Doctor Vikatan: நுரையீரலை டீடாக்ஸ் செய்வது குறித்து நிறைய யூடியூப் வீடியோக்களில் பார்க்கிறோம். வீட்டு சிகிச்சையாக அப்படி நுரையீரலை சுத்தப்படுத்துவது என்பது உண்மையிலேயே சாத்தியமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி
நுரையீரலில் நச்சுகள் படிவதற்கான காரணங்கள் ஏராளம். உதாரணத்துக்கு புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதன் நச்சுகள் மொத்தமும் நுரையீரலில் படிந்துகொண்டே போகும். சுரங்கங்கள் போன்ற இடங்களிலும், புகை மற்றும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு அந்தச் சூழலில் உள்ள நுண்துகள்கள் நுரையீரலில் படிந்துகொண்டேதான் இருக்கும்.
அப்படி நுரையீரலில் நச்சுகள் படிவதால்தான் சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, ஐஎல்டி எனப்படும் இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ் பாதிப்பு போன்றவை வருகின்றன. அந்த வகையில் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமான நச்சுப் படிமத்தை சிகிச்சை மூலம் நீக்குவது என்பது சாத்தியமே இல்லை.
வருமுன் காப்பது மட்டுமே இதற்கான தீர்வு. தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த சில விதிமுறைகள் இருக்கும். என் 95 மாஸ்க் உபயோகிப்பது, இத்தனை மணி நேரம்தான் வேலை பார்க்க வேண்டும், இத்தனை நாள்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நுரையீரல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சிலிக்கோசிஸ் (Silicosis) மற்றும் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி நியூமோனைட்டிஸ் (Hypersensitivity pneumonitis) போன்ற பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தெரிகின்றனவா என்று பார்க்க வேண்டும்.
அறிகுறிகள் தெரிந்தால் நுரையீரல் திறன் பரிசோதனை
( Pulmonary function tests ) மேற்கொள்ள வேண்டும். நெஞ்சகப் பகுதிக்கான சிடி ஸ்கேன் செய்ய வேண்டும். பாதிப்பு தெரிந்தால் பிரச்னைக்குரிய சூழலில் வேலை பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளவோ, தவிர்க்கவோ வேண்டும்.நுரையீரலில் படிந்த நச்சை நீக்க சரியான தீர்வு இது மட்டும்தான். சாதாரண மக்கள் என்றால் சூழல் மாசு அதிகமுள்ள நேரங்களில் வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கலாம்.
'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' எனப்படும் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளும் வசதி இன்று மொபைல் போனிலேயே இருக்கிறது. குடும்பம் மொத்தமும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் காற்றின் தரக்குறியீட்டைத் தெரிந்துகொண்டு வெளியே செல்வதை, குழந்தைகளை வெளியே விளையாட விடுவதை பற்றியெல்லாம் தீர்மானிக்கலாம். இவையெல்லாம் ஓரளவுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.
சென்னை போன்ற நகரங்களில் சூழல் மாசு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அதுவே டெல்லி போன்ற நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் அங்கே வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இவை தவிர, யோகா, மூச்சுப்பயிற்சி, சத்தான உணவுப்பழக்கம்... இவைதான் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு அடிப்படையே தவிர, நீங்கள் கேள்விப்படுகிற, யூடியூபில் பார்க்கிற நுரையீரல் டீடாக்ஸிஃபிகேஷன் சிகிச்சைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news
0 Comments