`காலியாக இருக்கும் ஒரு பதவிக்கு ஒருவரை நியமிக்கும் ஒவ்வொரு முறையும், நூற்றுக்கணக்கானவர்களை மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்குகிறேன்; ஒருவரை நன்றி கெட்டவராக ஆக்குகிறேன்.’ - பிரெஞ்ச் அரசர் பதினான்காம் லூயி
பதவி... யாருக்குத்தான் பிடிக்காது... ஐந்நூற்றுச் சொச்சம் மக்கள் வாழும் பகுதிக்கு கவுன்சிலர் ஆவதற்கே பன்னிரண்டு பேர் போட்டி போடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, அமைச்சர், முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதிப் பதவிகளைப் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். இவ்வளவு ஏன்... நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் இரண்டு பேர் பேசிக்கொள்ளும்போது நலம் விசாரிப்புக்குப் பிறகு, `என்ன பண்றீங்க?’, `என்னவா இருக்கீங்க?’ என்பதாகத்தான் உரையாடல் தொடரும். பதவி... நீக்கமற மனிதர்களுக்குள் பரவிவிட்ட, தவிர்க்க முடியாத ஓர் அம்சம். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட `பதவி’யை மிகச் சரியாகப் பயன்படுத்திய மனிதர்களையும், அதை துஷ்பிரயோகம் செய்து சம்பாதித்த மனிதர்களையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது; பார்த்துக்கொண்டிருக்கிறது. `ஐயா, எனக்கு இந்தப் பதவி வேணாமே...’ என நாசுக்காகத் தவிர்த்த மனிதர்கள் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். அப்படி வரலாறு படைத்தவர், கல்கி. பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர் `கல்கி’ என அழைக்கப்பட்ட இரா.கிருஷ்ணமூர்த்தி.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-07/1275004d-6101-41b5-9266-8a215dd46568/22360.jpeg)
`ஆந்திரகேசரி’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர், தங்குதுரி பிரகாசம் (Tanguturi Prakasam). சுருக்கமாக, `த.பிரகாசம்.’ 1946-ம் ஆண்டு, சென்னை மாகாணத்தின் பிரதமரானார் பிரகாசம். அப்போதெல்லாம் மாகாணத்தின் தலைவர்களை (முதலமைச்சர்) `பிரதமர்’ என்று அழைப்பதுதான் வழக்கம். பதவியேற்று ஓராண்டுதான் ஆகியிருக்கும். அதற்குள் பிரகாசத்துக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கும் இடையே ஏதோ கருத்து முரண்பாடு. பிரச்னை தொடர்ந்துகொண்டேயிருக்க, அன்றைய காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் பிரகாசத்தைத் தோற்கடித்து, வெற்றிபெற்றார் `ஓமந்தூரார்’ எனப்படும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். பிரகாசம், சென்னை மாகாண பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அன்றைய காலத்தில் தலைவர்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள், தன்னலம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஓமந்தூராரும் ஓர் உதாரணம்.
ஏற்கெனவே அவர், பிரகாசத்தின் அமைச்சரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். சிறப்பாகச் செயலாற்றியவர். அன்றைக்கு ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கு, சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவர் ஓமந்தூரார்தான் என்று தோன்றியது.பொ
காமராஜர், ராஜாஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் மூவரும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்கச் சொல்லி ஓமந்தூராரை வலியுறுத்தினார்கள். அவருக்கோ தயக்கம். அதற்கான காரணத்தை வெளிப்படையாகவே சொன்னார். ``ஐயா... நீங்க சொல்றதைச் சொல்லிட்டீங்க. முதலமைச்சரா இருக்கணும்னா ஆங்கில மொழி அறிவு சிறப்பா இருக்கணும். எனக்கோ ஆங்கிலத்துல பேச மட்டும்தான் தெரியும். பிழையில்லாம எழுதத் தெரியாது’’ என்று சொல்லிப் பார்த்தார். முதலமைச்சர் ஆவதற்கு மொழி ஒரு பிரச்னை இல்லை என்று அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்த, மூன்று மாத கால அவகாசம் கேட்டார் ஓமந்தூரார். ஒருநாள் திருவண்ணாமலைக்குப் போனார். ரமண மகரிஷியைப் பார்த்தார். ரமணர் ஆசி வழங்கிய பிறகே முதல்வர் பதவியை ஏற்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-02/7501cd4f-be09-4d32-bd01-a6a6e4caa2d6/601e41da0823e.jpg)
ஓமந்தூராருக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியை மிகவும் பிடிக்கும். அவருடைய நண்பர். அறிவாளி. எழுத்தாளர். `கல்கி’ பத்திரிகையின் ஆசிரியர். அதோடு, தன் எழுத்துகள் மூலமும், `பொன்னியின் செல்வன்’ நாவலின் மூலமும் ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார் கல்கி. அவர் தன்னுடைய அமைச்சரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஓமந்தூராருக்குத் தோன்றியது. அமைச்சராக வரும்படி அழைப்பு விடுத்தார் ஓமந்தூரார்.
