Ticker

6/recent/ticker-posts

Ad Code

காலையில் சஸ்பெண்ட்... மாலையில் ஆக்‌ஷன் ரிவோக்! - ரூபி மனோகர் மீதான நடவடிக்கையின் பின்னணி என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15-ம் தேதி நடைபெற்றது. அப்போது ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும், ரஞ்சன் குமார் தலைமையில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கடந்த 24-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து இருவரும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறி கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதில் ரூபி மனோகரன் கலந்துகொள்ளவில்லை. ரஞ்சன் குமார் மட்டுமே வந்தார்.

ரூபி மனோகரன்

விசாரணைக்குப் பிறகு பேட்டியளித்த ரஞ்சன் குமார், "என்மீது நேரடியாக யாரும் புகார் அளிக்கவில்லை. இந்த பிரச்னைக்குப் பின்னால் செல்வப்பெருந்தகை இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

பின்னர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், 'உங்கள் கருத்துக்கள் ஏற்கக்கூடியதாக இல்லை. அடுத்தக் கூட்டத்தில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள்" எனக் கூறப்பட்டிருந்தது.

ரஞ்சன் குமார்

இந்த பிரச்னை காலையில் முடிந்த நிலையில், மாலையில் சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வெளியிட்ட அறிக்கையில், "சஸ்பெண்ட் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அறிக்கை நீதிக்கு எதிராக இருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த விவகாரத்தில் வேறு எந்த நடவடிக்கை எடுப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தன்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், மேற்கொண்டு இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் ரூபி காய் நகர்த்தியிருக்கிறார். இதன் பின்னணி குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விவரமறிந்தவர்களிடம் விசாரித்தோம்.

கே.எஸ். அழகிரி

நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், ``அழகிரி விரைவில் மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படவிருக்கிறார். அதற்குள் அழகிரி 'கெத்து' காட்டுவதற்காக ரூபியை இடைநீக்கம் செய்திருந்தார். முன்னதாக பாரத் ஜோடோ யாத்திரைக்கான செலவில் குறிப்பிட்ட பகுதியை ரூபி தான் வழங்கியிருக்கிறார். எனவேதான் டெல்லி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் ரூபியும் கெத்து காட்டி வருகிறார்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த ரூபி மனோகரன், ``காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடைக்கோடி தொண்டனுக்கு காலையில் கிடைத்த தண்டனையை அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாலையிலேயே தீர்த்து வைத்து மாபெரும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தலைமை எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும், என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருப்பதால்தான் உடனடி தீர்வு கிடைத்திருக்கிறது" என்றார்.



from Latest News

Post a Comment

0 Comments