Doctor Vikatan: என் வயது 43. எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. என்ன முயற்சிகள் செய்தாலும் எடையைக் குறைக்கவே முடியவில்லை. நான் அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ள நபரும் இல்லை.
மிகக் குறைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனாலும் உடல் பருமன் குறைவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்... எடையைக் குறைக்க என்னதான் செய்வது?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.
உங்களைப் போல குறைவாகச் சாப்பிட்டாலும் சிலருக்கு எடை அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.. குறைவாகச் சாப்பிட்டாலும் அதை எரிக்கும் அளவுக்கு வொர்க் அவுட் செய்ய முடியாவிட்டால், அதையும் 'ஜங்க் ஃபுட்' கணக்கில்தான் கொள்ள வேண்டும்.
பேசல் மெட்டபாலிக் ரேட் ( BMR) என்ற கணக்கு ஒன்று இருக்கிறது. ஒருவருடைய கிட்னி, மூளை, இதயம் என ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்ய குறிப்பிட்ட அளவு ஆற்றல் அவசியம். அதற்கான கலோரிகளைக் கணக்கிடுவதுதான் பி.எம்.ஆர்.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1,600 கலோரிகள் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நபர் மதிய உணவிலேயே பலமாகச் சாப்பிட்டு, கிட்டத்தட்ட 1,000 கலோரிகளை எடுத்துக்கொள்கிறார். தவிர, காலை உணவு, இரவு உணவு என எல்லாம் சேர்ந்து அந்தக் கணக்கு 2,500 - 3,000 கலோரிகள் வந்துவிடும். அப்படிப் பார்த்தால் மதியம் அவர் சாப்பிட்டது ஜங்க் ஃபுட் என்றுதான் கணக்கிடப்பட வேண்டும்.
ஒரு நபர் சரியாக ஒரு நாளைக்கு 1,600 கலோரிகள்தான் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த 1,600 கலோரிகளை எரிக்க உடல்ரீதியான இயக்கம் இல்லாவிட்டால் அதுவும் ஜங்க் ஃபுட்டாகவே உடலில் சேரும். ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.
சராசரி எடையுள்ள ஒருவர் ஒரு மணி நேரம் நடந்தால், சாதாரணமாக 200 கலோரிகளை எரிக்க முடியும் என வைத்துக்கொள்வோம்.
அதுவே 30-40 கிலோ அதிக எடையுடன் இருக்கும் ஒருவர், தினம் ஒரு மணி நேரம் வாக்கிங் போகிறார் என்றால் அவரால் வேகமாக நடக்க முடியாது. மெதுவாகவே நடப்பார். 150 கலோரிகளைத்தான் எரித்திருப்பார்.
அன்றாட வேலைகளையும் அவரால் வேகமாகச் செய்ய முடியாது. உடலின் வளர்சிதை மாற்றம் குறையும்போது, 200 கலோரிகளை எரிக்க, அந்த நபருக்கு 6 மணி நேரம் தேவைப்படும். குறைவாகச் சாப்பிட்டாலும், எடையைக் குறைக்க முடியவில்லை எனச் சிலர் புலம்புவதன் பின்னணி இதுதான்.
உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சிகளும் மட்டும்தான் உடல் பருமனைக் குறைக்கும். எத்தனை கலோரிகள் சாப்பிடுகிறோமோ, அவற்றை எரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
அந்த நிலையில்தான் அவர்களுக்கு வேறு சப்போர்ட் தேவைப்படுகிறது. உடல்பருமனுக்கு சிகிச்சைக்காக வரும் நபரின் உயரம், எடை, பி.எம்.ஐ, வயது போன்றவற்றை முதலில் பார்ப்போம். அந்த வயதுக்கு அவர் சரியான பி.எம்.ஐ-ல் இருக்கிறாரா என்று பார்ப்போம். பிறகு உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டைப் பரிந்துரைப்போம்.
ஓரளவு உடல்பருமன் கொண்டவர்களுக்கு இந்த இரண்டின் மூலம் எடையைக் குறைக்க முடியலாம். அதீத உடல்பருமனுடன் இருப்பவர்களுக்குக் குறைந்த அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சி செய்ய உடல் ஒத்துழைக்காது.
அவர்களுக்கு மருத்துவர் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார். அது சம்பந்தப்பட்ட நபரின் வயது, உடல்வாகு, உடல் இயக்கம் எனப் பல விஷயங்களைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news
0 Comments