Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாம்புத் தீண்டி குழந்தை பலி; 10 கி.மீ தூரம் உடலை சுமந்துசென்ற தாய்; வேலூர் மலைக் கிராமத்தில் சோகம்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப் பகுதிக்குஉட்பட்ட அத்திமரத்துகொல்லையைச் சேர்ந்தவர் விஜி. இவரின் மனைவி பிரியா. இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா. கடந்த 26-ம் தேதி இரவு வீட்டின் முன்பு குழந்தையை தூங்க வைத்துவிட்டு, பெற்றோரும் அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, காட்டுப் பகுதியில் இருந்துவந்த கொடிய விஷப்பாம்பு ஒன்று, குழந்தையை தீண்டி கடித்துவிட்டது.

உயிரிழந்த குழந்தை

குழந்தை திடுக்கிட்டு விழித்து அழுததால், பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது, குழந்தைக்கு அருகில் விஷப்பாம்பு இருப்பதைக் கண்டு பதறிபோயினர். பாம்பைத் துரத்திவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்தனர். ஆனால், சாலை வசதியில்லாத காரணத்தினால், அன்று இரவே 10 கிலோ மீட்டர் தூரம் நடையாய் நடந்து மலை அடிவாரத்தை அடைந்தப் பிறகு அங்கிருந்து வாகனத்தைப் பிடித்து, அணைக்கட்டு அரசு மருத்துவமனையை சென்றடைந்தனர்.

ஆனால், அதற்குள் குழந்தை மரணித்துவிட்டதால், பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பிவைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து, பெற்றோரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் மலை அடிவாரம் வரை குழந்தையின் உடல் கொண்டுசென்று கொடுக்கப்பட்டது.

உடலை சுமந்து சென்ற தாய்

அதற்குமேல் செல்ல பாதை இல்லாததால், ஆம்புலன்ஸ் திரும்பிச்சென்றுவிட்டது. குழந்தையை பறிகொடுத்த நிலையில் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்த தாய் பிரியா, குழந்தையின் உடலை பத்து கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்தபடியே மலைக் கிராமத்தை சென்றடைந்தார். ஊருக்குள் கொண்டுசென்ற பின்னர் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம், மலைக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest news

Post a Comment

0 Comments