Ticker

6/recent/ticker-posts

Ad Code

T20 World Cup: 140 கோடி இதயங்களின் வெற்றி - இந்தியா உலகக்கோப்பை வென்ற த்ரில் நிமிடங்கள்!

இந்தியா ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2011க்குப் பிறகு உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியாவுக்கு எத்தனையோ முக்கியமான தருணங்கள் சாதகமாக கைகூடாமல் போயிருக்கின்றன. ஆனால், இந்த முறை போட்டியே கையைவிட்டு சென்றுவிட்டது எனத் தோன்றிய நிலையிலிருந்து மீண்டு வந்து இந்தியா சாதனை புரிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று மிரட்டியிருக்கிறது.
Virat Kohli

ரோஹித் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மார்க்ரமும் நாங்களும் டாஸை வென்றிருந்தால் பேட்டிங்தான் செய்திருப்போம் என்றார். தென்னாப்பிரிக்காவுக்கு சேஸிங் என்றால் கொஞ்சம் உதறல் என்பதுதான் சமீபத்திய ரெக்கார்டுகள் சொல்லும் செய்தி. ஆக, இந்தியாவுக்குச் சாதகமான டாஸ் முடிவாகத்தான் இது தெரிந்தது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ரோஹித்தும் விராட்டுமே ஓப்பனர்களாகக் களமிறங்கினர். ரோஹித்தின் விருப்பம் போல இந்தியா அட்டாக்கிங்காகவே ஆடியது. யான்சென் வீசிய முதல் ஓவரிலேயே கோலி மூன்று பவுண்டரிகளை அடித்தார். மிரட்டலான தொடக்கம். மூன்று பந்துகளையுமே ஸ்லாட்டிலேயே வீசி ஸ்விங் செய்ய முயன்றிருந்தார் யான்சென். ஆனால், பந்து பெரிதாக மூவ் ஆகவில்லை. பாய்ண்ட், லெக், நேராக என மூன்று திசைகளில் பவுண்டரி அடித்தார் கோலி. இரண்டாவது ஓவரையே இடதுகை ஸ்பின்னரான கேசவ் மகாராஜூக்குக் கொடுத்தார் மார்க்ரம். பண்ட், துபே என அட்டாக்கிங்காக ஆடக்கூடிய இடதுகை பேட்டர்கள் பின்னால் இருந்ததால் மகாராஜை முன்பே அறிமுகப்படுத்தினார் மார்க்ரம். இது ஒர்க் அவுட்டும் ஆனது. மகாராஜையும் அட்டாக் செய்யும் மோடில் ரிவர்ஸ் ஸ்வீப்பெல்லாம் ஆடி இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

ஸ்லிப் வைத்து அட்டாக் செய்த மார்க்ரம் ஸ்லிப்பை நீக்கிவிட்டு தற்காப்பு மனநிலைக்கு சென்றார். விடாப்பிடியாக மேலும் அட்டாக் செய்து இன்னொரு ஸ்வீப்பை அடிக்க முயன்று ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார் ரோஹித். இந்தியாவுக்கான முதல் அதிர்ச்சி. பெரிய இடைவெளி இல்லாமல் அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது. ரிஷப் பண்ட்டும் வந்த வேகத்திலேயே எதோ அரைகுறையாக ஷாட் ஆடி மகாராஜிடமே வீழ்ந்தார் பண்ட். இத்துடன் நிற்கவில்லை. பவர்ப்ளேக்குள் மேலும் ஒரு விக்கெட்டை இந்தியா இழந்தது. சூர்யகுமார் யாதவ் ரபாடாவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று 3 ரன்களில் அவுட். பவர்ப்ளேயில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது.

அக்சர் படேல்

அக்சர் புரமோட் செய்யப்பட்டு நம்பர் 5 இல் இறங்கினார். இது ஒரு நல்ல முடிவாக மாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கோலி தனது வேகத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக ஆட தொடங்கினார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அக்சர் படேல் இன்னொரு முனையில் வேகமாக ரன்களை சேர்த்து அசத்தினார். மகாராஜ், ஷம்சி, மார்க்ரம் போன்ற ஸ்பின்னர்களில் பந்துகளிலெல்லாம் பெரிய சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். ரபாடாவையும் விட்டுவைக்கவில்லை. அவரையும் அட்டாக் செய்தார். இந்த உலகக்கோப்பையில் எதிர்பார்த்ததை விட மதிப்புமிக்க ஆட்டங்களை அக்சர் படேல் ஆடியிருக்கிறார். இந்த ஆட்டம் அதில் உச்சம். தொடர்ந்து விக்கெட்டுகள் விழாமல் தடுத்து ரன்ரேட்டையும் உயர்த்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

