திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் கன்னிமார் கோயில் கொழிஞ்சிகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அதே பகுதியில் தோட்டத்தை ஒப்பந்தம் எடுத்து அங்கு பட்டி அமைத்து 50 பன்றிகளை வளர்த்து வருகிறார். இவரின் மனைவிக்கு வளைகாப்பு என்பதால் கடந்த சில நாள்களுக்கு முன் பொள்ளாச்சியில் உள்ள கோவில்பாளையத்துக்கு சென்றுவிட்டார். பின்னர் பண்ணைக்கு வந்து பார்த்தபோது, அங்கிருந்த 20 பன்றிகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து சந்தோஷ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மூலனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், மினி வேனில் 20 பன்றிகளுடன் 6 பேர் சென்றதை கண்டறிந்த மூலனூர் போலீஸார் வண்டியின் பெயர் பலகை மற்றும் வண்டியின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், பழைய தாராபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (32), மணிகண்டன் (24) ,ராசுகுட்டி (25) , ரமேஷ் குட்டி(25), விஜயகுமார்(33) , தவசியப்பன் (29) ஆகிய ஆறு பேர் பன்றிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருடப்பட்ட 20 பன்றிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்த மூலனூர் போலீஸார், 6 பேரை தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
from Latest news
0 Comments