ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும், பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மத்திய பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்துவிட்டதாக மத்திய அரசு கூறிவருகிறது.
“பிரிவு 370 நீக்கப்பட்ட நடவடிக்கை, அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய அடியாகும்” என்று மத்திய உள்துறை அமித் ஷா கூறுகிறார். ஆனாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படையினரும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 750 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், தீவிரவாதிகளின் தாக்குதல்களால் பாதுகாப்புப்படையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைந்திருக்கின்றன என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இப்படியான தகவல்கள் ஆட்சியாளர்களின் தரப்பிலிருந்து தொடர்ந்து சொல்லப்பட்டாலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய உதாரணம் பூஞ்ச் தாக்குதல். பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொதுவாகவே, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றால், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் மத்திய அரசு, பூஞ்ச் தாக்குதலில் அமைதி காப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
பூஞ்ச் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தாக்குதலைக் கண்டிக்காமல் பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது. ஏப்ரல் 20-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரான பவன் கெரா, “பூஞ்ச் தாக்குதல் நடந்து ஒரு வாரம் கழிந்த பிறகும், அது குறித்து ஒரு வார்த்தையைக்கூட பிரதமர் மோடி உதிர்க்கவில்லை. ஆனால், ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதாக குரூரமான நகைச்சுவையை பிரதமர் உதிர்க்கிறார். பூஞ்ச் தாக்குதலை அவர் கண்டிக்கவில்லை. அந்தத் தாக்குதலில் தாலிபன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்த பிறகும்கூட, அது பற்றி எதுவும் பிரதமர் தெரிவிக்கவில்லை” என்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், உடனடியாக அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அங்குள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையாக இருந்துவருகிறது. ஆகவே, ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போவது சொல்லிவருகிறது.
ஆனால், அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்று ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துவருகிறார்கள். அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, மக்கள் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டால், உண்மையான அமைதி அங்கு திரும்ப வாய்ப்பு இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
from Latest news
0 Comments