Ticker

6/recent/ticker-posts

Ad Code

`எங்களுடைய தவறில்லை என ஒதுங்கியிருக்கலாம், ஆனால்..!' - கால்பந்து வீராங்கனை மரணம் குறித்து அமைச்சர்

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சலவை இயந்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “அமைச்சர் சுப்பிரமணியன் அவருடைய துறையை மிகச் சிறப்பாக செய்யப்படுத்திட்டு இருக்காரு. இன்னைக்கு காலையில்கூட 6 மணிக்கு எழுந்திரிச்சி கல்லணை வரை ஓடிவிட்டு, அங்கிருந்த மக்களைச் சந்திச்சி ‘மக்களைத் தேடி மருத்துவம் உங்களுக்கெல்லாம் சரியாகக் கிடைக்கிறதா’ என வீடு வீடாகக் கேட்டுட்டு வந்துருக்காரு. கடந்தாண்டே பல் மருத்துவக் கல்லூரியும், ஆயுர்வேதக் மருத்துவக் கல்லூரியும் திருச்சிக்கு வேணும்னு சட்டமன்றத்தில் கேட்டிருந்தேன். உங்களுடைய நிதிநிலை அறிக்கையில் மட்டும் சும்மா அதை சேர்த்துவிடுங்க. தலைவர்கிட்ட பேசி அதுக்கான பணத்தை நான் வாங்கிக்குறேன்" என்றவர், ``ஏன்யா… எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் உங்களோட தொகுதிக்கு ஏதாவது ஆஸ்பத்திரி வேணும்னா, அமைச்சர்கிட்ட இப்பயே கேட்டு வாங்கிக்குங்க" என எம்.எல்.ஏ-க்களைப் பார்த்துச் சொல்ல கூட்டம் கலகலத்தது.

அறுவை சிகிச்சை அரங்கினுள் வைக்கப்பட்ட செக்லிஸ்ட்

அதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இரு மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக அண்மையில் பிரியா என்கிற 17 வயது கல்லூரி மாணவி உயிர் பிரிய மருத்துவத்துறை காரணமாக இருந்தது. இது எங்களுடைய தவறு இல்லை என நாங்கள் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம், ‘எதிலும் வெளிப்படைத் தன்மையும், நேர்மையான அணுகுமுறையும் இருந்தால்தான், அது இந்தத் துறையை மேம்படுத்தும்’ என எங்களுடைய துறைக்கு முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். உடனே மருத்துவர் குழுவினை நியமித்து, அறிக்கையின் அடிப்படையில் இரு மருத்துவர்கள் பணியிட நீக்கம் செய்ததோடு, துறைரீதியாக நடவடிக்கையும் அவர்கள்மீது எடுக்கப்பட்டது. மேலும், இதுபோன்று இனி தமிழகத்தில் நடைபெறக்கூடாது என்கின்ற வகையில், உடனடியாக தமிழகத்தில் இருக்கின்ற 5,340 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மருத்துவக் கையேடு ஒன்றை வழங்கினோம். அதில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும் என்னென்ன விதிமுறைகளைக் கடைபிடிப்பது, ஆபரேஷனுக்கு முன், ஆபரேஷனுக்குப் பின் ஆபரேஷன் தியேட்டரை எப்படி கையாள்வது என்பதை ஒரு செக்லிஸ்டைப் போல உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். இந்தியாவில் இப்படியான சிஸ்டம் வேறு எங்கும் இல்லை. மேலும், அறுவை சிகிச்சை அரங்கில் பெயர்ப் பலகை போன்ற செக்லிஸ்ட் போர்ட் ஒன்றினை இன்றைக்கு திருச்சியில் திறந்து வைத்திருக்கிறோம். அதில், அறுவை சிகிச்சை அரங்கினுள் கையுறை, ஊசிகள், பிளேடு போன்ற என்னென்ன மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் இதுதான் முதன்முறை. ஆபரேஷன்களால் இனி உயிரிழப்பு இருக்கக்கூடாது. 1,649 அறுவை சிகிச்சை அரங்குகளில் இதுபோன்ற டிஸ்பிளே போர்ட்ஸ் வைக்கப்பட இருக்கின்றன” என்றார்.



from Latest News

Post a Comment

0 Comments