அழைப்பு கிடைத்தவுடன் கல்கிக்கு என்ன செய்வதென்று முதலில் தெரியவில்லை. தன் நெருங்கிய நண்பரான டி.கே.சி-யிடம் (டி.கே.சிதம்பரநாத முதலியார்) ஆலோசனை கேட்டார். டி.கே.சி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்... ``அமைச்சர் பதவி என்பது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், இப்போது நீங்கள் வகித்துவரும் `கல்கி’ இதழின் ஆசிரியர் பதவி காலமெல்லாம் தொடரும். இரண்டில் எது உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.’’
அதற்கு மேல் கல்கி யோசிக்கவில்லை. தனக்கு அமைச்சர் பதவி வேண்டாமென்று ஓமந்தூராரிடம் நாசுக்காகச் சொல்லித் தவிர்த்துவிட்டார். அதற்கு பதிலெழுதிய ஓமந்தூரார் அந்தக் கடிதத்தின் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிட்டார்... `சில பேர் மந்திரி உத்தியோகம் கிடைக்காவிட்டால் கடலில் விழுந்துவிடுவார்கள்போல் தெரிகிறது. நீங்கள் என்னவென்றால், நானாகக் கொடுக்கின்ற மந்திரி பதவியைக்கூட வேண்டாம் என மறுத்துவிட்டீர்கள். ஆகையினாலே, உங்கள்மீதுள்ள மதிப்பு இன்னும் அதிகமாகிறது...’
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/4bf8e451-dae7-4b55-a579-bb6b225aa5bf/3g.jpg)
சில பெரிய தலைகளுக்குள் நடந்த விவகாரம் என்றாலும், இந்த விவகாரம் வெளியில் கசிந்தது. இது குறித்து வாசகர் ஒருவர், `ஏன் மந்திரி பதவி வேண்டாம் என்றீர்கள்?’ என்று கல்கி பத்திரிகைக்குக் கேள்வியே எழுதி அனுப்பினார். அதற்கு கல்கி, `கல்கி பத்திரிகைக்கு ஆசிரியராக இருப்பதைக் காட்டிலும் மந்திரி பதவி பெரிதா என்ன?’ என்று பதிலளித்தார். ஒருவர் கொடுப்பது பெரிது; அதை வேண்டாம் என்பது அதைவிடப் பெரிது என்கிற உதாரண வாழ்க்கை வாழ்ந்தவர் கல்கி. இந்த நிகழ்வை பேராசிரியர் தி.இராசகோபாலன், `நெருஞ்சி மலர்கள்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதே நிகழ்வை தனக்கேயுரிய பாணியில், `சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் சுதந்திரப் போராட்ட வீரரும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலை. ஆக, கல்கி மந்திரி பதவியை உதறித் தள்ளியது உண்மை.
தன்னிலை அறிந்து, தனக்கு இதுதான் வேலை; இதுதான் தன் வாழ்க்கை என உறுதியான முடிவெடுப்பவர்கள் வரலாற்றில் பேசப்படுகிறார்கள்; காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். கல்கியின் `ஏட்டிக்குப் போட்டி’, `பார்த்திபன் கனவு’, `சிவகாமியின் சபதம்’, `பொன்னியின் செல்வன்’ போன்ற அவரின் காலத்தில் அழியாத சிறந்த படைப்புகள் உருவானதற்குக்கூட அவரின் குண இயல்புதான் காரணம் என்றே தோன்றுகிறது!
from Latest News
0 Comments