ருத்துராஜின் இயற்பெயர் என்ன, அவரின் பூர்விகம் என்னவென்பதை சென்னை அணி நிர்வாகம் ஒரு தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஹம்சா அலி மசாரி போல ஒரு ஸ்பையாக இருப்பாரோ எனும் சந்தேகம் வலுவாக எழுகிறது. பேட்டிங்கில் சிங்கிள் டிஜிட்டை தாண்ட தகிடுதத்தம் ஆடுகிறார். ஜாலியாக அவுட் ஆகிறார். பெவிலியனுக்கு செல்லும் போது மட்டும் முகத்தை பாவமாக தொங்கப் போட்டுக் கொள்கிறார்.
இன்றைய போட்டியிலெல்லாம் சுலபமான கேட்ச்சையே டிராப் செய்திருந்தார். உங்களின் ராஜ தந்திரங்களெல்லாம் வீணாகிக் கொண்டிருக்கிறது ப்ளெமிங்கே...கொஞ்சம் உஷாராகுங்கள்.
'உனக்கும் கீழே இருப்பவர் கோடி' என கண்ணதாசன் கவிதையை போல இருந்தது சேப்பாக்கத்தில் நடந்த இந்தப் போட்டி. 'நாம்தான் மிக மோசமாக ஆடி டேபிளின் கீழே இருக்கிறோம் என்றால், நமக்கும் கீழே ஒரு அணி இருக்கிறதென சென்னை ரசிகர்கள் இந்தப் போட்டியை கொஞ்சம் குதூகலமாகத்தான் அணுகினர். ஆனால், அப்படி பத்தாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியிடம் போய் அடிவாங்கினால் இன்னும் வெட்கக்கேடாகிவிடும் என்கிற பயமும் ஒரு ஓரத்தில் இருந்தது.
சென்னைதான் முதல் பேட்டிங். ஸ்பை கேப்டனும் சஞ்சு சாம்சனும் ஓப்பனிங் வந்தார்கள். சாம்சன் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ஆடினார். 'நம்ம ஆளு இப்படியெல்லாம் ஆடமாட்டானே. சீசனுக்கு அடிக்க வேண்டிய ஒரு செஞ்சுரி செஞ்சுரியையும் போன மேட்ச்சுலயே அடிச்சுட்டானய்யா...' என்கிற சந்தேகம் சென்னை ரசிகர்களுக்கே எழுந்தது. 'மனுசனுக்கு மனுசன் நம்பி பழகுங்க சார்...உடனே கொதிச்சு பேசாதீங்க...' என்பதை போல முழித்த சாம்சன் தனது அதிரடியை தொடர்ந்தார். இன்னொரு முனையில் நம்முடைய ஸ்பை ஹம்சா ருத்து அலி மசாரி 7 ரன்களில் அனுகுல் ராயின் பந்தில் அவுட் ஆகி சென்றார். அவுட் ஆன ஸ்கோரை பாருங்கள். டீமுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாதாம். டிரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்ற பிறகு மூன்று முறை 'Thala For a Reason' என்றும் ஹம்சா ருத்து கத்தியிருக்கிறார். ப்ளெம்மிங் சார் கொஞ்சம் என்னன்னு கவனிங்க...
நம்பர் 3 இல் ஆயுஸ் மாத்ரே இறங்கினார். சீசனின் தொடக்கத்திலிருந்தே 'என் கடமை எம்.ஜி.ஆர்' பாணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என ஆடிக்கொண்டிருக்கிறார் மாத்ரே. இந்தப் போட்டியிலும் உள்ளே வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டார். 'தம்பி...தம்பி...தம்பி பீல்டு ப்ளேஸ்மெண்டுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுய்யா...' என கும்கி தம்பி ராமய்யா மாடுலேஷனில் ரஹானே மாத்ரேவின் காதில் கிசுகிசுத்து பார்த்தார். எதுவும் வேலைக்காகவில்லை. ரஹானே எங்கெல்லாம் பீல்டர்களை நிறுத்தினாரோ அதே இடத்தில் பவுண்டரியை க்ளியர் செய்தார்.
