Ticker

6/recent/ticker-posts

Ad Code

Wayanad `அந்த நொடியை இப்போ நெனச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது' - ஒரு மாதம் கடந்தும் ரணம் ஆறாத வயநாடு

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒருமாதம் நிறைவடைந்திருக்கிறது. 400-க்கும் அதிகமானோர் கொடூரமாக உயிரிழந்த அந்த கோர பேரிடரில் காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் இருந்து அழுகிய உடல் பாகங்களை இன்றளவும் மீட்டு வருகின்றனர்‌. மீடகப்படும் உடல் பாகங்களை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பி, மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் ‌.

வயநாடு நிலச்சரிவு

மத்திய, மாநில அரசுகள் மூலம் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டும், 50 - க்கும் மேற்பட்டோரது பெயரில் உரிமை கோரக்கூட உறவினர்கள் இல்லை என்ற தகவல் சோகத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. ‌உறவுகளையும் உடமைகளையும் கண்முன்னே பறிகொடுத்து உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானவர்களின் அழுகுரல் இன்னும் ஓய்வில்லை. தற்காலிக நிவாரண முகாம்களில் இருந்த மக்களுக்கு வாடகை வீடுகளை ஏற்பாடு செய்து குடியமர்த்தி வருகிறது கேரள அரசு‌. பள்ளிகள் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளன. அரசு மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் மளிகை பொருள்கள், உடைகள் போன்றவற்றைக் கொண்டு நாள்களை நகர்த்தி வருகின்றனர். நிலையான வாழ்க்கைக்கு அரசு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில், பேரிடரில் உருக்குலைந்த புஞ்சிரி மட்டம், முண்டகை மற்றும் சூரல் மலை பகுதிகளில் ஸ்பாட் விசிட் செய்தோம்‌. பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களின் பதிவெண், ஓட்டுநரின் பெயர் முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர் ‌.

வயநாடு நிலச்சரிவு

சூரல் மலை - முண்டைகயை இணைக்க ராணுவத்தால் ஆற்றின் குறுக்கே போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்ட பெய்லி பாலம் மட்டுமே இன்றளவும் ஒரே ஆதாரமாக இருக்கிறது. பெய்லி பாலத்தை கடந்து முண்டகையை அடைந்தோம்.

பாறைகளாலும் மரங்களாலும் மூடிக் கிடந்த சாலையை மீட்பு பணிகளுக்காக சீரமைத்திருந்தார்கள்‌‌. உருக்குலைந்த வீடுகள், நொறுங்கிய வாகனங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய பொருள்கள் என வழிநெடுகிலும் குவிந்து கிடக்கின்றன . தடயமே தெரியாமல் மாயமான குடியிருப்பு பகுதிகளில் பூனைகளும் நாய்களும் உரிமையாளர்கள் வரமாட்டார்களா என உலவிக் கொண்டிருந்தன. தூரத்திற்கு ஒரு காவலர் அல்லது வனத்துறையினரைத் தவிர மனித நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன.

உருள் பொட்டல் எனப்படும் நிலச்சரிவு தன் கோரத்தாண்டவத்தைத் தொடங்கிய இடமான புஞ்சிரி மட்டத்தை அடைந்தோம். மனிதர்கள் இனி வாழ தகுதியற்ற இடமாக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் புஞ்சிரி மட்டம் ரணக்கொடூரமாக இருக்கிறது. ராட்சத பாறைகளுக்கு நடுவிலும் மண் குவியலுக்கு இடையிலும் பாடப் புத்தகங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் சிதைந்து கிடப்பதைக் கண்டு மீட்பு குழுவினர்களின் கண்களும் குளமாகியிருப்பதை பார்க்க முடிந்தது. நிலச்சரிவு தொடங்கிய இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து யாரும் செல்லாமல் 24 மணி நேரமும் காவல் காத்து வருகிறார்கள் வனத்துறையினர். கனத்த மனதுடன் சீரல் மலைக்குத் திரும்பினோம். கடைத் தெருக்களில் மிஞ்சிய சில கட்டடங்களை மீண்டும் கடைகளாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீரமைப்புப் பணிகளை மெல்ல தொடங்கியிருக்கிறார்கள் வணிகர்கள்.

வயநாடு நிலச்சரிவு

வீடும் ஊரும் இருந்த இடத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு போகலாம் என ஒருமாதம் கழித்து சூரல் மலைக்கு வந்திருந்த அலியிடம் பேசினோம். ``29-ம் தேதி மாலை பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஏதே ஆபத்து இருக்கிறது என்று எண்ணி மாலை 6 மணிக்கு மனைவியை அழைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு போய்விட்டேன். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் சொன்னேன் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டு எழுந்து பார்த்தோம். மலையே கரைந்து ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. எல்லா பக்கமும் இருட்டு மட்டுமே. மக்களின் மரண ஓலத்தை காதால் கேட்க முடியவில்லை. மேட்டில் நின்று குலை நடுங்க வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒரு நொடியில் நரகமாக மாறியது. அந்த நொடியை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்குகிறது. ஊர் இருந்த இடத்தில் பாறைகள் மட்டுமே இருக்கிறது. உயிர் தப்பியதை நினைத்து நிம்மதியடைவதா இழந்தவர்களை எண்ணி வேதனையில் தவிப்பதா என்றே தெரியவில்லை" எனக் கண்ணீர் வடித்தார்.

சூரல் மலையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளிடம் பேசினோம். ``மீட்புப் பணிகள் எப்போது முடிவுக்கு வரும் என்று எங்களுக்கே தெரியவில்லை. அழுகிய நிலையில் மீட்கப்படும் உடல் பாகங்கள் மனித உடலா, விலங்குகளின் உடலா என்றுகூட கண்டறிய முடியாத அளவிற்கு நிலைமை இருக்கிறது" என்றனர்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments