வடசென்னையில் சாலையார் மற்றும் கிள்ளியப்பன் ஆகிய இரு ரவுடி கேங்களிடம் மோதல் நிலவி வருகிறது. இதில் சாலையார் கேங்கில் புதிதாகத் திருமணமான 'துரை' (மாறா) எனும் அடியாள் திருந்தி வாழ முற்படுகிறான். ஆனால் கிள்ளியப்பன் தங்கையின் கணவரைக் கொன்ற வழக்கில் துரை கோர்ட்டில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் துரைக்குப் பதிலாக அதே ஏரியாவில் டைலரிங் வேலை செய்து வரும் அவரது நண்பன் தனா (ரிஷி) அந்த வழக்கில் ஆஜராவதாகத் தெரிவிக்கிறார்.
இதனிடையே தனாவின் தம்பியான மண்ணு (உதய் கார்த்திக்), ஏரியாவில் 'Die No Sirs' என்ற சங்கத்தை வைத்துக் கொண்டு லந்து செய்யும் இளைஞராக இருக்கிறார். இப்படி இருந்தாலும் ரவுடி கேங்கில் சேர்ந்து அடியாள் ஆகும் எண்ணம் அவருக்குக் கிடையாது. இந்நிலையில் தனா, துரைக்குப் பதிலாக ஆஜராக, வெளியே இருக்கும் துரை, கிள்ளியப்பன் அடியாட்களால் அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்படுகிறார். இதற்குத் தற்செயலாக மண்ணும் ஒரு காரணமாக அமைகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதை வடசென்னை பின்னணியில் வைத்துச் சொல்லியிருப்பதே இந்த டைனோசர்ஸ் (Die No Sirs) படத்தின் கதை.
பைக் ஸ்டன்ட் செய்வது, பெண்களை ஸ்டாக் செய்வது, குடித்துக் கொண்டு குடைச்சல் கொடுப்பது என அறிமுகப்படத்திலே பொறுப்பற்ற கதாநாயகன் என்கிற இத்தியாதி பாத்திரத்தில் நடித்துள்ளார் உதய் கார்த்திக். ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தாலும் போகப் போகக் கதாபாத்திரத்தோடு பொருந்திப் போகிறார். வழக்கமான என்ற சொல்லே அழுத்துப் போகும் அளவுக்கு டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் நாயகி ஸ்ரீ பிரியா தேவா.
நியாயமான கோபக்காரராகவும், நண்பனுக்காக உதவும் பரிவுள்ளம் கொண்டவராகவும் ரிஷி கவனிக்க வைக்கிறார். சண்டைக் காட்சிகளில் கோபத்தையும், எதிரியிடம் மாட்டிக்கொண்டோம் என்ற பதற்ற உணர்வினையும் சிறப்பாகக் கடத்தியுள்ளார் மாறா. சாலையாராக வரும் மனெக்க்ஷா தனக்குக் கொடுக்கப்பட்ட வில்லன் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயற்சி செய்துள்ளார். கிள்ளியப்பனாக வரும் கவின் ஜெய் பாபு இடைவேளைக்கு முந்தைய அந்தப் பரபரக் காட்சியில் சிறப்பாக ஸ்கோர் செய்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வித்தியாசமான குரலில் மாஸ் வசனம் பேசுகிறார் 'திருமலை' படத்தின் இயக்குநர் ரமணா, ஆனால் கதைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் புரியவில்லை.
ஆரம்பத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகத்தை வைத்து காட்சிகள் நகர்கின்றன. அதில் கதாநாயகன் கதாநாயகியின் மேல் காதல் வருவதற்காக வைத்த காட்சிகள் அபத்தத்தின் உச்சம். புதுமையாகவும் எதுவுமில்லை என்பதைத் தாண்டி நம்மைச் சோதிக்கவும் செய்திருக்கிறது. இடைவெளியை நெருங்கும் முன்னர் ஒருவழியாகக் கதைக்குள் வந்தார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன். அதில் கொலைகாரனைக் கண்டுபிடிக்க வைக்கப்பட்ட ஸ்கெட்ச் காட்சிகள் விறுவிறுப்பு விருந்து. ஆனால், அதன் பின்னர் அம்மாதிரியான விறுவிறுப்பான காட்சி ஒன்றுகூட எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான் சோகம்.
இருந்தும் ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை வேலை செய்திருக்கிறது. வசனங்கள் சில இடங்களில் முகம் சுளிக்க வைத்தாலும், "மதுரைல எங்க சுனாமி வந்துச்சு, எப்போ சுவிமிங்க போட்டீங்க", "அது என்னடா உதவி செய்றவன் எல்லாம் மறைமுகமாவே செய்றீங்க" என்பது போன்ற வசனங்கள் ரகளை. வடசென்னை என்றாலே கெட்டவார்த்தை என்ற பொதுமைப்படுத்துதலைக் குறைந்திருந்தாலும், கஞ்சா, போதை, ரவுடியிசம் என்ற மற்ற வழக்கங்களை அப்படியே தொடர்ந்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி.ஆனந்த் கிணற்றிலிருந்து வானத்தைக் காட்டும் காட்சியிலும், ஒரு சிறு அறைக்குள் நடக்கும் ஸ்கெட்ச் காட்சியிலும் ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டுள்ளார். அதேபோல அந்த ஸ்கெட்ச் காட்சியில் படத்தொகுப்பும் பதற்றத்தினை அதிகரித்தது. இருந்தாலும் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் கத்திரி போட வேண்டிய காதல் காட்சிகள் எக்கச்சக்கமாகப் பாக்கி இருந்தன. போபோ சசி இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. சண்டைக் காட்சிகளில் மட்டும் பின்னணி இசை கவனம் பெறுகிறது. 'Graffiti' ஓவியம் வரையப்பட்ட கிணறு, யதார்த்தத்துக்கு நிகராகச் சிறையைக் காட்டியது எனக் கலை இயக்குநர் வலம்புரிநாதன் பெயரைத் தேட வைக்கிறார். சேஸிங் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் ஸ்டன்னர் சாம் கவனம் ஈர்க்கிறார்.
வடசென்னை பின்னணியில் வந்த எக்கசக்க படங்களில் மோசமான சித்திரிப்பைப் பார்த்திருக்கிறோம். இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. புறக்கணிக்கப்பட்ட மக்களைக் காட்சிப்படுத்தும் போது எதற்காக அந்த மக்கள் அந்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் ஒரு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளிக்கு இருக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி, ஒரு சிலரின் பேராசைக்கு மக்கள் சிதைக்கப்படுவதைக் காட்டும் கதையமைப்பில், சாலையார் யார் அவரது பின்னணி என்ன, அவரால் ஏமாற்றப்படும் கதாபாத்திரங்களின் பின்புலம் (வடசென்னை ரவுடி என்பதைத் தவிர) என்ன, என்பதில் எல்லாம் சரியான தெளிவு இல்லை.
“என் கையிலேயே பொருள கொடுக்கப் பாக்கறீங்களா”, “ஏரோப்ளேன் நிழல்தான் நம்ம ஏரியா மேல விழுது, ஏரோப்ளேன்ல பறக்கணும்” என்ற வசனங்கள் வன்முறைக்கு எதிராகவும், முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும் இருப்பது ஆறுதல். இருப்பினும் திரைமொழியில் அதைச் சரியாகக் கொண்டு செல்லத் தவறியுள்ளார் இயக்குநர்.
மொத்தத்தில் முதல் பாதியில் கேங்ஸ்டர் படமாகக் கொண்டுசெல்ல விருப்பப்பட்டு, இரண்டாம் பாதியில் வன்முறையைக் கையில் எடுக்காமல் வேறு மாதிரியாகக் கொண்டு செல்லலாம் என்ற புது முயற்சி எடுத்திருக்கிறார்கள். அது முழுமையாகக் கைகொடுக்காமல் போனதால் இந்த டைனோசர்ஸ் (Die No Sirs) ஒரு முயற்சியாக மட்டும் திருப்திப்பட்டுக்கொள்கிறது.
from Latest news
0 Comments