பொதுவாக, எலெக்ட்ரிக் கார் / பைக்குகள்தான் அங்கங்கே எரிவதுதான் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. இப்போது, பெட்ரோல் / டீசலில் இயங்கும் ICE (Internal Combustion Engine) கார்களும் பைக்குகளும்கூட எரியத் தொடங்கிவிட்டதுதான் கொஞ்சம் கிலியாக இருக்கிறது.
சிலர் இதைக் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள்; சிலர் சோஷியல் மீடியாக்களில் இதை வைரலாக்கி விட்டு விடுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேருவதுதான் நல்லது.
அப்படித்தான் சமீபத்தில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வழியாகப் போய்க் கொண்டிருந்த குல்தீப் சிங் என்பவர், தனது காரில் இருந்து முதலில் புகை வருவதைக் கண்டு தயக்கமாகி நின்றிருக்கிறார். நல்ல வேளையாக – இறங்கிப் பார்த்த வேளையில், திடீரென அந்தக் கார் தீப்பிடித்து கபகபவென எரிந்து, அந்த ஏரியாவே புகை மண்டலமாகி இருக்கிறது. அது ஒரு மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான எக்ஸ்யூவி 700 எனும் டீசல் கார். ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட இது எப்படி எரிந்தது என்று தெரியவில்லை என்கிறார் குல்தீப் சிங்.
Thank You Mahindra For Risking My Family's Life With Your Most Premium
— Kuldeep Singh (@ThKuldeep31) May 21, 2023
Product (XUV700).
The Car Catches Fire While Driving On Jaipur Highway.
The car did not overheat, smoke came in the moving car, then it caught fire.@anandmahindra @MahindraRise @tech_mahindra @ElvishYadav pic.twitter.com/H5HXzdmwvS
கார் எரிவதை வீடியோ பதிவாக எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மஹிந்திரா நிறுவனத்துக்கு… மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா போன்றவர்களுக்கு Tag செய்திருக்கிறார் குல்தீப் சிங்.
‘‘எனது குடும்பத்தை ஆபத்தில் தள்ளியதற்கு உங்களுக்கும், உங்களின் ப்ரீமியமான எக்ஸ்யூவி 700 காருக்கும் நன்றி மஹிந்திரா! ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, திடீரென கார் தீப்பிடித்திருக்கிறது. ஓடும் வழியிலேயே காரில் இருந்து புகை வந்தது. இத்தனைக்கும், கார் ஓவர்ஹீட் ஆகவில்லை. அதன் பிறகு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது!’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார் குல்தீப். ஆனால், நல்லவேளையாக – இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயங்களும் இல்லை என்பது மகிழ்ச்சி!
கார் எரிந்து கொண்டிருந்த கொஞ்சம் நேரம் வரைக்கும் ஹெட்லைட்களும் எரிந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் குல்தீப். இப்போது இன்ஷூரன்ஸ் நஷ்டஈடுக்காகக் காத்திருக்கிறார் இவர்.
‘‘இந்தியத் தயாரிப்புகளை வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது; இதுபோன்ற பாதுகாப்பு விஷயங்களை சீரியஸாகக் கையிலெடுக்க வேண்டும்!’’
‘‘நான் ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா போன்ற ஜெர்மனி கார்கள் பயன்படுத்துகிறேன். இதுபோன்ற எந்தப் பிரச்னையும் வந்ததில்லை!’’
‘‘இந்திய கார் நிறுவனங்களின் தயாரிப்புகளில் மட்டும்தான் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கின்றன!’’
என்று இந்தப் பதிவுக்கு வெரைட்டியாக ரிப்ளைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று நடந்த இந்தச் சம்பவம் பற்றி மஹிந்திரா நிறுவனம், எந்தப் பதிலும் சொல்லவில்லை.

