Ticker

6/recent/ticker-posts

Ad Code

உயர்கல்வியில் சாதனையா? சோதனையா? `ஆளுநர் Vs அரசு’ - மீண்டும் பற்றிக்கொண்ட பனிப்போர்!

ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்திய ஆளுநர் ரவி, `தமிழ்நாட்டுக்கு தான் ஆளுநராக பொறுப்பேற்றபோது பல்கலைக்கழகங்களின் நிலை மோசமாக இருந்ததாகவும், தற்போது தவறான கல்விக் கொள்கையால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று நிற்பதாகவும்' தி.மு.க அரசை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதேநேரம் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க ஆட்சியில் உயர்கல்வியில் நடத்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

ஊட்டி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி

`மோசமான பல்கலைகள், தவறான கல்விக் கொள்கை!' - ஆளுநர் ரவி

உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ``இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற போது, மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமால் தனித்தனியாக செயல்படுவதையும் கவனித்தேன். இதனால், தரத்தை மேம்படுத்த முடியாமல் பல சவால்களை பல்கலைக்கழகங்கள் எதிர்கொண்டு வந்தன. இவை எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தன. இந்த சிக்கல்களையெல்லாம் சமாளிக்கவும், உயர்கல்வியின் தலைவர்களை ஒருங்கிணைக்கவும்தான் இந்த துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது!" எனத் தெரிவித்தார்.

மேலும், ``சுதந்திரத்துக்கு முன்பு பாரதம் உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தது. அதற்கு காரணம், அப்போது பின்பற்றப்பட்ட கல்விக் கொள்கையே. நம்முடைய `பாரதிய அறிவு அமைப்பு' என்பது நிலையானது அல்ல, ஆனால் தொழில்நுட்பங்களின் சவால்களை எதிர்கொள்ள தரநிலைகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், கற்பித்தல் கற்பித்தல் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இது புதிய கல்விக் கொள்கையின்(NEP) முக்கிய மையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவுக்கான புதிய உயர்கல்வி முறையை அறிமுகப்படுத்தும்.

`கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற திருவள்ளுவரின் குறள், நமது புதிய கல்விக் கொள்கை 2020-கான உத்வேகம் ஆகும். தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். நம்முடைய கல்வி திட்டம் இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன் நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால், அதை நாம் தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதில்காலம் கேள்விகுறியாகிவிடும். ஆகவே, புதிய தேசிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும். அதுதான் நமது எதிர்காலம்!" எனத் தெரிவித்தார்.

ஊட்டி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி

`உயர் கல்வியில் தமிழ்நாடே முன்னணி!' - தமிழ்நாடு அரசு

இந்த நிலையில், தி.மு.க ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளை துறை ரீதியாக பட்டியலிட்டு வரும் தமிழ்நாடு அரசு, உயர்கல்வியில் நடத்தியிருக்கும் சாதனைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித் துறையின் சார்பில் எண்ணற்ற நல்லபல திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் நான் முதல்வன் திட்டம், மாணவிகள் உயர்கல்வியினை தொய்வின்றித் தொடர மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம், மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் உங்களைத் தேடி உயர்கல்வி உள்ளிட்ட பல திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரத்திலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு - ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக்கழகங்களும் 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளும், அதிக அளவிலான மருத்துவக் கல்லுரிகளும், புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அமையப்பெற்று தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்கி தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று இடைநிற்றல் இன்றி உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் 6.9.2022 அன்று தொடங்கப்பட்டு, 2 இலட்சத்து 73 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனடைகின்றனர். இந்தியாவிற்கே வழிகாட்டிடும் இந்த புதுமைப் பெண் திட்டத்தினால் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அமைச்சர் பொன்முடி - ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 2022 -ல் முதல்வரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக இதுவரையில் 27 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் பயிற்சி பெற்ற 1 இலட்சத்து 84 ஆயிரம் இளைஞர்களில் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்று மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது இத்திட்டத்திற்கான மாபெரும் வெற்றி" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news

Post a Comment

0 Comments