Ticker

6/recent/ticker-posts

Ad Code

‘‘ரூ.20 லட்சம் முதலீடு, ஒரே வருடத்தில் ரூ.60 லட்சம்... மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய நான்!’’

சிலர் கொஞ்சமாகப் பேசுவார்கள்; நிறைய செய்வார்கள். ‘இப்படிப்பட்டவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்’ எனலாம். சிலர் நிறைய பேசுவார்கள்; கொஞ்சம் செய்வார்கள் அல்லது கொஞ்சம்கூட செய்ய மாட்டார்கள். இவர்களைக்கூட ஓரளவு நம்பி விடலாம்.

ஆனால், ‘இப்படியெல்லாம் நடக்குமா’ என்று நினைக்கும் விஷயங்களைக்கூட, ‘நிச்சயம் நடக்கும்’ என்று நம் மூளையை மழுங்கடிக்கும் வகையில் உண்மைபோலவே நினைக்க வைக்கும் அளவுக்கு உதாரணங்களுடன் அடித்துவிடும் பேர்வழிகளிடம் கொஞ்சம் அசந்துபோனாலும் சரி, நாம் அவ்வளவுதான். அப்படிப்பட்ட பேச்சு வசியக்காரர் ஒருவரின் இனிக்கும் பேச்சை காதுகொடுத்துக் கேட்டதால்தான் இன்றைக்கு 30 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை சுலபமாக இழந்துவிட்டு திண்டாடி நிற்கிறேன்.

நான் இயல்பாகவே கொஞ்சம் பேராசைக்காரன். இயல்புக்கு முரணான விஷயங்களைச் செய்ய நினைப்பவன். தவறான காரியங்களை முன்யோசனையின்றி செய்துவிட்டு, பிறகு வருந்தும் சுபாவம் உள்ளவன்.

பள்ளிக்கூட நாள்களிலேயே அந்த குணம் எனக்குள் ஒட்டிக்கொண்டது. பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கும் இன்னொரு நண்பனுக்கும் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பதில் போட்டி இருக்கும்.

எங்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து என்னை உசுப்பேற்றும் நண்பர்கள் கூட்டம் எனக்கு அதிகம். நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிவிட்டால், 10 ரூபாய் தருவோம் என சில நண்பர்கள் பந்தயம் கட்டினார்கள். 10 ரூபாய் என்பது அன்றைக்கு பெரிய தொகை.

இரண்டு ஜால்ரா நண்பர்கள், ‘‘நண்பா... நீ ஜெயிக்கலேன்னா நம்ம ஊருக்கே அவமானம்டா... நீ ஜெயிக்காட்டி வேற யாருடா ஜெயிக்க முடியும்’’ என்று உசுப்பேற்றிவிட, எனக்கோ இதில் எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது.

10 ரூபாய் ஜெயிக்க வேண்டும் என்பதல்ல நோக்கம். நண்பர்கள் மத்தியில் நம்மை ஹீரோ போல காட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமாகப் பட்டது. அதற்காக குறுக்குவழியில் பிளான் போட்டேன். ‘குறுக்கு வழியில் செல்வது வெற்றிக்கு உதவாது’ என்று என் தாத்தா அடிக்கடி எனக்கு அறிவுரை சொல்வார். ஆனால், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் சூழலில் பெரியவர்களின் அறிவுரையை மறந்துவிடுவது இயல்புதானே. என் போட்டிக்காரனின் கணக்கு நோட்டை அவனுக்குத் தெரியாமல் எடுத்து கிழித்து குப்பையில் போட்டுவிட்டேன்.

ஆனாலும், அவன்தான் அந்த முறை தேர்வில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினான். என் நண்பர்கள் சிலர் மூலம் இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்துபோக, பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியர் வரை புகார் போய் அவமானப்பட்டதுதான் மிச்சம்.

இந்தக் குணம் பெரியவனாகி படித்து வேலைக்குப் போன பிறகும்கூட எனக்கு மாறவில்லை. வீட்டில் பங்கு பிரிக்கும்போதுகூட நான் செய்த அட்ராசிட்டி வேற ரகம்.

“மாப்ள, சொத்து பிரிக்கும்போது நீதி நியாயம், பாசம் பற்றுன்னு விட்டுக்கொடுத்துடக் கூடாது. சாணக்கியனா இருக்கணும். நீ நிஜமாவே சாணக்கியன்டா...” என்று சிலர் ஏற்றிவிட்டார்கள். நானும் அதையெல்லாம் தலைக்கேற்றிவிட்டு, ராஜதந்திரி போல சில தகிடுதத்த வேலைகளைச் செய்யப்போகவே, நான் செய்யும் திரைமறைவு விஷயங்களை எப்படியோ தெரிந்துகொண்ட அப்பாவோ கடுப்பாகிவிட்டார். என் அண்ணனுக்குக் கொடுத்ததைவிட குறைவான மதிப்பீட்டுச் சொத்துகள் தான் எனக்கு வந்து சேர்ந்தது.

