமை இயக்கமும் மட்டுமே பாலஸ்தீனர்களுக்கு விடுதலை வாங்கித் தரும். அதுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவில் வீழ்த்தியது. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் தலையீட்டை இல்லாமல் ஆக்கியது’’ என்று யோசனை சொன்னார் அவர்.

இதுபோன்ற அமைதிப் போராட்டத்தை இஸ்‌ரேல் எப்படி எதிர்கொள்கிறது? காதர் அட்னன் (Khader Adnan) மரணம் அதை உணர்த்தும். பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியில் உள்ள மேற்குக் கரையில் பிறந்தவர் அட்னன். இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு 45 வயதாகி இருக்கும். கணிதப் பட்டதாரியான அவர் ஒரு பேக்கரி வைத்திருந்தார்.

காதர் அட்னன் (Khader Adnan)

கல்லூரி காலத்தில் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பில் இணைந்தார் அவர். அடுத்த சில நாட்களிலேயே இஸ்ரேல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ‘‘நான் இந்த அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அரசியல்ரீதியிலான போராட்டங்களை மட்டுமே செய்கிறேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்தார் அட்னன். அதன்பின் விடுதலை செய்யப்பட்டார். இப்போது வரை ஆயுதக்கலகம் செய்ததாக அவர்மீது இஸ்ரேல் அரசுகூட குற்றம் சாட்டியதில்லை.

கடந்த 2011 வரை எட்டு முறை இப்படி அடிக்கடி கைது செய்யப்படுவதும், சில நாட்களில் விடுதலை ஆவதுமாக அவர் வாழ்க்கை தொடர்ந்தது. 2011 டிசம்பர் 17-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டபோது, அவர் மனைவி ராண்டா அட்னன் கர்ப்பிணியாக இருந்தார். ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ என்று சொல்லியே பாலஸ்தீனர்களைக் கைது செய்யும் இஸ்ரேல் அரசு. அப்படிக் கைது செய்யப்பட்டால், அதற்கு காரணமும் சொல்ல வேண்டியதில்லை, கைதானவர்களுக்கு சட்ட உதவியும் கிடைக்காது.

18 நாட்கள் விசாரணை என்ற பெயரில் அவர் இஸ்ரேல் ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டார். ‘நான் ஆயுதக் கலகம் செய்யாதவன், அமைதிவழிப் போராட்டத்தை விரும்புகிறவன். என்னை இப்படிச் செய்கிறீர்களே?’ என்று கேட்டு அவர் சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக 66 நாட்கள் உண்ணாவிரதம். இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேற்குக்கரையிலும் காஸாவிலும் அட்னனுக்காக மக்கள் போராட்டங்கள் வெடித்தன. கடைசியில் இஸ்ரேல் அரசு பணிந்து அவரை விடுதலை செய்தது. பாலஸ்தீனக் கைதிகள் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதுண்டு. அப்படி மிக நீண்ட காலம் போராட்டம் நடத்தியவராக காதர் அட்னன் அறியப்பட்டார்.

அதன்பின் 2014-ம் ஆண்டு இதேபோல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் அட்னன். அதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் போராட்டங்களை நடத்திவந்த அவரை 2023 பிப்ரவரி 5-ம் தேதி மீண்டும் கைது செய்தது இஸ்ரேல் அரசு. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார், வன்முறையைத் தூண்டினார் என்று குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டார். ‘நான் அப்படி எந்தத் தவறும் செய்யவில்லை, என்னைக் கைது செய்தது தவறு’ என்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் அட்னன். 87 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மே 2-ம் தேதி இறந்து போனார்.

அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பாக Physicians for Human Rights Israel என்ற அமைப்பைச் சேர்ந்த இஸ்ரேல் டாக்டர்கள் குழு ஒன்று சிறையில் அவரைப் போய்ப் பார்த்தது. ‘அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றுங்கள்’ என்று என்று இஸ்ரேல் அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், ‘அவர் சாப்பிட மறுக்கிறார், மருத்துவப் பரிசோதனைகளையோ, மருந்துகளையோ மறுக்கிறார். எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?’ என்று அலட்சியமாக பதில் சொன்னது இஸ்ரேல் சிறைத்துறை.

ஆயுதம் ஏந்தியவர்களும் கொல்லப்படுகிறார்கள், அமைதி வழியில் போராடினாலும் மரணமே பரிசு, அப்பாவிகளும் பலியாகிறார்கள் என்ற சுடும் நிஜம்தான் ஹமாஸ் போன்ற அமைப்புகளை அங்கு உருவாக்கியது. ஹமாஸின் கதை என்ன?

(நாளை பார்க்கலாம்…)



from Latest news

Post a Comment

0 Comments