கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் 2021-ம் ஆண்டு ஏ.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, 'யுனிசெல் காயின்' என்கிற திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டத்தின்கீழ் முதலீடு செய்தால், அந்தப் பணத்தை ‘கிரிப்டோகரன்சி’களில் முதலீடு செய்து, 100 சதவிகித லாபம் பெற்று, முதலீட்டுப் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக, ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு... மக்களிடம் முதலீடுகளைப் பெற்றிருக்கிறார்.
இந்த நிறுவனத்துக்கு முகவர்களாக நந்தகுமார், சீனிவாசன், சங்கர், பிரகாஷ், வேலன் ஆகிய ஐந்து பேரை நியமித்திருந்தார். ஆரம்பத்தில் முறையாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த இந்த நிறுவனம், திடீரென முதலீட்டாளர்களுக்குப் பணத்தை முறையாகச் செலுத்தவில்லை. இது குறித்து வாடிக்கையாளர்கள் முகவர்களிடம் கேட்டபோது, அருண்குமார் முதலீட்டுத் தொகையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக, முகவர்கள் தெரிவித்ததால், ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் 2022, செப்டம்பர் மாதம் 67 கோடி ரூபாய்க்கு மேல் அருண்குமார் மோசடி செய்ததாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி-யிடம் புகாரளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் ஏ.கே.டிரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார், முகவர்கள் ஐந்து பேர்மீது வழக்கு பதிவுசெய்து, முதற்கட்டமாக முகவர்கள் ஐந்து பேரை கடந்த ஆண்டு கைதுசெய்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே நிலம் வாங்குவதற்காக அருண்குமார் தன் குடும்பத்துடன் செல்வதாக, முதலீட்டாளர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. முதலீட்டாளர்கள் வேப்பனப்பள்ளிக்குச் சென்றபோது அங்கிருந்து அருண்குமார் காரில் தப்பியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்த நிலையில், ஓசூர் அருகேயுள்ள பாகலூரில், அருண்குமாரின் காரை மடக்கிய போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அவரிடமிருந்து, 16 லட்சம் ரூபாய், 12 பவுன் தங்க நகைகள், சொகுசு காரைப் பறிமுதல்செய்தனர். மொத்தம், எத்தனை கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது, மோசடி செய்யப்பட்ட பணம் எங்கே என அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.
from Latest news
0 Comments