Ticker

6/recent/ticker-posts

Ad Code

ரூ.8,000 கோடி... வங்கிகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ கொள்ளை! வேலியே பயிரை மேய்வது நியாயமா?

வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் உருவாக்கப் பட்டவை. ஆனால் அதே வங்கிகள், மக்களின் பணத்தை அபராதம், கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் சுரண்டுவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்பதற்காக 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்தாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள், ரூ.8,621 கோடி அபராதமாக வசூலித்துள்ளன. இத்தகைய பெருந்தொகை மக்களின் சேமிப்புக் கணக்குகளிலிருந்து பறிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன், எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனை என்று ஒட்டுமொத்த நாட்டையும் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவந்தது, சாமான்ய மக்களிடமிருந்து அபராதம் என்ற பெயரில் சுரண்டு வதற்குத்தானா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

சம்பளம் தாமதமானதால், மருத்துவச் செலவுகள் அதிகரித்ததால், வேலை இழந்ததால் அல்லது சிறு தொழில் நெருக்கடியில் சிக்கியதால் எனப் பல காரணங் களால் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட சாமான்ய மக்களின் பணம்தான், இந்த பல்லாயிரம் கோடி அபராதம். கடன் வாங்கி செலுத்தாத கார்ப்பரேட்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஆயிரக் கணக்கான கோடிகள் ‘ரைட்-ஆஃப்’ செய்யப்படும்போது, சாதாரண மக்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கடுமை?

எளிய மக்கள் பலரும் சேமிப்புக் கணக்கை வெறுமனே சம்பளம், ஓய்வூதியம், அரசுத் திட்ட உதவிகள் போன்றவற்றைப் பெறுவதற்காகவே பயன்படுத்துகின்றனர். அத்தகைய கணக்குகளில் எப்போதும் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிப்பது சாத்தியமற்றதாக இருக்கும் சூழலில், ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ என்று கூறி, அவர்களிடம் இருக்கிற பணத்தையும் அபராதமாகப் பறித்துக்கொள்வது வேதனையான விஷயம்.

மாதம் சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு, வங்கிகள் வசூலிக்கும் சில நூறு ரூபாய் அபராதம்கூட பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு ‘மினிமம் பேலன்ஸ்’ அபராதத்தை நீக்க ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம். ‘பொதுத்துறை வங்கிகள் மட்டுமன்றி, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் இதைப் பின்பற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கியும் நிதிச் சேவைகள் துறையும் வெளியிட வேண்டும்’ என அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

சில வங்கிகள் ஏற்கெனவே சேமிப்புக் கணக்குகளுக்கு ‘மினிமம் பேலன்ஸ்’ அபராதத்தை நீக்கியுள்ள நிலையில், மற்றவை லாபத்துக்காக அதை தொடர்வது ஏற்கத்தக்கதல்ல. ரிசர்வ் வங்கி இதன் முக்கியத்துவத்தையும் நியாயத்தையும் புரிந்துகொண்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகள் லாபம் ஈட்ட பல வழிகள் இருக்கின்றன. ஆனால், தங்கள் சமூகப் பொறுப்பை மறந்து, ஏழை, எளிய மக்களின் கணக்கிலிருந்து அபராதம் எடுப்பது அறமல்ல.

- ஆசிரியர்



from Vikatan Latest news

Post a Comment

0 Comments