இந்தியாவில் ஒருபக்கம் தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில், மறுபக்கம் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவித்துக்கொண்டே இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி தகவலின்படி, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்நிய செலாவணி இருப்பில் 6 சதவிகிதமாகத் தங்கத்தின் பங்கு இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இது 7.85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது மார்ச், 2020-ல் 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பாக இருந்தது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு ரூ.3.75 லட்சம் கோடி ஆகும்.
இது குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர், ``பெரும்பாலும் வெளிநாடுகளோடு வர்த்தகம் செய்ய நாம் டாலரைத்தான் பயன்படுத்துவோம். அதற்கேற்ப அந்நிய செலாவணியில் நாம் டாலர்களைப் பெருக்குவோம். ஒருவேளை இந்த டாலர் மதிப்பு வீழ்ந்தால் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய தங்கம் பெரிதும் உதவும். ஒரு தனி மனிதன் தன் தேவைக்கேற்ப நிலத்தில், தங்கத்தில்... எனப் பலவற்றில் முதலீடு செய்வதுபோல, இந்திய ரிசர்வ் வங்கியும் தனது வர்த்தக பாதுகாப்புக்காகத் தங்க கையிருப்பை அதிகரித்து வருகிறது.
மேலும் உள்நாட்டு மக்களின் தேவைக்காகவும் தங்கத்தை அரசு தான் கொள்முதல் செய்கிறது. இதுவும் தங்கம் கையிருப்பு அதிகரிப்புக்கு ஒரு காரணம் ஆகும். இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். கடந்த ஆண்டு அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக தங்கம் என்பது அனைத்து நாடுகளுக்குமான பொதுவான கரன்சி என்று கூறலாம். மேலும், இதன் மதிப்பு அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. ரஷ்யா போன்ற நாடுகள் டாலரை ஏற்காவிட்டாலும் தங்கத்தை ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
from Latest news
0 Comments