இந்த எக்ஸ்யூவி 700 கார், ஒரு ப்ரீமியம் கார். இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ. 25 –29 லட்சம் வரை வருகிறது. இத்தனைக்கும் இந்த காரை வாங்கி 6 மாதங்கள்தான் ஆகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் இந்தக் கார் உரிமையாளர். இந்தியாவில் இப்போது பாதுகாப்பில்… அதாவது குளோபல் என்கேப் எனும் அமைப்பு நடத்தும் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி வருகின்றன மஹிந்திரா கார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றாலும் இதன் மூலம், ‘காருக்கு க்ராஷ் டெஸ்ட் மட்டும் முக்கியம் இல்லை; இது போன்ற பாதுகாப்புச் சோதனைகளும் முக்கியம்’ என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் சொல்கின்றன.
ஆனால், கார்கள் தீப்பிடிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எரிபொருள் லீக் ஆவது, எலெக்ட்ரிக் மால்ஃபங்ஷன்கள், அதிகமாகச் சூடாகும் இன்ஜின் பாகங்கள் என்று பல விஷயங்களால் கார்கள் தீப்பிடிக்கலாம். இப்படித் தயாரிப்பைத் தாண்டி இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது – மாடிஃபிகேஷன்கள். அப்படித்தான் சென்ற ஏப்ரல் மாதத்தில், புனேவில் ஒரு டாடா நெக்ஸான் கார் ஒன்று தீப்பிடித்தது. நல்லவேளையாக இதிலும் யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், எரிந்து போன நெக்ஸான் ஒரு எலெக்ட்ரிக் கார். இதில் பேட்டரியில் பிரச்னை இல்லை; அந்த உரிமையாளர் காரை ரீ–மாடிஃபிகேஷன் செய்திருந்திருக்கிறார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதாவது, காருக்கு ஹெட்லைட்டை தனியாரிடம் மாட்டியிருந்திருக்கிறார் அந்த வாடிக்கையாளர். அதுதான் தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்லியிருந்தது டாடா. இது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுதான். ஆத்தரைஸ்டு நிறுவனங்களிடம் இல்லாமல் இது போன்ற தனியார் மெக்கானிக்குகளிடம் கொடுத்து ஒயரிங்கில் கை வைக்கும்போதும் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த வாடிக்கையாளர் வெளியே தனது காரை ரீ-மாடிஃபிகேஷன் செய்யவில்லை என்கிறார். காரணம், இது ஒரு பிராண்ட் நியூ கார். இந்த காரை வாங்கி 6 மாதங்கள்கூட ஆகவில்லையாம். மேலும், கார் ஓவர்ஹீட் ஆனதற்கான எந்த இண்டிகேஷனும் தனது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் வரவில்லை என்றும் சொல்கிறார் அவர். அப்படி இருக்கும்போதும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
அதேநேரம், கார் தயாரிப்பு நிறுவனங்களும் டீலர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
லேட்டஸ்ட்டாக ஒரு சம்பவம் – டெல்லியில் உள்ள மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரின் உரிமையாளர் ஒருவர் தனது காரை சர்வீஸுக்கு விட்டிருக்கிறார். அடுத்த நாளில் அந்த காரின் உரிமையாளர், தனது கார் சாலையில் திரிவதைக் கண்டு, கனெக்டட் வசதி கொண்ட காரை மொபைலில் ட்ராக் செய்தபோது, தன் ஸ்கார்ப்பியோவை சர்வீஸ் டீலர் ஊழியர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதற்குப் பயன்படுத்தியது தெரிய வந்திருக்கிறது. இப்படி சர்வீஸ் மற்றும் டீலர்களும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மஹிந்திரா கார்கள், இப்போது வெயிட்டிங் பீரியடிலும் பெயர் போனவையாக இருக்கின்றன. ஒரு எக்ஸ்யூவி 700 கார் வாங்க வேண்டும் என்றால், சுமார் 16 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். எப்படியும் குல்தீப்பும் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியடில்தான் இந்த எக்ஸ்யூவியை வாங்கியிருப்பார். இன்ஷூரன்ஸ் தொகை கிடைப்பதற்கும் அவர் வெயிட்டிங் பீரியடில் இருப்பாரா என்று தெரியவில்லை.
from Latest news
0 Comments