Ticker

6/recent/ticker-posts

Ad Code

சொத்து பிரச்னை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் மரணம், மற்றொருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரின் மகன் கருப்பையா(வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கணேசன் குடும்பத்தினரும், மைலி பகுதியை சேர்ந்த பாலமுருகன் குடும்பத்தினரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில், கணேசன்-பாலமுருகன் இருவரின் குடும்பத்தினருக்கும் நீண்டகாலமாக சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சொத்து பிரச்னை காரணமாக கணேசனுக்கும், பாலமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்ததாக கூறப்படுகிறது.

கருப்பையா

இந்த சம்பவத்தில், கணேசன் காயமடைந்த நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். உறவினர் பாலமுருகன் தன்னை தாக்கியது தொடர்பாக திருச்சுழி போலீசில் கணேசன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், கணேசனை பழிவாங்கும் நோக்கில் அவரைத் தேடி திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பார்ப்பதற்காக கணேசனின் மகன் கருப்பையாவும் அங்கு வந்திருக்கிறார். திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வந்த பாலமுருகன், சொத்து பிரச்னையில் ஏற்பட்ட சண்டையில் கணேசன் தன்மீது போலீஸில் புகார் அளித்ததை மனதில்வைத்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பான நிலையில், ஆத்திரமடைந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

கொலை

இதனைக் கண்டு பதறிய கருப்பையா தந்தையை காப்பாற்றுவதற்காக இருவரையும் விலக்கிவிட முற்பட்டுள்ளார். இந்த முயற்சியில் கருப்பையாவுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்து பாலமுருகன் தப்பிச்சென்றுவிட்டார். இதையடுத்து, பலத்த வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த கணேசன், கருப்பையா இருவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அருப்புக்கோட்டை மருத்துவமனையில் கருப்பையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்த கணேசன், தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தக்கொலை சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு தப்பிச்சென்ற பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments