கூகுள் மீது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால், டிஜிட்டல் பொருளாதாரத்தின் 'மோனோபலி'-ஆக இருக்கும் கூகுளைத் தடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் கொண்டுவந்த கட்டண விதிமுறையை ஆட்சேபித்து மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை 'மனசாட்சியற்றது' என்று தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தனக்கு உள்ள செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தியாவில் பெருமளவிலான மக்கள் ஆண்ட்ராய்ட் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆப் டெவலப்பிங் நிறுவனங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக கூகுளை சார்ந்துதான் இருக்கிறார்கள். இந்த நிலையில், கூகுள் பிளேஸ்டோரில் உள்ள செயலிகள் மூலமாக நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் கூகுள் பில்லிங் சர்வீஸ் மூலமாக நடக்க வேண்டும் என்றும், அவ்வாறு கூகுள் பில்லிங் சர்வீஸ் மூலம் பரிவர்த்தனை செய்யாத செயலிகள் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கப்படும் என்றும் கூறிவருகிறது.
இதில் சிக்கல் என்னவெனில், சிசி அவென்யு, பில்டெஸ்க் போன்ற மூன்றாம் தரப்பு பரிவர்த்தனை முறைகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக் கட்டணம் என்பது 2% -3% எனும் அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனால், கூகுள் பில்லிங் சர்வீஸ் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு 11% முதல் 26% வரையிலும் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வளவு அதிகமான கமிஷனை கூகுள் எடுத்துக்கொண்டால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்ட முடியும், தொடர்ச்சியாக தொழில் செய்ய முடியும் என்பதுதான் முக்கியமான பிரச்னை.
கூகுளின் பில்லிங் சர்வீஸைப் பயன்படுத்தாத செயலிகளை கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எதிர்த்து மேட்ரிமனி டாட்காம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் "கூகுள் பில்லிங் சேவையைப் பயன்படுத்த கட்டாயப்படுத்துவதும், அதற்கு இணங்காத செயலிகளை ப்ளேஸ்டோரிலிருந்து நீக்குவதும் மனசாட்சியற்றது" என்று கூறியுள்ளது.
மேலும் கூகுள் பில்லிங் நடைமுறைக்கு இணங்காததற்காக மேட்ரிமோனி டாட்காம் செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இது இந்திய ஸ்டார்ட் அப்களின் சார்பாக மேட்ரிமோனி டாட்காம் நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
இது குறித்து மேட்ரிமோனி டாட்காம் நிறுவனத்தின் சிஇஓ முருகவேள் ஜானகிராமனிடம் பேசினோம். "நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு என்பது மேட்ரிமோனி நிறுவனத்துக்கு கிடைத்துள்ள இடைக்கால நிவாரணம் ஆகும். இந்த வழக்கு மேட்ரிமோனி நிறுவனம் சார்பாக தொடுக்கப்பட்டது. எங்களைப் போல, இன்னும் சில நிறுவனங்களும் நீதிமன்றத்தை அணுகி வருகின்றன. அவர்களுக்கும் நீதிமன்றம் இடைக்கால நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கூகுள் நிறுவனத்தின் கட்டணக் கொள்கையானது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியாகும். பயனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்று பில்லிங் முறைகளை வழங்காமல் கூகுள் தனது பில்லிங் முறையைக் கட்டாயப்படுத்துவதும், அதற்கு 11% முதல் 26% வரை அநியாயக் கட்டணம் பிடிப்பதும் நியாயமற்றது. இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவையும் கூகுள் செவி சாய்க்கவில்லை. கூகுள் தனது சட்டவிரோத கட்டணக் கொள்கையை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
தற்போது நீதிமன்றம் உத்தரவு அறிவித்துள்ள இந்த இடைக்கால நிவாரணம் என்பது நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறோம். கூகுள் நிறுவனம் தனது ஏகபோக நடவடிக்கையை நிறுத்தும்வரை சட்டபூர்வமாகப் போரடுவோம்" என்று முருகவேள் ஜானகிராமன் கூறினார்.
கூகுள் நிறுவனம் இனி தனது விதிமுறைகளை மாற்றும் என்று எதிர்பார்ப்போம்!
from Latest news
0 Comments