Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: மருக்களை உதிரச் செய்யுமா அம்மான் பச்சரிசி?

Doctor Vikatan: என் நண்பனுக்கு கழுத்து, நெற்றிப் பகுதிகளில் மருக்கள் இருக்கின்றன. அம்மான் பச்சரியை அரைத்துத் தடவினால் மருக்கள் உதிர்ந்துவிடும் என ஒரு வீடியோவில் பார்த்தேன். அது உண்மையா.... மருக்களை நீக்க வேறு எளிய சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

மூலிகைமணி அபிராமி
மூலிகைமணி அபிராமி

அம்மான் பச்சரிசியினால் மருக்கள் நீங்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் பயன்படுத்தினால் நீங்காது. அதேமாதிரி அதைப் பயன்படுத்தவெனச் சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.

அம்மான் பச்சரிசி என்பது ஒருவகை தாவரம். அதைக் கிள்ளினால் அதிலிருந்து ஒரு பால் வரும். அந்தப் பாலை மருவின் மீது தொடர்ந்து வைத்து வந்தால், அந்த மரு முதலில் லேசாக உலரத் தொடங்கும். அதன்பிறகு நமக்கே தெரியாமல் அந்த மரு கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து உதிர்ந்துவிடும்.

சில நேரங்களில் அது விழுவதுகூட நமக்குத் தெரியாது. எனவே, இந்த அம்மான் பச்சரிசி மருக்களை நீக்குவதற்குச் சிறப்பாகச் செயல்படும், ஆனால், அதைத் இடைவிடாமல் செய்ய வேண்டும் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசியைக் கிள்ளிக் கிள்ளி அந்தப் பாலை மருவின் மேல் பகுதி மற்றும் அதன் கீழ் பகுதிகளில் நம் விரல்கள் படாமல் வைக்க வேண்டும். மருவைக் கிள்ளக்கூடாது என்பதும் மிக முக்கியம். மருவைச் சிலர் ஒரு பழக்கம் போலத் தொட்டுக்கொண்டே இருப்பார்கள் அல்லது அதனைச் சொறிவார்கள். அப்படி எதனையும் செய்யக்கூடாது. அதேபோல் மருவின் மேல் உரசுவது போன்ற நகைகளையோ அல்லது அதனை உறுத்தக்கூடிய ஆடைகளையோ அணியக்கூடாது.

அம்மான் பச்சரிசிப் பாலைத் தொடர்ந்து அதாவது இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து இட்டு வந்தால் மருக்கள் அனைத்தும் விழுந்துவிடும். பாலை ஒவ்வொரு முறையும் எடுத்து வைப்பது சிரமமாக இருந்தால், அம்மான் பச்சரிசியைச் சற்றே நசுக்கி அந்த விழுதை மருவின் மீது ஒரு பற்று போலவும் போடலாம்.

Representational Image

உடனடியாகப் பயன்படுத்த ஏதேனும் தேவைப்பட்டாலோ அல்லது பச்சையாக அம்மான் பச்சரிசி கிடைக்கவில்லை என்றாலோ, சித்த மருத்துவக் கடைகளில் குங்குமாதி தைலம் அல்லது குங்குமாதி லேபம் கிடைக்கும். 

நால்பாமராதி தைலம் என்பதும் கிடைக்கும். இது ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை எனப் பால் உள்ள நான்கு மரங்களின் பட்டைகளைக் கொண்டு செய்யப்படும் தைலமாகும்.

அந்த நால்பாமராதி தைலத்தைச் சிறிது வேப்பெண்ணெயுடன் கலந்து மருவின் மேல் தடவி வந்தால், மருக்கள் மெள்ள மெள்ள நீங்கும். மாயம் போல இரண்டு மூன்று நாள்களில் இது நடந்துவிடாது.

நாள்தோறும் குளிப்பதற்கு முன்போ அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன்போ உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது இந்த நால்பாமராதி தைலம் அல்லது குங்குமாதி தைலத்தைச் சற்றே வேப்பெண்ணெயுடன் கலந்து மருவின் மீது வைத்து வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

அத்தி மரம்
அத்தி மரம்

சிலர் வீட்டில் அத்தி மரம், ஆல மரம் போன்றவை இருக்கும். அந்த அத்திப்பால் அல்லது ஆலம்பால் ஆகியவற்றினை மருவின் மீது வைத்தாலும் மருக்கள் விழுந்துவிடும்.

வாய்ப்புகள் உள்ளவர்கள் இத்தகைய இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி மெதுவாக மருக்களை நீக்கிக்கொள்ளலாம். இயற்கை பொருள்கள் கிடைக்காத நகரத்தில் வசிப்பவர்கள், இந்த நால்பாமராதி தைலம், குங்குமாதி தைலம் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி மருக்களை நீக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news

Post a Comment

0 Comments