ஆத்தா...புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன். குறுக்க மண்ணு லாரி எதுவும் வராம பார்த்துக்க' மோடில் ஆடிக்கொண்டிருந்த மாத்ரே, வைபவ் அரோராவின் பந்தில் 38 ரன்களில் அவுட் ஆகினார். 'தம்பியே போயிட்டான் அண்ணனுக்கு என்னடா வேலை இங்க' என சாம்சனும் 48 ரன்களில் கார்த்திக் தியாகியின் பந்தில் போல்டை பறிகொடுத்து அவுட் ஆகினார். பெரும் பில்டப்புடன் ப்ரெவிஸ் உள்ளே வந்தார். 'சிக்குனவன் எல்லாம் சிதறப் போறீங்க' என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, 'என்னாடி இது...' என்பது போல புஸ்வானமாக ஆட்டத்தை தொடங்கினார் ப்ரெவிஸ். சென்னை அணி ஆரம்பித்த வேகத்துக்கு 230 ரன்களை எட்டியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் இன்னும் எளிதாக வென்றிருக்க முடியும். 'எது ஈசியா ஜெயிக்கிறதா...' என பெவிலியனிலிருந்து ப்ளெம்மிங் முறைத்து பார்க்க, ஹம்சா ருத்து குஷியாகினார்.
ப்ரெவிஸ், சர்ப்ராஸ் கான், துபே மூவருமே 'இந்த டீமுக்கு இவ்வளவு போதும்' என அலுத்துக் கொண்டே ஆடியதால் 192 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
சென்னை அணிக்கு ஒரு ராசி உண்டு. பெர்பார்ம் செய்யாத அணிகளெல்லாம் சென்னைக்கு எதிராக பெர்பார்ம் செய்யும். ஊர் பேர் தெரியாத ப்ளேயர் எல்லாம் சென்னைக்கு எதிராக அடித்து டான் ஆவார்கள். அப்படியொரு சம்பவத்தை கொல்கத்தை இன்றைக்கு நிகழ்த்தி விடுமோ என்று தோன்றியது. ஆனால், சென்னை பௌலர்கள் இப்போது ஓரளவுக்கு திருந்தி விட்டார்கள். 'அள்ளிப் போட்டு...' ரன் கொடுக்கும் பாணியை கொஞ்சம் கைவிட்டு விட்டார்கள். கடந்த போட்டியின் வெற்றிதான் அதற்கு சாட்சி. இந்தப் போட்டியிலும் சென்னை பௌலர்கள் அதே அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தினர். கம்போஜ், கலீல் இருவரும் பவர்ப்ளேக்குள்ளாக பின் ஆலன் மற்றும் நரைனின் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
'
நரைன் பெவிலியனுக்கு செல்லும் போது நமக்கே கொஞ்சம் கெதக்கென இருந்தது. ஏனெனில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயதிலிருந்து ஐ.பி.எல் இல் அவரை பார்த்து வருகிறேன். அவருக்கு வயசாகலையா...இல்ல எனக்கு வயசாகிடுச்சா எனும் குழப்பம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. 'உங்களுக்கும் அதே விஷயம் தோணுச்சுல்ல...' இப்போது எதற்கு சுற்றி வளைத்து எதையெல்லாமோ பேசுகிறேன் என தோன்றலாம். போட்டியில் இதற்கு மேல் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. இவரு சுமார் மூஞ்சு குமாரு...அவரு ரொம்ப சுமார் மூஞ்சு குமாரு என்பதைப் போலத்தான். ஒரே ஆச்சர்யம்...சென்னை அணி சவாலான ஸ்கோரை எட்டவில்லை. நிறைய கேட்ச் டிராப்கள், மிஸ் பீல்ட்கள், ஸ்பையின் அட்டூழியம் என இத்தனைக்குப் பிறகும் சென்னை அணி ஜெயிக்கிறது என்றால், கொல்கத்தா எப்பேற்பட்ட அணியாக இருக்குமென யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கொல்கத்தாவை மாதிரியே இன்னும் 10 அணிகளை உருவாக்கி கோடுகளையெல்லாம் அழித்துவிட்டு சீசனை மறுபடியும் தொடங்கினால் சிஎஸ்கே ஒரு கம்பேக் கொடுத்து கோப்பையை தட்டலாம். இன்றைய போட்டியில் பெரிய சுவாரஸ்யமே இல்லை. 'நீ சிங்கம்தான்...' பாட்டை டைம் அவுட்டில் போட்டு வேஸ்ட் ஆக்கிக் கொண்டிருந்தார் DJ. அடுத்த போட்டியிலிருந்து தோனி ஆடாவிட்டாலும், சும்மாவாது க்ரவுண்டுக்கு அழைத்து வந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைக்குமாறு ரசிகர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். ஹம்சா ருத்துவின் சேட்டைகளை அவராவது கண்டுபிடிக்கக் கூடும்.
from Vikatan Latest news
0 Comments