Ticker

6/recent/ticker-posts

Ad Code

RCBvKKR: `KGF -ல் ராக்கி பாய் மட்டும் போதுமா?' - அதே ஆர்சிபி அதே பிரச்சனைகள்; என்ன நடந்தது?

எட்டு பேட்டிங் வீரர்களுடன் வரும் அணிகளே வெற்றிக்கு தத்தித் தடுமாறும் நிலையில் இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே மூன்று வீரர்களை மட்டும் நம்பி வந்து கொண்டிருக்கிறது பெங்களூரு. மூன்றில் இரண்டு பேர் நேற்று கொஞ்சம் வேகமாக நடையைக் கட்ட கொல்கத்தாவிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது பெங்களூரு.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முந்தைய ஸ்குவாடுகளில் இருந்து ஒரே ஒரு மாற்றமாக கொல்கத்தா அணியில் கெஜ்ரோலியாவுக்கு பதிலாக வைபவ் அரோரா வந்திருந்தார். டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய்‌ மற்றும் தமிழகத்தின் ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் தந்தனர். சின்னசாமி மைதானத்தின் அளவுகள் ஜேசன் ராய்க்கு மிகவும் பிடித்துப் போக எடுத்த எடுப்பிலிருந்தே பவுண்டரிகள் பறந்தன.

அதுவும் ஆறாவது ஓவர் வீசிய ஷபாஷ் அகமத் ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ரன்களை ஒரே ஓவரில் எடுத்தார் ராய்.
RCBvKKR

ஒரு பக்கம் ராய் அதி வேகத்தில் ரன்கள் எடுக்க மறுபக்கம் ஜெகதீசனோ அமைதியின் உருவமாய் ஆடினார். வேகமாக ஆடி பந்துக்கு எதுவும் வலித்து விடுமோ என்று எண்ணி அத்தனை அழகாக பந்தை தட்டிக் கொண்டிருந்தார். சின்னசாமி மைதானத்தில் அதுவும் பவர்பிளேயில் இறங்கி, அதுவும் பெங்களூர் பந்துவீச்சாளர்களை சந்தித்து 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் ஜெகதீசன். அன்னை தெரேசா போல அமைதியை விதைத்து விட்டு ஜெகதீசன் அவுட் ஆக அவருக்கும் சேர்த்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அடிக்க நினைத்து அவுட் ஆனார் ராய்.

அதன் பிறகு வெங்கடேஷ் மற்றும் கேப்டன் ராணா இணைந்தனர். ராணா இரண்டு ரன்களில் இருக்கும்போதே மிக சுலபமான கேட்ச் வாய்ப்பு ஒன்றை கொடுத்தார். சிராஜ் அதை பிடிக்கவில்லை. அடுத்து சிராஜ் ஓவரிலேயே மற்றொரு வாய்ப்பையும் கொடுத்தார் ராணா. அதையும் பெங்களூர் பிடிக்கவில்லை. எங்கு ராணா அவுட் ஆனால் ரசல் வந்து பேயாட்டம் ஆடிவிடுவாரோ என்று நினைத்தார்களோ என்னமோ... கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கொல்கத்தாவை வாழவைத்து அழகு பார்த்தது பெங்களூரு.

ரசல் வரும் வரை எல்லாம் நேரமில்லை என்று ஆட்டத்தை தன் கையில் எடுத்தார் கேப்டன் ராணா. ஹர்சல் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள், விஜயகுமார் ஓவரின் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என ரன்களை பெங்களூரு தட்டு இட்லி மீது தூவப்படும் பொடி போல சின்னசாமி மைதானத்தின் அத்தனை பக்கங்களிலும் தூவிவிட்டார் ரானா. இருந்தாலும் ஹசரங்கா பதினெட்டாவது ஓவரில்‌ ராணா மற்றும் வெங்கடேஷ் என இருவரையும் அடுத்தடுத்து அவுட் ஆக்க, கொல்கத்தா சற்று தடுமாறியது. ஆனால் கொல்கத்தாவின் சூப்பர் ஸ்டார் ரிங்க்கு சிங் மற்றும் நமீபியா அணியின் வீசா இருவரும் இணைந்து கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் எடுக்கவும் கொல்கத்தா சரியாக 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது.

