டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்த்திருக்கிறது இந்திய அணி. கபில்தேவுக்கும் தோனிக்கும் பிறகு உலகக்கோப்பையை வென்ற கேப்டன்கள் எனும் பட்டியலில் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார் ரோஹித் சர்மா. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இனி ரோஹித்தின் பெயரும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும். உலகக்கோப்பையை வாங்கிவிட்டு ரோஹித் பேசிய வெற்றி உரை நெகிழ்ச்சிமிக்கதாக இருந்தது.
ரோஹித் சர்மா பேசியவை இங்கே... "கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அதற்கான ரிசல்ட்தான் இன்று கிடைத்திருக்கிறது. நாங்கள் பல அழுத்தமான போட்டிகளில் ஆடியிருக்கிறோம். சில போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறோம். ஆனால், அவற்றிலிருந்து எங்கள் வீரர்கள் பாடம் கற்றிருக்கிறார்கள். அழுத்தமான சூழல்களில் எப்படி ஆட வேண்டுமென எங்கள் அணிக்குத் தெரியும்.
ஒரு கட்டத்தில் போட்டி தென்னாப்பிரிக்கா பக்கமாகச் செல்வதைப் போல இருந்தாலும் நாங்கள் ஓர் அணியாக இந்தக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் எனத் தீர்க்கமாக இருந்தோம். விராட் கோலியின் ஃபார்மின் மீது யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக அவர் உயர்தரமான கிரிக்கெட்டை ஆடிவருகிறார்.
பெரிய போட்டிகளில் அவர் சாதிப்பார் எனத் தெரியும். அவரைச் சுற்றி மற்ற வீரர்கள் ஆட வேண்டும் என நினைத்தோம். அது நடந்திருக்கிறது. பும்ராவுடன் நிறைய ஆடியிருக்கிறேன். ஆனால், அவர் எப்படி இப்படிச் செயல்படுகிறார் என்பது எனக்குத் தெரியவே இல்லை. அவர் ஒரு க்ளாஸான வீரர்! ஹர்திக் பாண்டியா புத்திக் கூர்மையான வீரர். சிறப்பாகக் கடைசி ஓவரை வீசினார். இந்த அணியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் பெரிய நன்றி!" என்றார்.
ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெல்லும் நான்காவது உலகக்கோப்பை இது. 2011க்குப் பிறகு இப்போதுதான் ஓர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. கூட்டாக ஒரே அணியாக ஒன்றிணைந்து ஆடியதற்குக் கிடைத்த பரிசு இது. வாழ்த்துகள் ரோஹித்! வாழ்த்துகள் இந்தியா!
from Vikatan Latest news
0 Comments