இப்படியெல்லாம்... என் பேராசையாலும், தீயவர்களில் இனிக்கும் பேச்சுகளுக்கு மயங்கியதாலும் நான் இழந்தவை ஏராளம்.

ஆபீஸில் என் சீனியருக்குக் கிடைக்கவேண்டிய புரொமோஷனைத் தடுக்க, அவரைப் பற்றி நெகட்டிவ் விஷயங்களை சில நண்பர்களின் பேச்சைக் கேட்டு பரப்பிவிட்டேன். அவற்றை உண்மை என நம்பிவிட்ட நிர்வாகமும் சீனியரை வேலையை விட்டு நீக்கியது. சீனியரின் இடத்துக்கு நான் வந்துவிட்டேன். அதிக சம்பளத்தில் பெரிய பதவியைப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி வெகுநாள்கள் நிலைக்கவில்லை.

உண்மை கசியவே, எனக்கு வேலை பறிபோனது. சீனியரிடம் வருத்தம் தெரிவித்து பெரிய பதவியைத் தந்து நிர்வாகம் திரும்ப அழைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு வேறு நல்ல கம்பெனியில் வேலையில் உட்கார பெரிய அளவுக்கு மெனக்கெட வேண்டியதாகி விட்டது. அந்த சம்பவத்துக்குப் பிறகு வேலை பார்க்கும் இடத்தில் தகிடுதத்த வேலைகளைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால்தான் 30 வருடங்களை ஒரே கம்பெனியில் ஓட்ட முடிந்தது.

வேலை பார்க்கும்போது குடும்பச் செலவுகளுக்காக சில முறை பி.எஃப் பணத்தை எடுத்துள்ளேன். அப்படி இப்படி என நான் எடுத்துச் செலவு செய்ததுபோக, பிஃப் பணம் உள்ளிட்ட செட்டில்மென்ட் பணம் 20 லட்சம் ரூபாய் அளவுக்குக் கிடைத்தது.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டு வட்டி வருமானத்தில் செலவுகளைச் சமாளிக்கலாம், சின்னதாக ஏதாவது பிசினஸ் செய்து வருமானம் ஈட்டலாம் என திட்டம் வைத்திருந்தேன்.

‘‘நண்பா... இப்போ பெஸ்ட் மியூச்சுவல் ஃபண்டுதான். அதுல போட்டு வை. மாசாமாசம் பென்ஷன் போல பணம் எடுத்து செலவு பண்ணலாம். முதலீட்டுப் பணமும் வளரும்’’ என்று என்னுடன் பணிபுரிந்த நண்பர் சொன்னார்.

அப்போதுதான் எனக்கு அந்த திடீர் நண்பர் அறிமுகம் ஆனார்.

“ப்ரோ. செட்டில்மென்ட் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டுவச்சா பிரயோசனமே இல்ல. இவர் பென்ஷன் எக்ஸ்பர்ட். இவர் பிளான் படி கேட்டா, கால் மேல கால் போட்டு வீட்டுல உட்கார்ந்துகிட்டே மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம். முதல்ல 20 லட்சத்தை சார் சொல்ற ஸ்கீம்ல போடுங்க. ஒரே வருஷத்துல 60 லட்சம் கிடைச்சுடும். அப்புறம் மாசம் 1 லட்சம் 25 வருஷத்துக்கு சம்பளமா வரும்” என்று சொல்ல, எனக்கோ இருப்புக் கொள்ளவில்லை. உடனே திடீர் நண்பர் அறிமுகம் செய்த புதிய நபரிடம் முதலீடு செய்தேன். என்ன திட்டம், எப்படிப்பட்ட முதலீடு என்றெல்லாம் நான் கேட்கவில்லை.

மூன்றே மாதங்களில் திடீர் நண்பரையும் காணவில்லை. பென்ஷன் எக்ஸ்பர்ட்டையும் காணவில்லை. பணத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறேன்.

பேராசையும், பிறரின் உசுப்பேற்றும் பேச்சை ஆராயாமல் நம்பும் என் குணமும்தான் இந்த இழப்புக்குக் காரணம் என உணர்கிறேன்!

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்

முதலீட்டு அனுபவங்களைப் பகிருங்கள்..! - பரிசு ரூ.1,000

எஃப்.டி, தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், அஞ்சலகச் சேமிப்பு... என எதுவாக இருந்தாலும், அந்த முதலீட்டில் நீங்கள் பெற்ற லாப நஷ்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். தேர்வுபெறும் கட்டுரைக்கு சன்மானம் வழங்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி: navdesk@vikatan.com



from Vikatan Latest news

Post a Comment

0 Comments