Axar

ஆனால், துரதிஷ்டவசமாக 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். துபே வந்தார். எப்போதும் திணறும் துபே இன்று தொடக்கத்திலிருந்தே நல்ல டச்சில் இருந்தார். யான்செனுக்கு எதிராகவெல்லாம் சிக்ஸர் அடித்தார். ஏறக்குறைய பந்துக்குப் பந்தாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த கோலியும் வேகமெடுத்தார். ரபாடா வீசிய 18வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 12 ரன்களைச் சேர்த்தார். மிரட்டலான சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்திருந்தார். ரபாடாவின் 18 வது ஓவர்கள் இந்த சீசனின் சிறப்பான விஷயமாக இருந்தது. அந்த கடைசி 3 ஓவர்களுக்குள் அவர் வீசும் ஓவர் மதிப்புமிக்கதாக இருந்திருக்கிறது. பார்ட்னர்ஷிப்களை உடைப்பார். பெரிய விக்கெட்டுகளை வீழ்த்துவார். 6 ரன்களுக்குக் கீழாகத்தான் கொடுப்பார். ஆனால், கோலியின் அதிரடியால் இங்கே ரபாடாவின் ஓவரில் 16 ரன்கள் வந்தன. இதன் விளைவாக அடுத்த ஓவரும் பெரிய ஓவரானது.

யான்சனையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டினார். ஆனால், அந்த ஓவரிலேயே இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று கோலி அவுட். கோலி 59 பந்துகளில் 76 ரன்களை எடுத்திருந்தார். கோலியின் அனுபவம் முழுமையாக வெளிப்படும் வகையிலான பக்குவமான ஆட்டம் இது.
Kohli

இந்தத் தொடர் முழுவதும் ஏமாற்றம் அளித்துக் கொண்டிருந்த கோலி இறுதிப்போட்டியில் பொறுப்பை சுமந்து கொண்டு ஆடியது மெச்சத்தகுந்தது.

இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்களை எடுத்திருந்தது. இந்த மைதானத்திற்கு இது நல்ல ஸ்கோராகத்தான் தெரிந்தது. தென்னாப்பிரிக்கா அணியை உலகக்கோப்பைக்கான சேஸிங்கைத் தொடங்கியது. அவர்களுக்கும் பவர்ப்ளே அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது ஓவரிலேயே ரீஷா ஹென்றிக்ஸை பும்ரா போல்டாக்கி வெளியேற்றினார். கேப்டன் எய்டன் மார்க்ரமை அர்ஷ்தீப் சிங் எட்ஜ் ஆக்கி பண்ட்டிடம் கேட்ச் ஆக வைத்தார். டீகாக் ஒரு முனையில் நின்று ஆடினார். நம்பர் 5 இல் வந்த ஸ்டப்ஸ் வேகமெடுத்தார். ஸ்பின்னர்களை நன்றாக அட்டாக் செய்தார். அக்சர் படேலுக்கு எதிராக பவுண்டரிகளையும் சிக்ஸரையும் குறிவைத்து அடித்தார்.

21 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். டீகாக் + ஸ்டப்ஸ் இணை 58 ரன்களை சேர்த்தனர். அபாயகரமான இணையாக தோன்றியது. ஆனால், அக்சர் படேல் ஸ்டப்ஸை போல்டாக்கி நிம்மதியளித்தார். க்ளாசென் க்ரீஸூக்குள் வந்தார். ஏற்கனவே டீகாக் செட்டில் ஆடியிருந்தார். பென்ச்சில் மில்லர் இருந்தார். இந்த 3 விக்கெட்டுகள்தான் உலகக்கோப்பை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் எனும் நிலை. க்ளாசென் பயமுறுத்த தொடங்கினார். ஹர்திக், குல்தீப், ஜடேஜா என 11-13 மூன்று ஓவர்களில் மூன்று அபாரமான சிக்ஸர்களை பறக்கவிட்டார். டீகாக்கும் வேகமெடுக்க நினைத்தார். ஆனால், யோசனையேயின் பீல்டை அறியாமல் அவுட் ஆகி ஏமாற்றினார். அர்ஷ்தீப் வீசிய 14 வது ஓவரில் ஃபைன் லெக்குக்கும் டீப் ஸ்கயொருக்கும் இடையே மடக்கி ஒரு பவுண்டரியை அடிப்பார் டீகாக். அப்போது ஃபைன் லெக் ஃபீல்டர் வட்டத்துக்குள் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா

இந்த பவுண்டரிக்குப் பிறகு ஃபைன் லெக்கை பின்னால் வைத்தார் ரோஹித். இப்போது பீல்டிங் மாற்றத்தை அறியாமல் மீண்டும் முந்தைய ஷாட்டை போலவே ஆடி ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்தாத் டீகாக். இந்தியா மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. மில்லரும் க்ளாசெனும் கூட்டணி சேர்ந்தனர். தென்னாப்பிரிக்க அணியின் கடைசி பேட்டிங் இணை இது. அதன்பிறகு எல்லாருமே பேட்டிங் ஆடக்கூடிய பௌலர்கள்தான். ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்தது. முக்கியமான இக்கட்டான கட்டங்களில் கோட்டைவிட்டதுதான் தென்னாப்பிரிக்கா இத்தனை நாட்களாக கோப்பையை வெல்லாமல் இருக்க காரணமாக இருந்தது. ஆனால், இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் நெருங்கி வந்து போராடி இக்கட்டான தருணங்களிலெல்லாம் சொதப்பாமல் அவற்றைத் தனதாக்கிக் கொண்டது தென்னாப்பிரிக்கா. இந்தப் போட்டியிலும் அதை சரியாக செய்தது. போட்டி இந்தியா பக்கம் செல்வது போல தெரிகையில், சரியாக ரிஸ்க் எடுத்து ஆடி மில்லர் - க்ளாசென் இணை ஒரு 2 ஓவர்களில் 38 ரன்களை சேர்த்தது.

