Ticker

6/recent/ticker-posts

Ad Code

அன்பு வணக்கம்!

‘மாணவர்களோடு எந்த அளவுக்கு அதிகமாக இணைந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் புத்துணர்வு பெறுவோம்' என்பது மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபணமானது. மஹிந்திரா XUV 3XO கார் குறித்து மோட்டார் விகடன் நடத்திய walkaround workshop-ல் கலந்துகொண்ட மாணவர்கள் அத்தனை பேருமே உற்சாக ஊற்றுகளாக இருந்தார்கள். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் அவர்கள் முன்வைத்த கேள்விகளும், எடுத்துவைத்த வாதங்களும்... மஹிந்திரா ரிசர்ச் வேலியைச் சேர்ந்த பொறியாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதிலும், மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் அமைந்திருக்கும் பல்வேறு பரிசோதனை சாலைகளை அவர்கள் பார்வையிட்டபோது... அவர்கள் வெளிப்படுத்திய ஆர்வம் வியப்படைய வைத்தது.

மஹிந்திரா ரிசர்ச் வேலியில் உள்ள ஒவ்வொரு சோதனை சாலைக்கும் இடையிலான தூரம் கொஞ்சம் அதிகம்தான். என்றாலும், ஒவ்வொரு சோதனை சாலையையும் ஓட்டமும் நடையுமாக அவர்கள் கடந்த விதம் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. இவர்களில் பலர் தென்காசி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், பெங்களூர்... என்று இரவு முழுவதும் பயணம் செய்து வந்தவர்கள். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்கள் உடல் சோர்வை எல்லாம் விரட்டி இருந்தது. அதேபோல, பயிலரங்கம் முடிந்த பிறகும்கூட மாணவர்களில் பலர் மஹிந்திரா ரிசர்ச் வேலியை விட்டு நகராமல் தாங்கள் பார்த்தவற்றையும், புதிதாகத் தெரிந்து கொண்டதைப் பற்றியும் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதில் பாராட்டப்பட வேண்டிய வேறு ஒரு பிரிவினரும் உண்டு. ஆம். பேராசிரியர்கள். 'இப்படி ஒரு பயிலரங்கத்தை மோட்டார் விகடன் ஏற்பாடு செய்திருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. அதனால், இதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்' என்று மாணவர்களுக்கு புரியவைத்து அனுப்பிவைத்தவர்கள் அவர்கள்தான். இன்னும் சில பேராசிரியர்கள் இந்த பயிலரங்கம் குறித்து மோட்டார் விகடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த அறிவுப்புகளை பலரிடம் பகிர்ந்துகொண்டதோடு, கல்லூரியின் வாட்ஸ்ஆப் குழுவிலும் பதிவிட்டிருந்தார்கள்.

அதனால்தான் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய இந்தப் பயிலரங்கத்துக்கு ஆயிரங்களில் மாணவர்கள் பதிவு செய்திருந்தார்கள். அதனால், `ஏன் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விண்ணப்பித்த மாணவர்கள் எழுதியிருந்த பதிலை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பிதழை அனுப்பி வைத்தோம்.

வரும் காலங்களில் இது போன்ற பயிலரங்குகளை மோட்டார் விகடன் தொடர்ந்து நடத்தும். அப்போது இதுபோல இன்னும் பல நூறு மாணவர்கள் இப்பயிலரங்குகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நிச்சயம் பெறுவார்கள்.

- ஆசிரியர்



from Vikatan Latest news

Post a Comment

0 Comments