மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்த சந்தேகத்தின்பேரில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, மாலத்தீவு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஃபாத்திமா ஷம்மாஸ், அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக, அவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையின் இறுதியில் பில்லி, சூனியம் வைத்தது தொடர்பாக பல்வேறு பொருள்கள் அமைச்சரின் வீட்டில் கிடைத்ததாக, ஃபாத்திமாவை போலீஸார் கைதுசெய்தனர். இவர், கைதுசெய்யப்பட்டதற்கான முழு விவரங்களை மாலத்தீவு அரசு பகிரங்கமாக வெளியிடப்படாத போதும், அதிபருக்கு எதிராக அமைச்சர் செய்த பில்லி சூனிய செயல்கள் உள்ளூர் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன.
மேலும், அதிபர் அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் ஃபாத்திமாவின் முன்னாள் கணவர் ஆடம் ரமீஸ் மற்றும் இரண்டு பேர் இதில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்களும் தற்போது பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மாலத்தீவைப் பொறுத்தவரையில், பில்லி, சூனியம் ஒரு கிரிமினல் குற்றமல்ல என்றாலும், இது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டனைக்குரியது. இதில், போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
from Vikatan Latest news
0 Comments