சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர்.
அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டுவிட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார். சீனாவில் இப்படி நிறைய இளைஞர்கள் முழு நேரப் பிள்ளைகளாக வேலை செய்து வருகிறார்களாம்.
சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த 29 வயதான ஜூலி என்ற பெண் கேம் டெவலப்பராக வேலை செய்து வந்துள்ளார். அவர் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழலில் இருந்துள்ளார். இதனால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளான ஜூலி, தற்போது தன் வேலையை விட்டுவிட்டு 2,000 யென்களுக்கு தன் பெற்றோர்களுக்கு முழு நேர மகளாக இருந்து வருகிறார். அவர் தினமும் வீட்டில் பாத்திரங்களைக் கழுவது, பெற்றோருக்கு உணவு தயாரிப்பது மற்றும் பிற வீட்டு வேலைகளைச் செய்வதில் தன் நாளைக் கழிக்கிறார். ஜூலியின் பெரும்பாலான அன்றாட செலவுகளுக்கு அவரின் பெற்றோர் பணம் தருகின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு முன் அவர் செய்த 16 மணி நேர வேலையில் இருந்து விடுபட்டு மூச்சு விடுவதற்கு தற்போது நேரம் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஜூலி.
``நான் இதற்கு முன்னர் நடைபிணம் போல வாழ்ந்து வந்தேன், வேலை, வேலை வேலை இது மட்டுமே என் உலகமாக இருந்தது ஆனால், தற்போது என் பெற்றோர்களுக்கு மகளாக தினமும் மாறுபட்ட வேலைகளைச் செய்கிறேன். ஓய்வெடுக்கிறேன், பெற்றோருடன் சுற்றுலா செல்வது, வீட்டு வேலைகளைச் செய்வது என மிகவும் நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறேன்.
என் ரோபோ வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுப்பதற்காக தற்போது இதைச் செய்து வருகிறேன். மற்றொரு புறம் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக அமையவில்லை. என் வேலையை விடும் முன் புதிய வேலை தேடிய பின்னரே அதை விட வேண்டும் என நினைத்தேன். ஆனால், புதிய வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது, தற்போது வேலையை விட்ட பிறகு அது இன்னும் கடினமாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான் 40-க்கும் மேற்பட்ட வேலை விண்ணப்பங்களை அனுப்பிவிட்டேன். ஆனால், இதுவரை எனக்கு இரண்டு நேர்காணல் அழைப்புகள் மட்டுமே வந்துள்ளன. இங்கே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது” என வேதனையுடன் பேசியுள்ளார்.
சீனாவில் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லாமல் உள்ளது. அங்கு இளைஞர்களின் வேலையில்லா விகிதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி சீனாவில் வேலையில்லாதவர்களின் விகிதம் 21% ஆக அதிகரித்துள்ளது. மிதமான உள்நாட்டு நுகர்வு, தனியார் தொழில்துறையின் பின்வாங்கல் மற்றும் போராடும் வணிக சந்தை, கொரோனாவால் அடிபட்ட பொருளாதாரம் என அனைத்தும் சேர்ந்து சீனாவில் மிக அதிகமான வேலையில்லா திண்டாட்ட நிலையை உருவாக்கியுள்ளது.
from Latest news
0 Comments