Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருச்சியில் நாளை தொடங்குகிறது மாபெரும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023'... அனைவரும் வருக..!

உலக அளவில் விவசாயத் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள், கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், விகடன் குழுமம் நடத்தும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2023’ எனும் பிரமாண்ட வேளாண் கண்காட்சி ஏப்ரல் 28-ம் முதல் 30-ம் தேதி வரை 3 நாள்கள் திருச்சியில் நடைபெற உள்ளது.

பசுமை அக்ரி எக்ஸ்போ

இந்தக் கண்காட்சிக்குத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், அபிடா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. ஆனந்தா விவசாய தீர்வகம் நிறுவனமும் இணைந்துள்ளது. எப்போதும் பசுமை விகடன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு அளித்து வரும் விவசாயிகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பசுமை அக்ரி எக்ஸ்போ-2023

3 நாள்களும் வெவ்வேறு தலைப்புகளில் வேளாண் வல்லுநர்கள்,  நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உரையாற்றும் கருத்தரங்கு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. செவிக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் கண்காட்சி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதல்நாள் - ஏப்ரல் 28 :

முதல்நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 28 அன்று சிறப்பு அழைப்பாளராக...  

  • விவசாயி மற்றும் திரைக்கலைஞர் கருணாஸ்

  • வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடாவின் கூடுதல் பொது மேலாளர் &  மண்டல இயக்குநர் ஷோபனா குமார்

  • வெள்ளாட்டுப்பால் விற்பனையில் மாதம் ரூ.4 லட்சம் லாபம் ஈட்டும் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட விவசாயி ஸ்ரீனிவாஸாச்சார்யா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

விவசாயி, ஏற்றுமதியாளர், வழிகாட்டியாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து `உலகம் போற்றும் முருங்கை' என்ற தலைப்பில் முருங்கை விதை முதல் விற்பனை வரை விளக்கி பேச இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி செம்மர விவசாயி, செம்மரச் செம்மல் ஆர்.பி.கணேசன், `செம்மர வளர்ப்பில் கோடிகளில் லாபம்’ குறித்து பேசுகிறார்.

இரண்டாம் நாள் - ஏப்ரல் 29 :

இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 29 அன்று, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பதிவாளர், முனைவர் பா.டென்சிங் ஞானராஜ். `லாபகரமான கால்நடை பண்ணைக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகம்!’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.வெங்கடாசலம், விவசாயம் நேற்று, இன்று, நாளை என மாறிவரும் தொழில் நுட்பங்கள் குறித்தும், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நுட்பங்கள் குறித்தும் பேசுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, நலம் தரும் நல்மருந்துகளும் நல்வாழ்வியலுக்கான வழிமுறைகளும் குறித்துப் பேசுகிறார்.

`கடனில் மூழ்கிய ரசாயன விவசாயி, இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற்ற பாடம்’ என்ற தலைப்பில் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி தன்னுடைய வெற்றி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

தஞ்சாவூர், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் அ.உதயகுமார், லாபத்தை அள்ளித் தரும் அசத்தலான வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்து பேசுகிறார்.

பசுமை அக்ரி எக்ஸ்போ-2023

மூன்றாம் நாள் - ஏப்ரல் 29 :

மூன்றாம் நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 29 அன்று, திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் உதவிப் பேராசிரியர் பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் `பூச்சிகளும் நண்பர்களே!” என்ற தலைப்பில் பேசுகிறார்.

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் குறித்து தஞ்சாவூர், மரபுசார் மூலிகை மருத்துவ ஆய்வு மையம், முன்னாள் துறைத்தலைவர் முனைவர் புண்ணியமூர்த்தி பேசுகிறார்.

வீட்டுத்தோட்டம் போடலாம் வாங்க! என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர், பிரியா ராஜ்நாராயணன் பேசுகிறார். மேலும், விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்து நேரடி செயல்விளக்கம் நடைபெறும்.

அன்புடன் அழைக்கிறோம்...

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்து செல்லும் தொலைவில் உள்ளது கலையரங்கம். காலை 10மணி முதல் இரவு 7.30 வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30 மாணவர்களுக்கு ரூ.15 ஆகும். விவசாய பெருமக்கள், பொதுமக்கள் அனைவரையும் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.



from Latest news

Post a Comment

0 Comments