200 ரன்களை துரத்திய பெங்களூரு மிகச்சிறப்பாக பவர்பிளேயை ஆரம்பித்தது. முதல் இரண்டு ஓவர்களிலேயே 30 ரன்கள் வந்தது பெங்களூருக்கு. அதிலும் இரண்டாம் ஓவரில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்த உமேஷ் எல்லாம் ஆட்டம் முடியும் வரை அடுத்து பந்து வீசவே இல்லை. டூப்ளெசிஸ் மற்றும் கோலி என இருவருமே தனியாக ஆட்டத்தை முடிக்கும் அளவுக்கு இன்னிங்ஸை ஆரம்பித்தனர். ஆனால் மூன்றாவது ஓவரில் சுயாஷ் பந்தில் டூப்ளெசிஸ் ஆட்டமிழந்தார். தான் வீசிய அடுத்த ஓவரிலேயே ஷபாஷ் அகமதையும்‌ அவுட் ஆக்கினார் சுயாஷ். ஆறாவது ஓவரில் மேக்ஸ்வெலும் அவுட் ஆக பெங்களூருவின் பிரதான மூன்று பேட்டர்களில் இரண்டு பேட்டர்கள் வேகமாக வெளியேறிவிட்டனர்.

KGFல் G மற்றும் F சீக்கிரம் கிளம்பியதும் K மட்டும் களத்தில் இருந்தார்.‌ கோலியின் பலவீனத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த கொல்கத்தா அணியினர் தொடர்ந்து ஸ்பின்னர்களுக்கே ஓவர்களை வழங்கினர். கேப்டன் ராணா கூட ஒரு ஓவரை வீசினார்.

லோம்ரோர் மூன்று சிக்சர்கள் அடித்து அசத்தினாலும் சரியான நேரத்தில் அவரை அவுட் ஆக்கினார் வருண். ஒரு கட்டத்தில் 15 பந்துகளின் 30 என்று இருந்த கோலி ஸ்பின்னர்கள் வந்தவுடன் அடுத்த 22 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.‌ இதை ஈடு செய்ய ரசல் ஓவரில் அடிக்க நினைத்து வெங்கடேஷின் அற்புதமான கேட்ச் காரணமாக‌ 54 ரன்களில் அவுட் ஆனார் கோலி‌.

இதன் பிறகு வழக்கமான பெங்களூரு கதை தான். மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், பிரபுதேசாய், ஹசரங்கா என அனைவரும் சொதப்பினர்.‌ அதிலும் பிரபுதேசாய் ரன் அவுட் ஆன போதெல்லாம் எந்த ஒரு பெங்களூர் ரசிகரும் களத்திற்குள் புகுந்து தினேஷ் கார்த்திக்கின் சட்டையை பிடிக்காதது எல்லாம் பொறுமையின் உச்சம். முக்கியமான நேரத்தில் எல்லாம் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த‌ பெங்களூரு 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மீண்டும் ஒருமுறை கோலி மேக்ஸ்வெல் மற்றும்டூ ப்ளெஸ்சிஸ் ஆகிய மூவரில் இருவர் வேகமாக அவுட் ஆகிவிட்டால் பெங்களூரு நிலை பரிதாபம் தான் என்பதை எதிரணிகளுக்கு உணர்த்தியுள்ளது‌. இந்த மூவரைக் கடந்து மற்றொருவர் கடைசி வரை நின்று எதாவது ஒரு போட்டியில் வென்று கொடுத்தால் தான் ஈ சாலா கப் நம்தே என்பதையெல்லாம் நினைத்து பார்க்க முடியும்.


from Latest news

Post a Comment

0 Comments