வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தமிழ்நாட்டில், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுவது என்பதை பல வருடங்களாக பார்த்து வருகிறோம். கேட்டால், அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது என்று சொல்வார்கள்.
இது மட்டுமில்லாது, தமிழ்நாட்டில், பதிவு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, கிட்டத்தட்ட 40 அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், எண்ணற்ற சாதி மற்ற இதர சங்கங்களும் உள்ளன. பாதிக்கு மேல் தேர்தலில் நிற்பதில்லை என்றாலும், இவர்களே தன்னிச்சையாகவோ அல்லது அரசியல் கட்சிகள் இவர்களிடம் சென்றோ ஆதரவு கேட்பார்கள்.
இன்னும் சில பேர், தோற்போம் என்று தெரிந்தும் தேர்தலில் நிற்பார்கள். தனது கட்சி தேர்தலில் நிற்க இடம் கொடுக்கவில்லை, சுயேச்சை, ஒரே பெயரில் பல பேரை நிற்க வைப்பது என்று இன்னும் பல விஷயங்கள் நடக்கும்.
மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் முக்கியமான காரணம், வாக்கு எண்ணிக்கை. நமக்கு எத்தனை வாக்குகள் வருகின்றன என்பதை விட, நமக்கு வராத வாக்குகளை எப்படி பிரிப்பது என்பது தான் எல்லாவற்றிக்கும் காரணம்.
ஒவ்வொரு கட்சியும், வார்டு வாரியாக எத்தனை வாக்குகள் உள்ளன, கடந்த வருடங்களில் எத்தனை வாக்குகள் பதிவாகின. எங்கெல்லாம் வாக்குகள் சிதைத்தது என்று கணக்கு வைத்து தங்களது நகர்வை தீர்மானிக்கின்றனர்.
"எல்லாம் சரிதான், இப்ப யாருக்கு ஓட்டு போடலாம்னு சொல்ற" என்றுதானே கேட்கிறீர்கள். நான் சொல்வது நோட்டா (NOTA).
'சார். இது வேஸ்ட். 49ஓ படம் பாத்தீங்களா. அதுல கவுண்டமணி சொல்வாருல்ல. இதுல நாம ஓட்டு போட்டா, கெட்டவனுக்கு போடலேன்னு வேணா ஆறுதல் அடையலாம். அதுக்கு யாருக்காவது சுயேச்சைக்கு போடலாம்" என்கிறார்கள். "எப்படி இருந்தாலும் 100க்கு 99 பேர் நோட்டாவுக்கு போட்டாலும், அந்த ஒரு ஓட்டு யாருக்கு விழுதோ, அவங்கதான் ஜெயிப்பாங்க. அப்டிங்கும்போது ஏன் இந்த நோட்டா" என்ற கேள்வியும் வரலாம். கொஞ்சம் பொறுங்கள். படியுங்கள்.
நான் முன்பே சொன்னது தான். துக்கடா கட்சிகளும், சங்கங்களும் கூட்டணி, ஆதரவு என்ற பெயரில் செய்வது அவர்களை நம்பி இருக்கும் தொண்டர்களின் வாக்குகளை விற்பதுதான். அவர்களின் முதலீடு என்பது அவர்களின் வாக்குகள்தான். அதையே நாம் ஏன் நோட்டாவிற்கு உருவாக்கக் கூடாது? அனைவருமே நோட்டாவிற்கு போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால்,ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள், 4 வேட்பாளர்கள் முறையே 25, 20, 15, 10 ஓட்டுகள் வாங்குகிறார்கள்.
20 பேர் ஓட்டு போடவில்லை. 10 பேர் நோட்டாவிற்கு போடுகிறார்கள். இப்போது வெற்றி வாய்ப்பை மாற்றியதில் முக்கிய பங்கு அந்த வாக்களிக்காத 20 பேர், அதன் பிறகு நோட்டா.
ஒரு கட்சி வேட்பாளர் இன்னொருவரின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கிறார் என்றால், அவரை, அந்தக் கட்சியை சரிக் கட்டுவது சுலபம். நோட்டாவில் வாக்களித்தவர்களுக்கு? இதே போல நிறைய தொகுதிகளில் நோட்டா கணிசமான வாக்குகள் வாங்கினால்? வேறு வழியில்லை. மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அடுத்த முறை வேட்பாளர்களுக்கு ஓட்டு விழும். இல்லையென்றால், நோட்டாவிற்கே போகும் என்ற பயம் வரும். வர வேண்டும். இன்னும் குறிப்பாக சொன்னால், இளைஞர்கள் அனைவருமே நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்.
மக்கள் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்று வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். அதன் பிறகு, தகுதி இல்லாத ஆட்கள் ஆளுகின்றனர் என்று புலம்புவார்கள். அவர்கள் எல்லோரும் வந்து NOTAவிற்கு வாக்களித்தால் போதும்.
ஏன் வாக்களிக்க வேண்டும்:
"எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா", " நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல" என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனால் யாரும் வெளிக்காட்டாமல் "நாம சொல்றத எவன் கேப்பான்?" என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.
உப்புமா கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு கல்லூரி விடுதியில் தினந்தோறும் மாணவர்களுக்கு உப்புமாவை ஹாஸ்டல் நிர்வாகம் வழங்கி வருகிறது. உப்புமாவை மாணவர்கள் உண்ண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அணைத்து மாணவரக்ளும் சேர்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டு, போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
விடுதி மாணவர்கள், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவர்களது வேண்டுகோளை கேட்டு உள்ளனர். அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு உப்புமா வேண்டாம் எனவும், அதற்கு மாற்றாக வேறு உணவு வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர்.
விடுதி நிர்வாகம் என்ன உணவு வேண்டும் என ஒரு வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. அந்த வாக்கெடுப்பில், 7 சதவீத மாணவர்கள் ஆம்லெட் செய்துள்ளனர். 18 சதவீதம் பேர் பரோட்டா வேண்டும் எனவும், 13 சதவீத மாணவர்கள் பூரிக்கும் தங்கள் வாக்குகளை தெரிவித்து உள்ளனர்.
20 சதவீத பேர் மசாலா தோசைக்கும், 19 சதவீத பேர் இட்லி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 23 சதவீத மாணவர்கள் உப்புமாவிற்கே வாக்கு அளித்துள்ளனர். இதனால் அதிக வாக்கு பெற்று உப்புமா ஜெயித்து விட்டது.
நடைமுறையில் வாக்களிக்காத சில பேரும் இருப்பார்கள். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணுபவர்களும் இருந்திருப்பார்கள். அதே போலத்தான் இங்கும். எதுவாக இருந்தாலும் என்பதை விட, யாரும் இல்லை என்பதை தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் சரி எல்லா உணவையும் மாற்றி மாற்றி போடலாம் என்று முடிவெடுப்பார்கள். ஆனால், வாக்களிப்பது முக்கியம்.
"என் ஒருத்தன் ஓட்டு என்னத்த மாத்திட போகுது" என்று எண்ணாதீர்கள். நம் வீட்டின் சுவரில் ஒரு செங்கல் இல்லையென்றால் என்ன வீடா இடிந்து விடும்? அதே போலத்தான் நமது வாக்கும்.
கட்டாயம் வாக்களிப்போம்
from Vikatan Latest news
0 Comments