பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல், பதற்றம் காரணமாக, அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டிருக்கிறது. தர்பங்கா நகரில் பஜார் சமிதி சௌக் பகுதியில் ஒரு மதவழிபாட்டுத் தலத்தின் அருகே இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மதரீதியான ஒரு கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.
அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதையொட்டி, இரு தரப்பினரிடையே ஜூலை 23-ம் தேதி மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
போலீஸாரும் உள்ளூர் நிர்வாகமும் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுதிருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதல் சம்பவத்தையொட்டி, தர்பங்கா மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதிவரை இணையதள சேவை தடைசெய்யப்பட்டிருக்கிறது.
அதே மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு மயானம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக, இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ச்சை நிலவிவந்திருக்கிறது. அந்த விவகாரம், தற்போது மோதலாக மாறியிருக்கிறது.
ஸ்ரீகாந்த் பாஸ்வான் என்பவர் உடல்நலமின்றி இறந்திருக்கிறார். குறிப்பட்ட மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ந்தபோது, மல்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் வந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, கற்களால் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில், சில போலீஸார் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் தலையிட்ட பிறகு, அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் எரியூட்டப்பட்டிருக்கிறது.
இந்த இரு சம்பவங்களும் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சமூகத்தில் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளை சமூகவிரோத சக்திகள் பரப்பியிருக்கின்றன. எனவே, அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், “பொது அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமூகவிரோதிகள் பொய்த் தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக இணையதள சேவை முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தனர். மேலும், “மத வழிபாட்டுத்தலம் அருகே மற்றொரு மதத்தின் கொடியை ஏற்றியது தொடர்பாக 13 பேரும், ஒருவரது இறுதி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்” என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சமூகத்தில் வெறுப்பையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்திகளைப் பரப்பப்படுவதைக் கண்காணிப்பது தொடர்பாக தர்பங்கா மாவட்டத்தில் 44 சைபர் காவல்நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் ராம நவமி ஊர்வலங்களின்போது பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, பீகாரில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் அந்த மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தர்பங்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்றத்தை போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக களத்தில் இறங்கி தணித்திருக்கிறார்கள். வன்முறை மேலும் பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
from Latest news
0 Comments