Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார். இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும் சொல்கிறார்.
இன்று நிறைய பேர் இந்த intermittent fasting பற்றிப் பேசுவதைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையிலேயே பலன் தருமா... அதில் எத்தனை மணி நேர இடைவெளி விட வேண்டும்?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
விரதம் என்பது காலங்காலமாக நம் மரபில் இருக்கும் விஷயம்தான். ரிஷிகளும் முனிவர்களும் பின்பற்றியதுதான். பாரம்பர்யமாக இருக்கும் விரதத்திலேயே, விரதமிருப்பதற்கு முதல் நாள் இரவு, மிதமான உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது.
அப்போதுதான் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் உண்டு. இப்படி விரதம் குறித்து பாரம்பர்யமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பல அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன.
நம் செல்களில் இருந்து குடலில் சேர்ந்த கழிவானது சாப்பிடாமல் ஓய்வு கொடுக்கும்போது தானாகவே அகற்றப்படுவதாகவும் ஓய்வே கொடுக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் நம் செல்களில் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும் என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் 16 மணி நேரம், 18 மணி நேரம் என இடைவெளிவிட்டு சாப்பிடுகிற வழக்கம் இருக்கிறது. எடைக்குறைப்புக்காக இந்த டயட் முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள்.
நம் எனர்ஜி உற்பத்தியாகிற மைட்டோகாண்ட்ரியா எனப்படும் செல் புதுப்பிக்கப்பட்டு, எடைக்குறைப்புக்கு மட்டுமன்றி, இளமைத்தோற்றத்துக்கும் எனர்ஜிக்கும் உதவுவதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் விரதமுறை எல்லோருக்கும் ஏற்றதா என்றால் அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்து முடிவுசெய்யப்பட வேண்டியது. சிலருக்குத் தினமும் ஒருவேளை சாப்பிட்டாலே நாள் முழுவதும் எனர்ஜியோடு உணர்வார்கள்.
சிலருக்கு 3 வேளை சாப்பாடு தேவைப்படும். சிலருக்கு வாரத்தில் ஒருநாள் விரதமிருந்தால்தான் உடல் லேசானதாகவும் எனர்ஜி கூடுவதாகவும் உணர்வார்கள். சிலருக்குச் சாப்பிடாமல் இருந்தால் எனர்ஜி இருக்காது, கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே, உங்கள் உடலைப் புரிந்துகொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மற்றபடி நோயின்றி வாழவும் என்றும் இளமையோடு காட்சியளிக்கவும் கலோரி குறைவான, மிதமான உணவுப்பழக்கம் ஆகச் சிறந்த முறை என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் செல்கள் முதுமையடைவது தவிர்க்கப்படும். நீரிழிவு, ரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையோடு இந்த ஃபாஸ்டிங்கைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news
0 Comments