சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவில் 15 - 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள், கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கிறார்கள் என்கிறது.
2047-ல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற லட்சிய இலக்குடன் நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்களின் மனித வளம் பயன்படுத்த இயலாத வகையில் இருப்பது, நம் நாட்டின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தல். ஒருபுறம் நிறுவனங்கள், திறன் கொண்ட தகுதியான இளைஞர்கள் கிடைப்பதில்லை என்கின்றன. மறுபுறம், கையில் டிகிரியை வைத்துக்கொண்டு இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். இதற்கு இடையில் நமது கல்வி முறை பல் இளித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியக் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட்டால் போதும் என்று நினைத்து, கடன் வாங்கியாவது பல லட்சங்களைச் செலவு செய்கிறார்கள். ஆனால், என்ன படித்தாலும் வேலை கிடைக்காது என்றால் அந்தக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்?
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புத் திறன் போதாமை இருப்பதைக் காட்டி, தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம், அதற்கான பயிற்சி வகுப்புகள் உருவாகின்றன. அது பெரும் சந்தையாகி, கட்டணம் என்ற பெயரில் மக்களை இன்னும் உறிஞ்சுகிறது. தேர்வு நடைமுறைகளில் நடக்கும் குளறுபடிகளும், மோசடிகளும் இளைஞர்களுக்குத் தண்டனையாக அமைகின்றன.
கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகிய மூன்றும்தான் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி இருக்கக் கூடாது. எனவே, பள்ளியில் தொடங்கி கல்லூரிகள், பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் வரையிலான ஒட்டுமொத்த கட்டமைப்பையுமே சீர்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
2047-ல் வளர்ந்த இந்தியாவாக மாறுவது புதிய சாலைகள், விமான நிலையங்கள், பெரிய முதலீட்டு அறிவிப்புகளால் மட்டும் நடக்காது. இன்று பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்குத் தரமான கல்வியும், கல்லூரி மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறனும் கிடைக்கச் செய்ய வேண்டும். பாடப் புத்தக அறிவுடன் செயல்முறை அறிவு, டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்ப அறிவு, தொழில் துறை அனுபவம் ஆகியவற்றையும் கல்வியின் பகுதியாக்க வேண்டும்.
இந்தியாவின் உண்மையான செல்வம்... இளைஞர்களின் திறனில்தான் இருக்கிறது. அதிலிருந்து விலகி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உரிய பயிற்சிகள் கிடைக்கச் செய்து, அந்த வளத்தை வளர்த்தெடுப்போம். இந்தியா வளரும்!
- ஆசிரியர்
from Vikatan Latest news
0 Comments