இதுதான் திருப்புமுனை. குல்தீப் வீசிய 14வது ஓவரில் மில்லர் ஒரு பவுண்டரி சிக்சர் அடித்து 14 ரன்களை சேர்க்க, அக்சர் வீசிய 15 வது ஓவரை க்ளாசென் கிழித்தெடுத்தார். இரண்டு பவுண்டரிகளையும் இரண்டு பெரிய சிக்சர்களையும் அடித்தார். மொத்தமாக 24 ரன்கள் இந்த ஓவரில். இப்போது தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவை. பும்ராவை தவிர வேறு ஆயுதம் இல்லை என்பதால் அவர் கைக்கு பந்து சென்றது. க்ளாசென் மில்லர் இருவருமே ஜாக்கிரைதையாக ஆடினர். விக்கெட் இல்லை. 4 ரன்கள் மட்டுமே வந்தன. இப்போது 4 ஓவர்களில் 26 ரன்கள் தேவை. ஹர்திக் 17வது ஓவரை வீசினார். முந்தைய ஓவரில் பவுண்டரி இல்லை என்பதால் க்ளாசென் முதல் பந்தையே அட்டாக் செய்ய முயன்றார். ஒயிடாக ஸ்லோயர் ஒன்னாக வீசப்பட்ட இந்த பந்தில் அரைசதம் அடித்திருந்த க்ளாசென் எட்ஜ் ஆகி வீழ்ந்தார். முக்கியமான விக்கெட்டோடு இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியா

2 மாதங்களுக்கு முன்பாக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட ஹர்திக் இந்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக செய்திருக்கும் பணி அபாரம். 18 வது ஓவர் மீண்டும் பும்ரா கையில். அவரின் கடைசி ஓவர் இது. இந்த ஓவரில் விக்கெட் விடக்கூடாது என்பதுதான் தென்னாப்பிரிக்காவின் எண்ணம். ஆனால், பும்ராவிடம் அதெல்லாம் பலிக்காதே? ஒரு மிரட்டலான டெலிவரியில் யான்செனை போல்டாக்கி வெளியேற்றினார். அற்புதமான ஓவர் இது. ஆனாலும் மில்லர் இன்னும் க்ரீஸில் இருந்தார். இந்தியாவின் மூன்று மிரட்டலான ஓவர்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை. மில்லர் கையில்தான் எல்லாமே இருந்தது.

இந்தியாவுக்கும் மில்லர் விக்கெட் மட்டுமே தேவை. 19 வது ஓவர் அர்ஷ்தீப் கையில். முதல் 3 பந்துகளை மகாராஜ் எதிர்கொள்ள நான்காவது பந்தில்தான் மில்லருக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. பவுண்டரி எதுவுமே இல்லை. இந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள்தான். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. ஹர்திக் கையில் பந்து. ஹர்திக் ஹீரோ ஆவதற்கான வாய்ப்பு. ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார்.

சூர்யகுமார் கேட்ச்
முதல் பந்தையே ஃபுல் டாஸாக வீசினார் ஹர்திக். மில்லர் சிக்ஸருக்கு முயல, லாங் ஆஃபில் சூர்யகுமார் அசாத்தியமான ஒரு கேட்ச்சை பிடித்தார். ரபாடாவும் கொஞ்சம் அச்சமூட்டினார். ஆனாலும் கடைசிக்கு முந்தைய பந்தில் அவரும் கேட்ச் ஆக தென்னாப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கையும் காலியானது. ஹர்திக் ஹீரோவானார்!

இந்தியா அசாத்தியத்தை நிகழ்த்தியிருக்கிறது. 30 பந்துகளில் 30 ரன்கள்தான் தேவை என்ற இக்கட்டான சூழலிலிருந்து தென்னாப்பிரிக்காவைச் சுருட்டி வரலாறு படைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா மீண்டும் Choke செய்திருக்கிறது. இந்தியாவின் உலகக்கோப்பை கனவு 2011 க்குப் பிறகு மீண்டும் நனவாகியிருக்கிறது. ஏப்ரல் 2, 2011 ஐப் போல ஜூன் 29, 2024 ம் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் மறக்க முடியாத தேதியாக மாறியிருக்கிறது.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments